மாதவிடாய் கோளாறுகள் : பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஒரு புதிய காரணம் – ஆய்வில் தகவல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாதவிடாய் கோளாறுகள் : பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஒரு புதிய காரணம் – ஆய்வில் தகவல்!

மாதவிடாய் கோளாறுகள் : பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஒரு புதிய காரணம் – ஆய்வில் தகவல்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 08, 2025 07:19 AM IST

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளா? அதிக உதிரப்போக்குக்கு வழக்கமான ஹார்மோன் பிரச்னைகள் தவிர்த்து புதுக் காரணம் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் கோளாறுகள் : பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஒரு புதிய காரணம் – ஆய்வில் தகவல்!
மாதவிடாய் கோளாறுகள் : பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஒரு புதிய காரணம் – ஆய்வில் தகவல்!

மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு, அதிக நாள் உதிரம் வெளியேறுதல், மாதவிடாய் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் திடீர் உதிரப்போக்கு போன்றவைகளுக்கு வழக்கமான ஹார்மோன் பிரச்னைகள் தவிர்த்து, ரத்தத்தில் அதிக இன்சுலின் அளவும் ஒரு முக்கிய காரணமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில்," Menopause" என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில், பெண்களின் மேற்சொல்லப்பட்ட மாதவிடாய் கோளாறுகள் 3 மடங்கு அதிகமாக, அதிக இன்சுலின் ரத்தத்தில் இருப்பது பெண்கள் மத்தியில் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவர். ஆண்ட்ரியா சால்செடா, லோமா லிண்டா மருத்துவ பல்கலைக்கழகம், கலிபோர்னியா. என்பவர் செய்த ஆய்வில், அதிக உதிரப்போக்கிற்கு அதிக இன்சுலின் ரத்தத்தில் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், அத்தகைய பெண்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அளந்து அதைக் கட்டுப்படுத்தவும், வாழ்வியல் மாற்றங்கள், சர்க்கரை தொடர்பான உணவுமுறை மாற்றங்களை நடைமுறையில் கொண்டுவரவும் கவனத்தை செலுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக 30 சதவீத பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் பிரச்னைகள் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவர்களுக்கு உடல் உபாதைகள் தவிர்த்து, மன அழுத்தமும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடம்பில் இன்சுலின் ஹார்மோன் செயலுக்கு எதிர்ப்புத்தன்மை ஏற்பட்டால் (Insulin Resistance), சர்க்கரை நோய் வகை-2 ஏற்படும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மையாகும்.

அதனால், இதயம், சிறுநீரகம், கண்கள் போன்ற உறுப்புகள் பாதிப்படைவது உறுதியானாலும், கர்ப்பப்பையிலும் பாதிப்பு ஏற்டுவது குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

மருத்துவர். ஆண்ட்ரியா சால்செடா, 18 முதல் 54 வயதுடைய 205 பெண்கள் மத்தியில் 2019-2023 இடைப்பட்ட காலத்தில் செய்த ஆய்வில்,116 பெண்களுக்கு (அதிக இன்சுலின் ரத்தத்தில் இருந்துள்ளது) மாதவிடாய் கோளாறுகள், முறையற்ற உதிரப்போக்கு (Irregular Bleeding), அதிக உதிரப்போக்கு இருப்பது தெரியவந்துள்ளது. 89 பெண்களுக்கு வழக்கமான உதிரப்போக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதிக இன்சுலின் உள்ளவர்கள் மத்தியில் உதிரப்போக்கு 3 மடங்கு அதிகமாக இருந்தது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதிக இன்சுலின் நாள்பட்ட அழற்சியை (Chronic Inflammation) கர்ப்பப்பையின் ரத்தக் குழாய்களில் ஏற்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதனால் இதுகுறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள Menopause Society மருத்துவ இயக்குநர். ஸ்டீபானி பாபியன் வலியுறுத்துகிறார்.

பெண்கள் மத்தியில் அதிகம் எற்படும் Polycystic Ovarian Disease (PCOD) நோய் பாதிப்பின்போது, மாதவிடாய் வழக்கமாக வருவதற்கு பதில் அதிக நாள் தள்ளிப்போவது என்பது ஒரு முக்கிய அறிகுறியாகும்.

மாதவிடாய் வழக்கமாக வராமல் அடிக்கடி தள்ளிப்போவதும் (Infrequent Bleeding), முறையற்ற உதிரப்போக்கு (Irregular Bleeding) ஏற்படுவதற்கும் அதிக இன்சுலின் காரணம் என்று (Hyper Insulinoma) வாங் மற்றும் குழுவினர் 2020ல் செய்த ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது. அதிக இன்சுலின் இருந்தாலும், இன்சுலின் எதிர்ப்புத்தன்மை இருப்பதும் ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அடுத்தமுறை பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு, அதிக நாள் உதிரப்போக்கு, மாத விடாய் இடைப்பட்ட காலத்தில் திடீரென ஏற்படும் உதிரப்போக்கு பிரச்னை இருந்தால், அதற்கு அதிக இன்சுலினும் காரணமாக இருக்க முடியும் என்பதால், அதையும் ஆய்வு செய்து உறுதிபடுத்தி அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சையை மேற்கொள்வது சிறந்தது.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.