Non Communicable Diseases : தொற்றா நோய்களை கட்டுக்குள் கொண்டுவர அரசும், மருத்துவர்களும் என்ன செய்ய வேண்டும்?
Non Communicable Diseases : தொற்றா நோய்களை கட்டுக்குள் கொண்டுவர அரசும், மருத்துவர்களும் என்ன செய்ய வேண்டும்?

சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்,மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபின், தொற்றா நோய்களின் சிகிச்சைக்கான மருந்து செலவு 3 மடங்கு உயர்த்ததுள்ளதாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தமிழகத்தில் ஆகஸ்டு, 2021ல் அறிமுகப்படுத்தபட்டபின், அதன் களப் பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று மக்களின் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை அளவை அளந்து பார்த்ததன் விளைவாக, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் மருந்து மற்றும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால் மருந்து வாங்குவதற்கான செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2020-21ல் நகர்புற மற்றும் கிராமப்புற தொற்றா நோய்களுக்கான மருந்து செலவு 35 கோடியாக இருந்தது.
2021-22ல் அது 52 கோடியாக அதிகரித்தது.
2022-23ல் அது 90.10 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது.
2024ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி புள்ளிவிவரப்படி, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக மருத்துவ சேவை பெற்றுள்ளனர் என்றும், 3.7 கோடி பேர் தொடர்ந்து பலமுறை மருந்து சிகிச்சையும் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அரசுத்துறையில்,1.08 லட்சம் படுக்கை வசதிகள், 20,000 மருத்துவர்கள், 38,000 செவிலியர்கள் மருத்துவ சேவை புரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய புள்ளிவிவரங்கள் -
தமிழகத்தில் தொற்றா நோய்களின் காரணமாக 70 சதவீதம் இறப்புகள் நிகழ்கிறது. அதில் இரதய நோய்களின் பங்களிப்பு மட்டும் 36 சதவீதம். (சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவை பிற முக்கிய தொற்றா நோய்கள்)
தொற்றா நோய்களின் காரணமாக ஏற்படும் DALY-Disability Adjusted Life Years-65.3 சதவீதம்.
இதில் இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக செல்லாத நோய்களால் ஏற்படும் DALY-14 சதவீதம்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மட்டுமே புதிதாக சிகிச்சையில் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
ஆனால் இவை இரண்டும் வாழ்வியல் மாற்ற நோய்களாக (Life style Disorders) இருக்கின்றன. அப்படி எனில் சிகிச்சையில் மருந்தின் பங்கு சிறு அளவில் இருந்தாலும், வாழ்வியல் மாற்றங்களையும் சிகிச்சையின்போது கணக்கில் கொள்ளப்படாமல் போனால் பெருமளவு பலன்கள் கிடைக்காது.
மருந்து மற்றும் மாத்திரை செலவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஒருபுறம் இருக்க, வாழ்வியல் மாற்றங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனில் இறப்பை பெருமளவு குறைக்க முடியாது.
வாழ்வியல் மாற்றங்கள் -
புகை மற்றும் மதுவை கட்டுப்படுத்துவது
தேவையான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி (இந்த 2 நோய்களை கட்டுப்படுத்த மிக அவசியம்.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தால் நோயாளிகளின் உடற்பயிற்சி மருத்துவமனைக்கு நடந்து செல்வது தவிர்க்கப்படுவதால் உடற்பயிற்சி கணிசமாகக் குறையும் அபாயம் உள்ளது. மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கு மாற்றாக, நோயாளிகளுக்கு மிக அருகில் இருக்கும் துணை சுகாதார மையங்களை மேம்படுத்தினால் தினமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அவர்களுக்கு அருகாமையிலேயே கிடைக்கும்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தால் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சிகிச்சை (மாத்திரை மட்டும்) கிடைக்கும்.
தமிழகத்தில் 2017ல் IIT-Chennai ஆய்வில் (கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்தப்பட்டது) துணை சுகாதார நிலையங்களில் சேவையை மேம்படுத்தினால், மக்கள் தன் சொந்த செலவில் சுகாதாரத்திற்கு செலவிடுவது கணிசமாக குறையும் என்பது தெரியவந்துள்ளது. இத்திட்டத்தை தமிழக அரசு ஏன் நடைமுறைப்படுத்தி, மாதம் ஒருநாள் சிகிச்சை (மக்களைத் தேடி மருத்துவம்) க்கு பதில் தினமும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது?
உணவு முறை மாற்றம்
மாவுச்சத்து நிறைந்த அரிசிக்கு (இதனால் சர்க்கரை நோய் வாய்ப்பு அதிகமாகிறது) பதில் அனைத்து விதத்திலும் நன்மை பயக்கும் சிறுதானியங்களை (நார்சத்து அதிகம்) அரசு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் அளித்தால் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், அதிக கொழுப்பு போன்ற பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும்.
மேலும், உணவில் உப்பின் அளவு நாளொன்றுக்கு 5 கிராமிற்கு மிகாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
அதிக கொழுப்பு உள்ள துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். அதை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள் தேவையாக உள்ளது.
அதிதீவிர பதப்படுத்தப்பட்ட (Ultra Processed Food) உணவுகள் அதிகமுள்ள நொறுக்குத்தீனிகளை தவிர்க்க நடவடிக்கைகள் வேண்டும்.
காற்று மாசுபாடு அதிகம் காரணமாகவும், சர்க்கரை நோய், இதய பிரச்னைகள் வரும் என்பதால் அவற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சிகிச்சையின்போது கட்டுக்குள் இருக்கவேண்டும் என இருந்தும் அதுநடைமுறையில் இல்லை.
தமிழகத்தில் 4 சதவீதம் பேருக்கும், இந்திய அளவில் 3.4 சதவீதம் பேருக்கு மட்டுமே ரத்தக்கொதிப்பின் அளவு சிகிச்சையின்போது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.
எனவே, மாத்திரை கொடுப்பது மட்டும், அதற்கான செலவு அதிகரித்திருப்பது மட்டும் போதாது. நோய்கள் கட்டுக்குள் இருந்ததா? என ஆய்வுகள் செய்து அதை உறுதிபடுத்த வேண்டும்.
சமீபத்தில் அமெரிக்காவில் செய்த ஆய்வில், தெற்காசிய மக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு விகிதம் 26 சதவீதம் என அதிகமாகவும், வெள்ளை அமெரிக்கர்களுக்கு அது 6 சதவீதம் மட்டுமே இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்பட்ட போது, ஆசியர்களுக்கு ஈரல், வயிற்றின் உறுப்புகளில் (Visceral fat) தசைப் பகுதிகளில் கொழுப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், சர்க்கரை நோய் பாதிப்பு இல்லாதவர்களிடம் கூட இன்சுலின் ஹார்மோனின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்தன்மையும் (Insulin Resistance), இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களின் செயல்பாட்டில் குறைப்பாடுகள் (Pancreatic beta cell dysfunction) இருப்பதும் தெரியவந்துள்ளது.
எனவே, தொற்றா நோய்களின் சிகிச்சைக்கு மருந்து மற்றும் மாத்திரையை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், மற்ற வாழ்வியல் மற்றும் சூழல் காரணிகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் தான் சிறந்த பலன்கள் கிட்டி மக்கள் நலன் பேணிகாக்கப்படும்.
நன்றி – மருத்துவர் புகழேந்தி

டாபிக்ஸ்