Mint Kulambu : புதினாவில் துவையல், சட்னி செய்திருப்பீர்கள்? குழம்பு வைத்திருக்கிறீகளா? இதோ ரெசிபி! செய்து அசத்துங்கள்!
Mint Kulambu : புதினாவில் துவையல், சட்னி செய்வது எளிது. அதை அடிக்கடி ருசித்திருப்பீர்கள். புதினாவில் குழம்பு செய்து அசத்த இதோ ரெசிபி. கட்டாயம் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு – 8 பல்
சின்ன வெங்காயம் – 10
மிளகு – ஒரு ஸ்பூன்
வர மல்லி – ஒரு ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
புதினா – 2 கைப்பிடி
குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 பல் (தட்டியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புளி – நெல்லிக்காய் அளவு
(சூடான தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
புதினா – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மசாலா அரைப்பது
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில், 8 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து மிளகு, வரமல்லி, தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவேண்டும். கடைசியாக புதினாவை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவேண்டும்.
இதை எடுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். இதுதான் புதினா குழம்புக்கு தேவைப்படும் மசாலா. இதை தனியாகவே இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
குழம்பு செய்வது
ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் வெந்தாயம் தாளிக்கவேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கியவுடன், அரைத்த மசாலா விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, கஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது, உப்பு சரிபார்த்துவிட்டு, பொடியாக நறுக்கிய புதினாவை சேர்த்து இறக்கவேண்டும்.
சூப்பர் சுவையில் புதினா குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடும்போது சுவை அள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
புதினாவில் உள்ள சத்துக்கள்
புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம் ஆகிய அனைத்திலும் பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் உள்ளது.
இதில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
புதினா இலைகளில் கலோரிகள் குறைவாக உள்ளது. புரதம் மற்றும் கொழுப்புச்சத்துக்கள் குறைவாக உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் அதற்கு புதினா இலைகளை பயன்படுத்தலாம்.
புதினாவின் நன்மைகள்
செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது.
குடலில் ஏற்படும் எரிச்சலைப் போக்குகிறது.
சுவாச பிரச்னைகளை மேம்படுத்துகிறது.
பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மூளையின் ஆற்றலை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
மனஅழுத்தத்தை குறைக்கிறது.
தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் வலியை போக்குகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
காலையில் எழுந்தவுடன் ஏற்படும் உடல் உபாதைகளைப் போக்குகிறது.
அலர்ஜியைப்போக்குகிறது.
ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
பக்கவிளைவுகள்
வாயுத்தொல்லை உள்ள நபர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். இது நுகர்வுக்கு ஏற்றதுதான் என்றாலும் அளவுக்கு மிஞ்சக்கூடாது.
அல்சர் உள்ளவர்கள் இதை அதிகம் எடுக்கும்போது வயிற்றில் எரிச்சல் ஏற்படும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மெந்தால் எண்ணெய் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். எனவே குழந்தைகள் கையில் படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.