Mudakathan Keerai Rasam : மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை ரசம்! எத்தனை ஆரோக்கியம் உள்ளது பாருங்கள்!
How to Prepare Mudakathan Keerai Rasam : முடக்கத்தான் கீரை ரசம் செய்வது எப்படி?
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை நாம் உணவில் சேர்த்துக்கொள்வதுதான் உடலுக்கு நல்லது. அந்த வகையில் இன்று முடக்கத்தான் கீரையில் ரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடியளவு
மல்லிவிதைகள் – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பூண்டு – 3 பல்
தக்காளி – 1
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து முடக்கத்தான் கீரையை வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவிடவேண்டும்.
ஒரு மிக்ஸி அல்லது உரலில் வரமல்லி, சீரகம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.
தக்காளியையும் கைகளால் கரைத்தோ அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்தோ வைத்துக்கொள்ள வேண்டும்.
பூண்டையும் தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். இவையனைத்தையும் கொதிக்கும் இலைகளுடன் சேர்க்கவேண்டும். அடுத்து புளிக்கரைசல் சேர்த்து அடுப்பை குறைத்துவிடவேண்டும்.
இந்த கலவை நன்றாக கொதித்தவுடன், மற்றொரு கடாய் அல்லது தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உடைத்த வரமிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
முடக்கத்தான் கீரை ரசம் தயார்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
குழந்தைகள் இந்த இலையில் உள்ள மாறுபட்ட சுவையால் இதை சாப்பிட மறுப்பார்கள், எனவே அவர்களுக்கு கொஞ்சம் நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.
முடக்கத்தான் கீரையின் நன்மைகள்
முடக்கத்தான் கீரை வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது.
இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாகும்.
கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.
ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் கொடுக்கிறது.
இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது.
காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது.
இதில் உள்ள சிறப்பான வாயுத்தன்மை, மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது.
முடக்கத்தான் கீரை இலை அல்லது பொடியை கொதிக்க வைத்து பருகினால், அது வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.
மாதவிடாய் வலிகளை போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
முடக்கத்தான் கீரை உடலில் சோர்வைப் போக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
முடக்கத்தான் கீரை சரும வியாதிகளுக்கு தீர்வாகிறது. தலையில் உள்ள பொடுகைப் போக்குகிறது. தலையின் அரிப்பை குணப்படுத்துகிறது. இதை அரைத்து தலைமுடியின் கால்களில் தடவினால் கூந்தலுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது.
இந்தக்கீரையை பயன்படுத்தி தோசை, துவையல், ரசம், சூப் என அனைத்தும் செய்யலாம். இத்தனை ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் முடக்கத்தானை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்