அரை மணி நேர நடைபயிற்சி! வயதானவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும்! புதிய ஆய்வில் தகவல்!
தினமும் காலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால் வயதானவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும் என ஒரு ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் பயிற்சி பொதுவாகவே மூளைக்கு சிறந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன், இதய ஆரோக்கியம் உட்பட பல உடல் நல பிரச்சனைகளுக்கு இது சிறப்பாக உதவும். தினம் தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மேலும் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வதினால் வயதானவர்களுக்கு பல நன்மைகளை அளிப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு
நினைவாற்றல் இழப்பு மற்றும் அறிவாற்றல் குறைபாடு வயதுக்கு ஏற்ப பொதுவானது . ஆனால் வழக்கமான உடற்பயிற்சி இதை குறைக்க உதவும். யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் நடத்திய ஆய்வின்படி, காலையில் 30 நிமிட உடற்பயிற்சி அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி மற்றும் இரவில் குறைந்தது ஆறு மணிநேரம் தூங்குவது அடுத்த நாள் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.
உடல் பயிற்சி மூளைக்கு சிறந்தது. தூக்கம் அதற்கு உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். மனித மூளைக்கு வயதாகும்போது அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உடல் செயல்பாடு மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் நரம்பியக்கடத்திகளை தூண்டுகிறது என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பிஹேவியரல் நியூட்ரிஷன் அண்ட் பிசிகல் ஆக்டிவிட்டியில் வெளியிடப்பட்ட ஆய்வில், உடல் செயல்பாடு மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் விளைவுகள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நினைவாற்றல் திறன்
அறிவாற்றல் குறைபாடு அல்லது டிமென்ஷியாவால் பாதிக்கப்படாத 50 முதல் 83 வயதுக்குட்பட்ட 76 பேரை ஆய்வு செய்தனர். அவர்களின் தினசரி உடல் செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்க எட்டு நாட்களுக்கு முடுக்கமானியை(Accelerometer) அணிய அறிவுறுத்தப்பட்டது. வேகம், நினைவகம் மற்றும் கவனத்தை சோதிக்க எளிய ஆன்லைன் அறிவாற்றல் சோதனைகள் தினசரி நிர்வகிக்கப்பட்டன.
உடல் செயல்பாடுகளில் ஒவ்வொரு 30 நிமிட அதிகரிப்புக்கும், அடுத்த நாள் வேலை மற்றும் எபிசோடிக் நினைவக மதிப்பெண்களில் இரண்டு முதல் ஐந்து சதவிகிதம் அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். லேசான அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களில் தினசரி அடிப்படையில் அறிவாற்றல் செயல்திறனில் மிகச் சிறிய தூண்டுதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த ஆய்வு விளக்குகிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் வயதானவர்கள் 30 நிமிடங்கள் நடப்பதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் வயதானவர்களின் உணவுப்புழக்கம் மற்றும் தூக்க நிலை அவர்களது நினைவுத்திறனை மேம்படுத்த உதவும். மேலும் உடல் பருமனை குறைக்கவும், சீரான உடல் எடையை பராமரிக்கவும் வயதானவர்களுக்கு நடைபயிற்சி உதவுகிறது. குறிப்பாக பெரும்பாலும் அவர்களுக்கு ஏற்படும் எதிர்மரையான உடல் மாற்றத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடைமுறைகள் உதவுகின்றன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்