குழந்தைகள் விரும்பும் சோளா பூரி சாப்பிட இனி ஓட்டல் செல்லவேண்டாம்; வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!
வீட்டிலே சோளா பூரி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
ரவை – அரை கப்
தயிர் – அரை கப்
உப்பு – ஒரு ஸ்பூன்
சர்க்கரை – ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை ஸ்பூன்
எண்ணெய் – பூரிகளை பொரித்து எடுக்க தாராளமாக
செய்முறை
ரவை மற்றும் தயிரை கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துவிடவேண்டும். பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, தயிர் கலவை, உப்பு, சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் என அனைத்தையும் சேர்த்து மிருதுவாக பிசைந்துகொள்ளவேண்டும். இதை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேர்த்து 2 மணி நேரங்கள் மூடி வைத்துவிடவேண்டும்.
ஹாட் பாக்ஸில் கூட அடைத்து வைத்துக்கொள்ளலாம். இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் மாவை எடுத்து மீண்டும் ஒருமுறை பிசைந்து உருண்டைகளாக உருட்டி, அதிகம் மொத்தமாகவும் இல்லாமல், மெல்லிசாகவும் இல்லாமல் மீடியமான அளவு தேய்த்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதை நல்ல சூடாக்கி, அதில் தேய்த்தவற்றை போட்டு பூரிகளாக நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஓட்டல் ஸ்டைல் சோளா பூரி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள பன்னீர், காய்கறி குருமா, கொண்டைக்கடலை குருமா என எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
சூப்பர் சுவையில் அசத்தும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்கவேண்டும் என்று எண்ணுவீர்கள். அத்தனை சுவை நிறைந்தது இந்த சோளா பூரி. இதை நீங்கள் லன்ச் பாக்ஸ்க்கும் கொடுக்கலாம்.
மேலும் ஒரு ரெசிபியையும் தெரிந்துகொள்ளுங்கள்.
பூண்டு தொக்கு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
பூண்டு – ஒரு கப்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
வர மிளகாய் – 8
வெந்தயம் – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
புளி – 4 கொட்டை
உப்பு – தேவையான அளவு
நாட்டுச்சர்க்கரை – கால் ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவேண்டும். பின்னர் வெந்தயம், வரமிளகாய், சீரகம் சேர்த்து எதையும் கறுக்கிவிடாமல் அடுப்பை குறைவான தீயில் வைத்து எண்ணெயிலே அவற்றையும் சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அவற்றை தனியாக ஆறவைத்து, அதனுடன், புளி, உப்பு, நாட்டுச்சர்க்கரை மற்றும் வறுக்கப்பயன்படுத்திய எண்ணெயில் சிறிது சேர்த்து மிக்ஸிஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். நல்ல மிருதுவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
எண்ணெயில் வறுக்கும்போது, அடுப்பை எப்போதும் குறைவான தீயில் வைத்திருக்க வேண்டும். கருகிவிட்டால் சுவை நன்றாகவே இருக்காது. எனவே வறுக்கும்போதும் கவனம் தேவை.
தேவைப்பட்டால் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்தால், சூப்பர் சுவையில் பூண்டு தொக்கு தயார். தாளிக்காமலும் அப்படியே சாப்பிடலாம்.
இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதை டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இந்த பூண்டு தொக்கை நினைத்தவுடனே செய்து முடித்துவிடாலம். வீட்டில் காய்கறிகளே இல்லையென்றாலும் கவலைவேண்டாம். பூண்டு மட்டும் இருந்தால் போதும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்