சிறுநீரக தினம் : உலக சிறுநீரக தினத்தில் அச்சுறுத்தும் புள்ளி விவரங்கள் மற்றும் சிறுநீரக பாதுகாப்பு – மருத்துவர் பேட்டி!
சிறுநீரக தினம் : உலக சிறுநீரக தினத்தில் அச்சுறுத்தும் புள்ளி விவரங்கள் மற்றும் சிறுநீரகத்தைப் பாதுகாப்பது எப்படி என்று மருத்துவர் புகழேந்தி கூறுகிறார்.

மார்ச் 13, இன்று உலக சிறுநீரக தினம். இன்றைய நாளில் நமது சிறுநீரகத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும். தமிழகத்தில் சிறுநீரகக் கோளாறுகளின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
2016ம் ஆண்டு புள்ளிவிவரம் ஒன்று 2017ம் ஆண்டில் வெளியானது. இந்தியா மற்றும் தமிழ்நாடு என நாம் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். இந்த காலகட்டத்தில் இந்தியாவில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 பேருக்கு 132ஆக இருந்தது. தமிழ்நாட்டில் அது 208 என அதிகரித்து இருந்தது. சர்க்கரை நோயில் இந்தியாவில் 1000 பேருக்கு 23 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 53 என அதிகம் உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18 என இந்திய அளவில் இருந்தபோது, 35 என தமிழகத்தில் அதிகம் உள்ளது. எனவே தமிழக மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
சிறுநீரகக்கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணங்கள்
• சர்க்கரை
• ரத்த கொதிப்பு
வேறு பல காரணங்களும் உள்ளது. அதில் சுற்றுச்சூழல் மாற்றங்களும் காரணங்களாக உள்ளது. நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட காரணம் தெரியாமல் போகும் வாய்ப்புக்களும் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் காரணம் தெரியாத சிறுநீரகக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இதற்கு வெப்ப அலையால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் பூச்சிக்கொல்லி மருந்து, நிலத்தடி நீர் காரணமாகவும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே காரணம் தெரியாமல் ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கான காரணங்களை கண்டுபிடிப்பது அவசியம்.
பிஎம் 2.5 நுண்துகள்கள், அனல் மின் நிலையங்களும் சிறுநீரக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணங்களாகின்றன. இதைத்தவிர முக்கியமான காரணமாக மைக்ரோ அல்லது நானோ பிளாஸ்டிக்குகளும் காரணமாகின்றன. நாள்பட்ட கதிர் வீச்சு, ஹெவி மெட்டல்கள், இவை காற்றில் கலந்து வரலாம் அல்லது குடிநீரில் கலந்து வரலாம். அளவுக்கு அதிகமான ஆர்சனிக், லெட், காட்மியம், மெர்குரி, புரோமியம், காப்பர் போன்ற ஹெவி மெட்டல்களும் சிறுநீரகத்த்தில் பாதிப்பை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் புறக்காரணிகள் குறித்து நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தவேண்டும். கிருமிக்கொல்லி மருந்துகள், வலி நீக்கும் மருந்துகள், Radiocontrast dyes ஆகியவையும் சிறுநீரகங்களை பாதிக்கும் என்பதால் இவற்றை பயன்படுத்தும்போதும் கவனம் தேவை. தமிழகத்தில் 8.7 சதவீதம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது. ஆனால் 6.8 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறி காட்டுகிறது.
சிறுநீரக பாதிப்பு மற்றும் கண்டுபிடிக்கும் முறை
சிறுநீரக பாதிப்புக்களை நாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவேண்டும். மைக்ரோ ஆல்பிமின் யூரியா (ஒரு நாளில் 30 முதல் 300 மில்லிகிராம் வரை வெளியேறவது) என்பது ஒரு நாளில் எவ்வளவு வெளியேறுகிறது என்பதை கண்டுபிடித்தால், சிறுநீரக பாதிப்புக்களை நாம் விரைவில் கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோயாளிகளுக்கு, கிளைகேடட் ஆல்பூமினை பரிசோதித்து கண்டுபிடித்து நாம் உடனடி தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க முடியும். எனவே அரசும் மக்களும் உணர்ந்து தங்களின் சிறுநீரக பாதுகாப்பில் அக்கறை கொள்ளவேண்டும்.
மாசு ஏற்படுத்துபவர்கள்தான் பாதிப்புக்களுக்கான இழப்பீட்டைக்கொடுக்கவேண்டும், பொறுப்பேற்கவேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. எனவே சாதாரண ஆலை முதல் பெரும் வேதி ஆலைகள் வரை அந்த சட்டத்தை பின்பற்றுவதை அரசு உறுதிப்படுத்தவேண்டும்.
சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பில் தமிழகம் 5வது இடத்தில் உள்ள அதிரிச்சியளிக்கிறது. சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பும் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நாம் சுகாதாரம் குறித்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். புறச்சூழல் காரணிகளை நாம் கருத்தில்கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் நோய்களை குறைக்க முடியும். ஏனெனில் சென்னையில் காற்றிலே கூட ஹெவி மெட்டல்கள் அதிகம் உள்ளது. சட்டங்களும் நடைமுறையில் இல்லை. எனவே அனைத்து வகையிலும் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். சிறுநீரக பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். இதை அரசு, மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்படுத்தவேண்டும்.
இவ்வாறு மருத்துவர் புகழேந்தி தெரிவித்தார்.

டாபிக்ஸ்