Most Common Cancers in Men: ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோய் பாதிப்புகள்!ஆபத்தை குறைக்க எளிய வழிகள் என்ன?
ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோய் பாதிப்புகளும், அவற்றின் ஆபத்தை குறைக்க எளிய வழிகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்

உலகம் முழுவதும் புற்றுநோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண், பெண் இருவரையும் பாதிக்கும் நோய் பாதிப்பாக புற்று நோய் இருக்கிறது. புகையிலை உட்கொள்ளும் வரலாறு இல்லாதவர்களுக்கும் வாய்வழி புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இயல்பாக ஏற்படுகின்றன.
புற்றுநோய் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் தீவிர உடல்நல பிரச்னையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான சர்வதேச ஏஜென்சி (IARC) அறிக்கையின்படி, ஐந்தில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. 9 ஆண்களில் ஒருவருக்கும், 12 பெண்களில் ஒருவருக்கும் இந்த நோய் பாதிப்பு ஆளாகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களை பற்றியும், அதன் ஆபத்தை எவ்வாறு குறைப்பது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்
புரோஸ்டேட் புற்றுநோய்
ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் புரோஸ்டேட் சுரப்பியில் தொடங்குகிறது.
வயது, குடும்ப பின்னணி மற்றும் இனம் ஆகியவை இந்த புற்று நோய் ஆபத்துக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. 50 வயதை எட்டிய பிறகு இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். ஆண்கள் 45 வயதுக்கு பிறகு ஒவ்வொரு 2 முதல் 4 வருடங்களுக்கும் ஒருமுறை புரோஸ்டேட் ஆன்டிஜென் (PSA) சோதனைக்கு தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நுரையீரல் புற்றுநோய்
ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு புகைபிடித்தல் முக்கிய காரணமாக உள்ளது. புகைப்பழக்கம், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாக குறைக்கிறது.
வழக்கமான உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுவதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். நீங்கள் வசிக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பவர்கள் அல்லது அதற்கு முன் புகைப்பழக்கம் இருப்பவர்கள் 50 வயதுக்கு பிறகு ஒவ்வொரு வருடமும் குறைந்த அளவு CT ஸ்கேன் செய்வது அவசியமாகிறது.
பெருங்குடல் புற்றுநோய்
பெருங்குடல் புற்றுநோய் பெருங்குடல் அல்லது மலக்குடலை பாதிக்கிறது. வயது, குடும்ப வரலாறு, சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடல் பருமன் மற்றும் உடல் செயல்பாடு குறைவாக இருப்பது இதன் ஆபத்து காரணிகளாக உள்ளது.
கொலோனோஸ்கோபி மூலம் வழக்கமான ஸ்கிரீனிங் செய்து, சாத்தியமான உடல்நல பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிவதில் நோய் பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதற்கு முன்பே இந்த நோய் பாதிப்பு குறித்த குடும்ப வரலாறு இருந்தால், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வெற்றிகரமான சிகிச்சை மூலம் பாதிப்பை தடுக்கலாம்.
டெஸ்டிகுலர் புற்றுநோய்
டெஸ்டிகுலர் புற்றுநோய் பொதுவாக இளைஞர்களை பாதிக்கிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். இறங்காத விரைகள், குடும்ப வரலாறு மற்றும் சில மருத்துவ நிலைமைகள் ஆகியவை இதன் ஆபத்து காரணிகளாக இருக்கின்றன. உங்கள் விரைகளை அடிக்கடி சுய பரிசோதனை செய்து கொள்ளவும். அவற்றின் அளவு அல்லது அமைப்பில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டால் மருத்துவரை அணுகி உடனடியாக ஆலோசனை பெற வேண்டும்.
சிறுநீர்ப்பை புற்றுநோய்
வயதான ஆண்கள், புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், சில ரசாயனங்கள் போன்றவற்றின் மூலம் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரில் ரத்தம் வருதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளது. இந்த நோய் பாதிப்பின் ஆபத்தை குறைக்க, புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். உடலே எப்போது நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் நுகர்வை தவிர்க்க வேண்டும்.
தோல் புற்றுநோய்
தோல் புற்றுநோய், மெலனோமா பாதிப்பு இந்தியாவில் குறைவாகவே காணப்பட்டாலும், சூரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் இதை தடுக்கலாம். அதிக SPF கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துதல், சன்கிளாஸ்களுடன் வெயில் தாக்கம் பாதிக்காதவாறு பாதுகாப்பான ஆடைகளை அணிவது ஆகியவை இந்த நோய் பாதிப்பை தவிர்ப்பதற்கான வழியாக உள்ளது. உடலில் வழக்கத்துக்கு மாறான மச்சங்கள் அல்லது ஏற்கனவே உள்ள மச்சங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வழக்கமான தோல் பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோய் பாதிப்பை கண்டறியலாம்.
புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் சரிவிகித உணவை உட்கொள்வதன் மூலமும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும்.
- புகைப்பழக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
- மது அருந்தும் பழக்கம் இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்
- சன்ஸ்கிரீன் மற்றும் வெயில் கதிர்களால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும். இதனால் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களைத் தவிர்க்க உதவும்
- பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்களை சாப்பிட வேண்டும்
- உங்கள் குடும்ப வரலாற்றை அறிந்து, நோய் பாதிப்புகள் எதுவும் இருந்தால் அதுதொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்
- ஆண்களில் மிகவும் பொதுவான புற்றுநோய்களை பற்றி அறிந்திருப்பது, அதன் ஆபத்தை குறைப்பதற்கான முன்முயற்சியுடன் நடவடிக்கை எடுக்க உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியம் நல்வாழ்வும் பராமரிக்கலாம்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்