Nendhiran banana Halwa : வீட்டில் நேந்திரன் பழம் இருந்தால் உடனே இப்டி செஞ்சு பாருங்க! ருசியான ஈவ்னிங் ஸ்னாக் ரெடி!
Nendhiran Banana Halwa : நேந்திரன் பழத்தை சிலர் விரும்பி ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் சிலருக்கு பிடிக்காது. நேந்திரன் பழம் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து எளிதாக அல்வா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
பழுத்த நேந்திரம் பழங்கம் – 3
வெல்லம் – 200 கிராம்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
நன்றாக பழுத்த நேந்திரன் பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் முழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
கனமான கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் நறுக்கிய நேந்திரம் பழத்தை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவேண்டும். அவை நன்றாக வதங்கி சேர்ந்து வந்ததும் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து கிளறவேண்டும்.
வெல்லத்தோடு பழங்கள் சேர்ந்து அல்வா பதத்துக்கு திரண்டு ஒட்டாமல் வரும் வரை நெய் சேர்த்து கிளறவேண்டும்.
ஓரங்களில் நெய் பிரிந்து ஒட்டாமல் வரும்போது சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கினால் பத்தே நிமிடத்தில் தித்திக்கும் நேந்திர பழ அல்வா இனிப்பு தயார்.
பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுத்தால் ருசியான மற்றும் ஆரோக்கியமான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் கிடைத்துவிடும்.
நேந்திரன் பழத்தில் உள்ள நன்மைகள்
ஒரு நேந்திரன் பழத்தில் 112 கலோரிகள் உள்ளது. கொழுப்பு சுத்தமாக இல்லை. புரதச்சத்து ஒரு கிராம், கார்போஹைட்ரேட் 29 கிராம், நார்ச்சத்துக்கள் 3 கிராம் உள்ளது. தினசரி அளவில் வைட்டமின் சி 12 சதவீதம், ரிபோஃப்ளாவின் 7 சதவீதம், ஃபோலேட் 6 சதவீதம், நியாசின் 5 சதவீதம், காப்பர் 11 சதவீதம், பொட்டாசியம் 10 சதவீதம், மெக்னீசியம் 8 சதவீதம் உள்ளது.
சரும பாதுகாப்பு
நேந்திரன் வாழைப்பழம் சுவையானது மட்டுமின்றி, சருமத்தின் சிறந்த நண்பனாகவும் உள்ளது. பளபளக்கும் சருமத்தைக் கொடுக்கிறது.
இதில் ள்ள வைட்டமின் சி சத்து உங்கள் சருமத்தை மிருதுவானதாகவும், பிரைட்டாகவும் காட்டுகிறது. வயோதிக்கத்தால் ஏற்படும் சரும சுருக்கத்தை தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வயோதிகத்தை தாமதமாக்குகிறது.
நீரிழிவு மேலாண்மை
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக உள்ளது. நேந்திரன் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தி பாதுகாக்கிறது. நேந்திரன் வாழைப்பழத்தில் உள்ள குறிப்பிட்ட பண்புகள், உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது.
உடல் எடை குறைப்பு
இதில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் உடலுக்கு நீண்ட நேரம் போதிய சக்தியைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் வயிறு நீண்ட நேரத்துக்கு நிரம்பிய உணர்வுடன் இருப்பதால், தேவையற்ற நொறுக்குத்தீனிகள் தவிர்க்கப்படுகிறது.
நேந்திரன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதாக உள்ளது. இதனால் உங்கள் உடல் எடை குறைக்கப்படலாம்.
உடல் எடை அதிகரிப்பு
நேந்திரன் வாழ்ப்பழத்தை உட்கொள்ளும்போது, அது உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கிறது. உங்களுக்கு விரைவான ஆற்றல் கிடைக்கவேண்டுமா? நேந்திரன் வாழைப்பழம் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக்கொடுக்கிறது.
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மினரல்கள் உங்கள் உடலின் தசைகளை கட்டமைக்க சிறந்தது மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியமாக எடை போட உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்
இந்தப்பழம் உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து, உங்கள் உடலின் செரிமான மண்டலத்தை காக்கிறது. வயிறு உப்புசத்தை குறைத்து, மலத்தை வெளியேற்றுகிறது.
ஆரோக்கியமான குடல்தான் ஆரோக்கியமாக உடலை வளர்க்கிறது. நேந்திரன் வாழைப்பழத்தால் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.
பெண்களுக்கு என்ன பயன்?
நேந்திரன் வாழைப்பழம் பெண்களின் உடல் ஆற்றவை அதிகரிக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது, எலும்பை வலுவாக்குகிறது. மாதவிடாய் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
வலிகளைப்போக்கி, ஆரோக்கியமான மாதவிடாய் காலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அனீமியாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, நேந்திரன் பழத்தில் உள்ள இரும்புச்சத்துக்கள், ரத்தத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

டாபிக்ஸ்