Neck Pain : கம்ப்யூட்டர் முன் வேலையா? கழுத்து எலும்பு தேய்மானத்தால் அவதியா? என்ன செய்யலாம் – மருத்துவர் கூறுவது என்ன?
Neck Pain : கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் நபரா நீங்கள்? இதனால் கழுத்து வலியால் தொடர் அவதிப்படுகிறீர்களா? என்ன செய்யலாம் என்று இயற்கை பாரம்பரிய மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் நாம் பெரும்பாலானோர் அமர்ந்துகொண்டே வேலை செய்கிறோம். பெரும்பாலும் கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்துகொண்டு செய்யும் வேலைதான் நமது வேலை. இதனால் கழுத்து வலி, கழுத்து எலும்புகளில் தேய்மானம் என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதைத்தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறுவது என்ன?
கழுத்து எலும்பு தேய்மானத்துக்கு காரணம்
கழுத்து எலும்பில் தேய்மானம் உருவாவதற்கு முக்கிய காரணம், கழுத்துக்கு நாம் கொடுக்கும் அதிகப்படியான அழுத்தம் ஆகும்.
மொபைல் பயன்பாடு, கணினி பயன்பாடு, வாகனம் ஓட்டுதல் போன்ற சமயங்களில் கழுத்தை எந்தவிதமான ஒரு சாய்மானமோ பிடிமானமோ இல்லாமல் இறுக்கமாக வைத்து பழகுகிறோம். இது கழுத்து எலும்புகளில் பெரும்பளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இறுக்கமாக வெகு நேரம் வைத்த பின்னர் நாம் செய்யக்கூடிய கழுத்தின் அசைவுகள், கழுத்து எலும்பில் தேய்மானத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பெரும்பான்மையானவர்களுக்கு எலும்புகள் பலமின்றியே காணப்படுகின்றன. பலம் இல்லாத எலும்பு படைத்தவர்களுக்கு கழுத்து எலும்பு தேய்மானம் விரைவாக ஏற்படும்.
சாப்பிடவேண்டியது என்ன?
இதற்கு மிகச் சிறந்த மருந்தாக அமைவது எலும்புபொட்டி கீரை மற்றும் பசலைக் கீரை.
எலும்பு பொட்டிக் கீரையை காயவைத்து பருப்பு சாதம் பொடிக்கு அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து அரைத்து அனுதினமும் மதிய உணவில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேய்ந்த எலும்புகள் மீள் உருவாக்கம் அடைவதுடன் பலமும் பெறும்.
மேலும் வாரம் இருமுறை பசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டு வர, கழுத்தில் உருவாகும் இருக்கமும் உராயவும் வெகுவாகக் குறையும்.
மேலும் என்ன செய்யவேண்டும்?
கழுத்துக்கு எப்போதும் ஒரு சாய்மானம் கொடுத்து அமர்வதும், நீங்கள் உறங்கும் தலையணை கழுத்துக்கு அதிகமான அழுத்தம் கொடுக்காத வகையிலும் வைத்துக் கொள்வதும் கழுத்து எலும்பு தேய்மானத்திலிருந்து விரைவாக மீள்வதற்கு உதவிடும்.
கணினி மற்றும் மொபைல் போன்றவை பயன்படுத்தும்போது கழுத்துக்கு தேவையான சாய்மானத்தை கொடுத்து இறுக்கமில்லாமல் அமர்ந்த பின்னர் பயன்படுத்த தொடங்க வேண்டும்.
அதிகளவில் தேய்மானம் ஏற்பட்டுள்ளவர்கள், தேய்மானம் மீள் உருவாக்கம் ஆகும் வரை, கழுத்துக்கு பட்டை அணிந்து கொண்டு இருப்பது விரைவான மீள் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.
மேலும் நொச்சி இலைகளை பறித்து வந்து 250மிலி சாறு எடுத்து, 250மிலி நல்லெண்ணெயை இளம் தீயில் சூடு படுத்தி, முன்னர் எடுத்து வைத்த சாற்றை சிறிதாக சூடான எண்ணெயில் ஊற்றி காய்ச்சி ஈரப்பதம் முழுவதும் அடங்கியவுடன் எடுத்து ஒரு பாட்டில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த எண்ணையை அனுதினமும் கழுத்துப் பகுதிகளுக்கு தேய்த்து வந்தால் விரைவான முன்னேற்றம் மற்றும் வலி நிவாரணம் கிட்டும். இவ்வாறு ராசா ஈசன் தெரிவித்தார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்