Mutton Masala Podi : இந்த மசாலாப் பொடியை மட்டும் அரைச்சு வெச்சுடுங்க! அடிக்கடி மட்டன் செஞ்சு அசத்திடுங்க!
இதுபோல் மசாலாப்பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சட்டுன்னு கறிக்குழம்பை செய்துவிடலாம். இப்படி மசாலா அரைத்து வைக்கும் குழம்பை வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
வர மல்லி – 150 கிராம்
வர மிளகாய் – 75 கிராம்
கல் உப்பு – தேவையான அளவு
மிளகு – 10 கிராம்
சோம்பு – 10 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
கிராம்பு – 5 கிராம்
கல் பாசி – 3 கிராம்
பட்டை – 5 கிராம்
அன்னாசிப்பூ – 3 கிராம்
பிரியாணி இலை – 3 கிராம்
கசகசா – 10 கிராம்
கடலை பருப்பு – 2 கிராம்
உளுந்து – 3 கிராம்
அரிசி – ஒரு கிராம்
மஞ்சள் தூள் – 5 கிராம்
கறிவேப்பிலை – 2 கொத்து (அலசி காயவைத்தது)
செய்முறை
கடாயை சூடாக்கி, மல்லி மற்றும் வர மிளகாயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து மிளகு, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, பட்டை, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, கசகசா ஆகிய அனைத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி, உளுந்து, கடலை பருப்பு இது மூன்றையும் தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். கல் உப்பையும் வறுத்து எடுத்துக்கொள்ளலாம்.
வறுக்கும்போது கருகிவிடாமல் பக்குவமாக தொடர்ந்து கிளறிக்கொண்டே, வாசம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறவிடவேண்டும்.
ஆறிய அனைத்தையும், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும்போது அதனுடன் எடுத்து வைத்துள்ள மஞ்சள்தூளையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சூட போகும் வரை ஒரு தட்டில் சேர்த்து ஆற வைத்து, பின்னர் காற்றுப்புகாத கண்ணாடி பாட்டில் அல்லது டப்பாவில் அடைத்து வைத்துவிடவேண்டும்.
இந்தப்பொடியை வைத்து மட்டன் வறுவல், குழம்பு, பிரட்டல், சுக்கா, மசாலா, மிளகு பிரட்டல் என எதுவேண்டுமானாலும் செய்யலாம். இந்தப்பொடி மட்டன் செய்வதற்கு உகந்தது.
இந்த மசாலாவைப் பயன்படுத்தி மட்டன் கிரேவி செய்வது எப்படி?
கடாயில் எண்ணெய் சூடாக்கி, சோம்பு தாளிக்க வேண்டும். பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்க வேண்டும். அப்போதுதான் குழம்பு நல்ல கெட்டியாக வரும்.
அடுத்து கழுவிய கறியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்து அரைத்த மசாலாப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
(கறிக்குழம்புக்கு சிலர் அதிக காரம் விரும்புவார்கள். அவர்கள் இன்னும் ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்த்துக்கொள்ளலாம்)
தேங்காய், சின்னவெங்காயம் மசாலா அரைத்து, தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும். பின்னர் மல்லித்தழை சேர்த்து கறி வெந்தவுடன் இறக்க வேண்டும்.
இதை குக்கரில் வைத்தால் மூடிவைத்து 10 விசில் விட்டால் கறி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து முழு கரம் மசாலாப் பொருட்களை சேர்த்து தாளித்து கறிக்குழம்பில் சேர்க்க வேண்டும்.
சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதுபோல் மசாலாப்பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சட்டுன்னு கறிக்குழம்பை செய்துவிடலாம். இப்படி மசாலா அரைத்து வைக்கும் குழம்பை வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்