Maggi Powder: எல்லா உணவுகளின் ருசியை அதிகரிக்கும் பொடி.. வீட்டிலேயே எளிய முறையில் மேகி மசாலா தயார் செய்வது எப்படி?
Maggi Powder: நூடுல்ஸ் என்று இல்லாமல் எல்லா உணவுகளுக்கும் பயன்படுத்தும் விதமாக இருக்கும் மேகி மசாலா பொடி ரெசிபியை வீட்டிலேயே தயார் செய்யலாம். சுமார் 6 மாத காலம் வரை இதை பயன்படுத்தலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக நூடுல்ஸ் இருந்து வருகிறது. குறிப்பாக மேகி நூடுல்கஸ் பலருக்கும் முக்கியமான உணவாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அடுப்பு, தண்ணீர் மட்டும் இருந்தால் போதும், வெறும் இரண்டு நிமிடத்தில் சமைத்து சாப்பிடுவதோடு, கூடுதலாக வேறு காய்கறிகள் உள்பட சமையலுக்கான பொருள்கள் எதுவும் தேவைப்படாது.
மேகி நூடுல்ஸ் சுவையின் மந்திரமாக இருப்பது அதனுடன் வரும் மசாலா என்பது அனைருக்கும் தெரிந்த விஷயமே. நூடுல்ஸ் உடன் வரக்கூடிய மேகி மசாலா தனியாக கிடைப்பது கிடையாது. அந்த வகையில் சற்று கூடுதல் ருசியுடன் சாப்பிட விரும்புவோருக்கு கூடுதல் மசாலா தேவைப்படும். எனவே மேகி மசாலாவின் சுவையை அப்படியே கொண்டு வரும் விதமாக வீட்டிலேயே வைத்து மேகி மசாலா தயார் செய்யலாம்.
வீட்டிலேயே எளிய முறையில் மேகி மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
மேகி மசாலா செய்வதற்கான தேவையான பொருள்கள்
- மல்லி - 3 டிஸ்பூன்
- சீரகம் - அரை டிஸ்பூன்
- சோம்பு - ஒரு டிஸ்பூன்
- மிளகு - அரை டிஸ்பூன்
- ஏலக்காய் - நான்கு
- கிராம்பு - நான்கு
- வெந்தயம் - கால் டீஸ்பூன்
- ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு
- இலவங்கப்பட்டை - ஒரு சிறிய துண்டு
- சிவப்பு மிளகாய் - நான்கு
- மஞ்சள் - அரை டீஸ்பூன்
- வெங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் (உலர வைத்த வெங்காயம் பொடியாக்கியது)
- பூண்டு பொடி - அரை டீஸ்பூன் (உலர வைத்த பூண்டு பொடியாக்கியது)
- சோள மாவு - ஒரு டீஸ்பூன்
- தக்காளி பொடி - மூன்று டீஸ்பூன் (உலர வைத்த தக்காளி பொடியாக்கியது)
மேகி மசாலா பொடி ரெசிபி செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, வெந்தயம், ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்
பின் இந்த கலவை சூடு ஆறிய பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
இந்த பொடியுடன் உப்பு, மஞ்சள், பூண்டு பொடி, சோள மாவு பொடி சேர்த்து மீண்டும் கலக்கவும்.
இறுதியாக, வெங்காயத் தூள் மற்றும் தக்காளி தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் இந்த முழு கலவையை அடங்கிய மசாலா பொருள்களை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்க வேண்டும். அவ்வளவு உங்கள் உணவின் சுவையை மெருகேற்றும் மேகி மசாலா தயார். இந்த மசாலா ஆறு மாதங்கள் வரை புதியதாக இருக்கும்.
இதை நூடுல்ஸுடன் சேர்த்து சமைத்தால் சுவையாக இருக்கும். இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கு இது மிகவும் பிடிக்கும். அத்துடன் வீட்டிலேயே தயாரிக்கப்படுவது என்பதால், இவை கெடாமல் இருப்பதற்கு எவ்வித பாதுகாப்பு பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. அத்துடன் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்