மீத்தேன் : மீத்தேன் எனும் அரக்கன்! பாதிப்புக்களை தடுக்க என்ன செய்யலாம்? – வழிகாட்டும் நிபுணர்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மீத்தேன் : மீத்தேன் எனும் அரக்கன்! பாதிப்புக்களை தடுக்க என்ன செய்யலாம்? – வழிகாட்டும் நிபுணர்!

மீத்தேன் : மீத்தேன் எனும் அரக்கன்! பாதிப்புக்களை தடுக்க என்ன செய்யலாம்? – வழிகாட்டும் நிபுணர்!

Priyadarshini R HT Tamil
Updated May 11, 2025 10:56 AM IST

மீத்தேன் : 2030ம் ஆண்டில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு காரணமாக எழும் மீத்தேன் வெளிப்பாட்டை 75 சதவீதம் குறைக்கவும், நிலக்கரி மூலம் வெளியாகும் மீத்தேன் வெளிப்பாட்டை 50 சதவீதம் குறைத்து, புவிவெப்பமடைதலைக் குறைக்க அகில உலக ஆற்றல் நிறுவனம் அறிவுறுத்துகிறது.

மீத்தேன் : மீத்தேன் எனும் அரக்கன்! பாதிப்புக்களை தடுக்க என்ன செய்யலாம்? – வழிகாட்டும் நிபுணர்!
மீத்தேன் : மீத்தேன் எனும் அரக்கன்! பாதிப்புக்களை தடுக்க என்ன செய்யலாம்? – வழிகாட்டும் நிபுணர்!

இதுகுறித்து அவர் கூறியதாவது,

அகில உலக ஆற்றல் நிறுவனம் (International Energy Agency) 2025ல் மீத்தேன் வாயுவை தொடர்ந்து அளக்கும் பணியில், தொடர் எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி பயன்பாடு மூலம் பெறும் ஆற்றல் (Fossil Fuels) காரணமாக 120 மில்லியன் டன் மீத்தேனை உலக அளவில் வெளியிட்டுள்ளது எனும் செய்தி வெளியாகியுள்ளது.

மீத்தேனின் பாதிப்பு அளவு

மீத்தேன் வாயு கரியமில வாயுவை விட 28 முதல் 80 மடங்கு புவிவெப்பமடைதலுக்கு அதிக காரணமாக உள்ளது. நைட்ரஸ் ஆக்சைடு, கரியமிலவாயுவைக் காட்டிலும் 273 மடங்கு புவிவெப்பமடைதல் பாதிப்பை அதிகம் ஏற்படுத்துகிறது.

ஆனால், உரிய தற்போது பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலே 70 சதவீதம் மீத்தேன் வாயு வெளியீட்டை கட்டுப்படுத்த முடியும்.

தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவோடு ஒப்பிடுகையில், மீத்தேன் அளவு 2.6 மடங்கு தற்போது அதிகமாக உள்ளது.

புவிவெப்பமடைதலுக்கு தற்போதைய மீத்தேனின் பங்கு 30 சதவீதம் எனவும், அதுவும் மனிதர்களால், செயற்கையாக ஆற்றல் துறையின் (எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி) காரணமாக வெளியாகும் மீத்தேன் அளவு 35 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி பயன்பாடு காரணமாக, 2024ல் 10 மில்லியன் டன் மீத்தேன் வெளியாகியுள்ளது. அதில் பாதியளவு நிலக்கரி பயன்பாடு மூலம் வந்துள்ளது. எனினும் 2030 வரை நிலக்கரி பயன்பாட்டை இந்திய அரசு இரடிப்பாக்க முயல்வது எப்படி சரியாகும்?

2030ம் ஆண்டில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு காரணமாக எழும் மீத்தேன் வெளிப்பாட்டை 75 சதவீதம் குறைக்கவும், நிலக்கரி மூலம் வெளியாகும் மீத்தேன் வெளிப்பாட்டை 50 சதவீதம் குறைத்து, புவிவெப்பமடைதலைக் குறைக்க அகில உலக ஆற்றல் நிறுவனம் அறிவுறுத்துகிறது.

இந்தியாவோ மீத்தேன் அளவை குறைக்கும் திட்டத்தில் (Global Methane Pledge) கையெழுத்திடவில்லை.

