Exclusive : மழைக் கால காய்ச்சல்கள்; பாக்டீரியாக்கள் கொண்டுவருவது என்ன? – மருத்துவர் விளக்கம்!
மழைக் கால காய்ச்சல்களில் பாக்டீரியாக்கள் என்னென்ன கொண்டுவருகின்றன என்று திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார். இந்த தொடரில் காய்ச்சலும் சித்த மருத்துவ தீர்வுகளும் என்னவென்று அவர் விளக்குகிறார். அதை தெரிந்துகொள்ளுங்கள்.
தீபாவளி முடிந்து மழையும், பனியுமான ஒரு குளிர் காலம் நிலவத்துவங்கிவிட்டது. இப்போது தொற்று கிருமிகளுக்கு கொண்டாட்டமான காலம் எனலாம். எளிதாக தொற்றும் வாய்ப்பு காற்றில் உள்ளது. நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமிது என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் மக்களை எச்சரிக்கிறார். மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல்கள் மற்றும் அதை தீர்க்கும் சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து மருத்துவர் ஒரு தொடராக இங்கு விளக்குகிறார். மழைநீர் தேங்கி நிற்பதால் அதில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. சுத்தமில்லாத தண்ணீரின் வழியே, டைஃபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமையால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்றவை ஏற்பட வழிவகுக்கும்.
குறிப்பாக குழந்தைகள், உடல் பலகீனமான நிலையில் இருப்பவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்தை உட்கொண்டு வாழ்பவர்கள் என அனைவரும் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்
காய்ச்சல் என்றால், உடனே மருந்து கடைகளுக்கு சென்று காய்ச்சலுக்கு ஒரு செட் மாத்திரை, சளி, இருமலுக்கு ஒரு செட் மாத்திரை கொடுங்க என்று கேட்டு வாங்கி பயன் படுத்தக்கூடாது. எதனால் திடீர் காய்ச்சல் வந்தது என்றும், அது என்ன வகை காய்ச்சல், எதனால் சளி, இருமல் தொற்றுகள் ஏற்பட்டது என்றும் ஆராய்ந்து அறியவேண்டும்.
இதைவிடுத்து, சுயமாக மருந்தை வாங்கி ஓரிரு நாட்கள் சாப்பிட்டு பின் காய்ச்சல் குறையாதபோது, நோய் தீவிர நிலையில் மருத்துவமனைக்கு செல்லும்போதுதான் நோயை கணிக்கமுடியாமல், தீர்க்க முடியாமல் உயிரிழப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகிறது.
எனவே இதைத் தவிர்த்து, விரைவான மருத்துவ உதவி, விரைவான மருத்துவ பரிசோதனை மூலம்தான் நோயைத் தீர்க்க உதவும் என்பதை நினைவில்கொண்டு மாறுபட்ட குறிகுணங்கள், அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர் காமராஜ் வலியுறுத்துகிறார்.
காய்ச்சல்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளதா? உடனே சரியாகுமா?
சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து இருக்கா? குணப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து உள்ளது. காய்ச்சல் முதல் 4,448 நோய்களுக்கும், சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் உள்ளன.
சித்த மருந்துகள் தாமதமாகத்தான் வேலை செய்யும் என எண்ணாதீர்கள். உடனடி தீர்வு தரும் சித்த மருந்துகளும் உள்ளன. சித்த மருத்துவ நூல்களில் 64 வகையான காய்ச்சல் இருப்பது விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் வரும் சுரங்களை பற்றியும் அதற்கான சித்த மருத்துவ தீர்வுகள் மற்றும் தற்காப்பு முறைகளைப் பற்றியும் இந்த தொடரில் தெரிந்துகொள்ளலாம்.
மழைக்காலத்தில் காய்ச்சல் வரக் காரணம்
சுகாதாரமற்ற குடிநீர் குடிப்பது மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்பது
காற்றின் மூலம் பரவும் வைரஸ் நுண்கிருமிகளின் தொற்று
மழைக் காலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் கொசுக்கள் இவைகள் காய்ச்சல் ஏற்பட காரணங்களாகின்றன
பிற வைரஸ் தொற்றுக்கள் மூலமாகவும் பரவலாம்
மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சலில் மிக முக்கியமானது மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களாகும். இவை வருவது குறித்து பார்த்தோம். இனி காலரா, டைஃபாய்ட் ஆகிய காய்ச்சல்கள் வரும் வழி குறித்து காணலாம்.
டைஃபாய்ட் காய்ச்சல் வரும் வழி
டைஃபாய்ட் காய்ச்சல் வரக்காரணமாக இருப்பது (சால்மோனெல்லா டைபி) எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா நுண் கிருமிகள் ஆகும்.
அசுத்தமான உணவு மற்றும் அசுத்தமான தண்ணீரை உபயோகிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவு , வாழ்க்கை முறை சீர்கேட்டினாலும் வரலாம்.
அறிகுறிகள்
காய்ச்சல்,
தலைவலி,
சோர்வு,
வயிற்று வலி
குடல் மற்றும்
தொண்டைப்புண் ஆகியன.
காலரா காய்ச்சல் வரும் வழி
விப்ரியோ காலரே (Vibrio cholera) என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது
அறிகுறிகள்
காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படும். காய்ச்சலின் அறிகுறிகள்தான் இதிலும் இருக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்