Madurai Potato Masala : மதுரை உருளைக்கிழங்கு மசாலா; மணமணக்கும், மனம் விரும்பும் சுவையில் செய்வது எப்படி?
Madurai Potato Masala : மதுரை உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி?

Madurai Potato Masala :உருளைக்கிழங்கின் நன்மைகள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு தேவையான வைட்டமின்களையும் வழங்குகிறது. வைட்டமின் சி, பி6 மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகிறது. இது உங்கள் செரிமானத்துக்கு உதவக்கூடியது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. அது கல்லீரல் மற்றும் குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. வெள்ளை உருளைக்கிழங்கைவிட கத்தரிப்பூ நிற உருளைக்கிழங்கில் 4 மடங்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்கிறது. இது உட்கொள்ளும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால் அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.
உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள்
173 கிராம் உருளைக்கிழங்கில், 161 கலோரிகள், 0.2 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் புரதச்சத்து, 36.6 கிராம் கார்போஹைட்ரேட், 3.8 கிராம் நார்ச்சத்து, 28 சதவீதம் வைட்டமின் சி, 27 சதவீதம் வைட்டமின் பி6, 26 சதவீதம் பொட்டாசியம், 19 சதவீதம் மேங்கனீஸ், 12 சதவீதம் மெக்னீசியம், 12 சதவீதம் பாஸ்பரஸ், 12 சதவீதம் நியாசின், 12 சதவீதம் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு, வேகவைத்து, தோலுரித்து, துண்டாக்கியது - 8,
கடலை எண்ணெய் - 100 மிலி
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கடலை மாவு – 4 ஸ்பூன்
பூண்டு – 8 பல் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புதினா – ஒரு கைப்பிடியளவு
மல்லித்தழை – சிறிதளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெயை சூடாக்க வேண்டும். அதில் கடுகு, சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து பொரிய தாளித்து பின்பு நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். இதில் கடலைமாவு சேர்த்து அரை நிமிடம் வதக்க வேண்டும். இந்தக் கலவையில் அரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இப்போது அவித்து வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, கரண்டியின் பின்புறத்தில் சிறிது மசித்து கடாயில் ஐந்து நிமிடங்கள் பிரட்டி வதக்கி இறக்கி சூடாகப் பரிமாற வேண்டும். பாரம்பரிய மதுரை பொட்டலம் உருளைக்கிழங்கு இது. தயிர் சாதத்துடன் இதை பரிமாறினால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும்.
இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே கட்டாயம் ஒருமுறை ருசித்துப் பாருங்கள். அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் உருளைக்கிழங்கு பிரியர்கள் விடவே மாட்டார்கள்.
பிற எண்ணெய்களும் பயன்படுத்தலாம் கடலை எண்ணெய் தான் பெஸ்ட். கடுகோடு உளுந்து சேர்த்து தாளிப்பது உங்கள் விருப்பம்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்