தமிழகத்தில் மீத்தேன் வெளியாவதில் முக்கிய பங்கு

சென்னை மாநகர குப்பை கொட்டும் கிடங்குகளிலிருந்து மீத்தேன் வாயு அதிகம் வெளியாகிறது. சென்னையை எடுத்துக்கொண்டால், 28,870 டன் மீத்தேன் வெளியாகிறது. அது தமிழகத்தில், 52 சதவீதம் மீத்தேன் வாயு வெளியாகக் காரணமாகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் குப்பைக் கிடங்குகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் அதிகமாக உள்ளது.

அரிசி உற்பத்தி பகுதிகளும் மீத்தேன் வெளியாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தமிழக ஆய்வில் அது 36-47கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் உள்ளது.

நெல் அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளில் (தஞ்சாவூர், திருவாரூர்) அது மிகவும் அதிகமாக உள்ளது.

காவேரி டெல்டா பகுதிகளில், குறுவையின்போது 7.16 Gg (கிகா கிராம்), ராபி பருவத்தில் 17.09 Gg மீத்தேன் வாயு வெளியாவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க - உங்கள் வாழ்வின் விடியல் அல்லது அதிகாலை என்ற அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்கள்!

இந்தியளவில் 48 சதவீதம் மீத்தேன் வெளியாவதற்கு கால்நடைகள் காரணமாக உள்ளன.

தமிழகத்திலும் இது கணிசமான காரணியாக உள்ளது.

கால்நடைகளின் செரிமானத்தின்போது அதிக மீத்தேன் வெளியாகிறது.

தமிழகத்தில் பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டிற்கு ஆற்றல் துறை 77 சதவீதம் காரணமாக உள்ளது. அதில் 66 சதவீதம் ஆற்றல் (மின்சாரம்) நிலக்கரி வாயிலாக பெறப்படுவதால், தமிழகத்திலும் மீத்தேன் வாயு வெளியீட்டைக் குறைப்பது கடினமான செயலாக உள்ளது.

மேலும், கால்நடைகள், அரிசி பயிரிடப்படும் நிலங்களும் தமிழகத்தில் அதிகம் என்பதால், மீத்தேன் வாயு வெளிப்பாட்டை குறைப்பது எளிதல்ல.

இந்நிலையில் தமிழகத்தில் மீத்தேன் வாயு கால்நடைகளின் வாயிலாக வெளியாவதைக் குறைக்க, TANUVAS GRAND எனும் செயற்கை உணவை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் இரடிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

80 சதவீதம் கால்நடைகள் நாள் ஒன்றுக்கு 500 முதல் 800 மில்லி லிட்டர் அதிகம் பால் கொடுக்கிறது.

மீத்தேன் வாயு வெளிப்பாடு 25 முதல் 30 லிட்டர் நாளளொன்றுக்கு ஒரு பசுவுக்கு குறைந்துள்ளது.

எனவே இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக, Iron modified Alumium silicate ஆல்கஹால் ஆக்சிடேஸ் நொதிப்புரதம் (Enzyme) இரண்டையும் இணைத்து மீத்தேனை பிற பயனுள்ள பொருட்களாக (உ.ம். பாலிமர் உற்பத்தி, மெத்தனாலாக) மாற்ற முடிவதையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு அத்தகைய சிறப்புத் திட்டங்களை அதிகளவில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

மத்திய அரசு மிகச் சமீபத்தில், சென்னையிலும், கன்னியாகுமரி கடல் பகுதியிலும் மத்திய எண்ணெய், எரிவாயுநிறுவனம் (ONGC), ஆழ்துளையிட்டு, எண்ணெய் இருப்பதை அறிய அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசு இத்திட்டங்களை எதிர்த்த போதிலும், கடலுக்கடியில் எண்ணெய் இருப்பதை அறியும் பணிகள் வாயிலாக 0.1 -190 கிலோ/மணிக்கு மீத்தேன் வாயு வெளியாகும் வாய்ப்பை கருத்தில்கொண்டாவது, அதைத் தடுக்க மக்களைத் திரட்டி, மத்திய அரசுக்கு எதிராக போராடவேண்டும்.

பருவநிலை மாற்றம் என்பது தமிழகத்தின் கள உண்மை என்பதால், மீத்தேன் வாயு வெளியீட்டைக் குறைத்து, புவிவெப்பமடைதல் பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காக்க, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இவ்வாறு சுற்றுசூழல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி தெரிவித்தார்.