Kidney Care : தமிழகத்தில் அதிகரிக்கும் சிறுநீரக பாதிப்புகள் – என்ன செய்யலாம் – ஓர் அலசல்!
Kidney Care : உறுப்புகள் மோசமான பாதிப்புக்கு ஆளானால் மட்டுமே, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவர். கட்டுப்பாடில்லா ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உறுப்புகளை பாதிக்க பல ஆண்டுகள் ஆகும். மக்களைத் தேடி மருத்துவ திட்டமோ 2021ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

12.3.24 மார்ச் மாதம் 2ம் செவ்வாய்கிழமை "உலக சிறுநீரக நாளாக" கொண்டாடப்பட்டு வருகிறது.
சமீபத்திய புள்ளிவிவரப்படி தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு 8.7 சதவீதம் பேருக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே சிறுநீரக பிரச்னைகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இதய செயலிழப்பால் ஏற்படும் 7.6 சதவீதம் உயிரிழப்புகள் சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடையவை என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுநீரக பாதிப்பிற்கு உயர் ரத்தஅழுத்தமும், சர்க்கரை நோயும் முக்கிய காரணிகளாக இருந்தாலும், தமிழகம் உட்பட இந்தியாவின் பல இடங்களில் காரணம் தெரியாத சிறுநீரக பாதிப்பு - CKD u - அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம்.
உணவில் உப்பை அதிகம் உட்கொள்வது (நாளொன்றுக்கு 5 கிராம் வரை மட்டுமே உணவில் உப்பை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது) உயர் ரத்த அழுத்தத்தையும், அதன் மூலம் சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்த முடியும் என்பதால், அதை மக்கள் அல்லது மருத்துவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Losalters Group தமிழகத்தில் தன்னார்வ அமைப்பு மூலம் ஏற்படுத்தப்பட்டு, முதல் கட்டமாக சென்னை, மும்பை, டெல்லியை சார்ந்த 300 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது நல்ல விஷயம்.
இதனால் சிறுநீரக பாதிப்பு குறைக்கப்படுவதுடன், சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியவும் மருத்துவர்களால் எளிதில் முடியும். இதனால் முறையாக சிகிச்சை ஆரம்பத்திலேயே அளிக்கப்பட்டால் சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு குறையும்.
(மைக்ரோ அல்புமின்யூரியா – Microalbuminuria - பரிசோதனை மூலம், சிறுநீரில் நாளொன்றுக்கு – 30 - 300 மி.கி. வரை சிறுநீரில் அல்புமின் வெளியேறுவது - கண்டறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பது சிறுநீரக பாதிப்பை குறைக்கும். ஆனால் தமிழகத்தில் மைக்ரோ அல்புமின் யூரியா பரிசோதனை ஆரம்ப சுகாதார நிலையங்களில், தாலுகா மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுவதில்லை) சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியும் மைக்ரோஅல்புமின்யூரியா பரிசோதனையை தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது தாலுகா மருத்துவமனைகளில் மேற்கொள்ள அரசு நடவடிக்கைகள் எடுப்பது சிறப்பாக இருக்கும்.
5 கிராமுக்கு கீழாக ஒருவர் உப்பை உட்கொள்வதை எப்படி கண்டறிவது? 4 பேர் உள்ள குடும்பம் மாதத்திற்கு அரை கிலோ உப்பை உட்கொண்டால், அது 5 கிராமுக்கு கீழான உப்பை உட்கொள்வதை உறுதிபடுத்துகிறது.
மேலும் வாரத்திற்கு 150 நிமிட நடைப்பயிற்சி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் அதை பின்பற்றுவது நல்லது.
இந்தியாவில் 1990-2017 இடைப்பட்ட காலத்தில் நாள்பட்ட சிறுநீரக பிரச்னை 5.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஒரிசாவில் கட்டக் மாவட்டத்தில் நரசிங்பூர் வட்டத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் செய்த ஆய்வில் 14 சதவீதம் மக்களுக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மற்றொரு ஒடிசா ஆய்வில் 4,000 சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 7 ஆண்டுகளில் தென்கனல் மாவட்டத்தை சேர்ந்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆய்வில் (நரசிங்பூர், பதம்பா வட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது) சிறுநீரகம் பாதித்த (CKD) 75 சதவீதம் பேர்களில் உயர் ரத்தஅழுத்தமோ, சர்க்கரை நோயோ இல்லை என்பதால் சூழல் மாசுப்பாடு அதற்கு காரணமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கட்டக் மாவட்டம் மகாநதிக் கரையிலும், தென்கனல் மாவட்டம் பிரமணி நதிக்கரையிலும் இருப்பதோடு, இரண்டு நதிக்கரைகளில் உள்ள அதிக தொழிற்நிறுவனங்கள் ஆலைக்கழிவுகளை நதியில் கொட்டுவதால் அந்த இரண்டு இடங்களிலும் சிறுநீரக பாதிப்பு அதிகம் இருப்பதற்கு காரணமாக இருக்க முடியும்.
தமிழகத்தில் செய்யப்பட்ட ஆய்விலும், தாமிரபரணி நதிக்கரைக்கு அருகில் அல்லது தொலைவில் உள்ள சிறுநீரக பாதிப்புகளை ஒப்பிடும்போது, அருகிலுள்ள கிராமங்களில் சிறுநீரக பாதிப்பு அதிகம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. (ஸ்டெர்லைட் மற்றும் பிற ஆலைக் கழிவுகள் இதற்கு காரணமாக இருக்க முடியும்)
எனவே, ஆலைக் கழிவுகள் நிலம், நீர், காற்றில் மாசு ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தாமல், சிறுநீரக பாதிப்பு, மாசின் காரணமாக ஏற்படும் பிற நோய்களின் பாதிப்பை நாம் கட்டுப்படுத்த முடியாது என்பதால், அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஸ்டெர்லைட் ஆலை மாசுபாடு காரணமாக மூடியதுபோல், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் பிற ஆலைகளையும் மூட உத்தரவிடவேண்டும்.
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை, நைனாகுப்பத்தில் "தொண்டை மண்டல காரணம் தெரியாத சிறுநீரக பாதிப்பை" தீவிரமாக ஆராய்ந்து, அங்கு இந்தியாவிலேயே மிக அதிகமாக 51.7 சதவீதம் பேர் சிறுநீரக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான (அதில் 75 சதவீதம் பேருக்கு நோய் மிகவும் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது) காரணங்களை கண்டறிந்து, அதை களையும் பணியில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.
சமீபத்தில், மாநில திட்டக்குழுத் தலைவர் ஜெயரஞ்சன், "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் கொடுக்கப்படுவதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது என கூறியிருப்பது, வியப்பாகவும், பல கேள்விகளை எழுப்புவதாகவும் உள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாதத்திற்கு ஒரே ஒருமுறை மட்டுமே சர்க்கரை, ரத்தக்கொதிப்பின் அளவு பார்க்கப்படுகிறது. துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்தினால், தினமும் அவற்றை அளவிடும் வாய்ப்பு இருப்பதால், அதனால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது தெளிவாக இருந்தும், தமிழக அரசு துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்தாமல் இருப்பது சரியா?
திட்டத்தின் வெற்றி என்பது, எத்தனை பேருக்கு நோய்க்கான மாத்திரைகள் கொடுக்கப்பட்டது என்பதல்ல; மாறாக எத்தனை பேருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தது என்பதே முக்கியமானது. தமிழகத்தில் மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்தஅழுத்த பிரச்னை இருப்பதும், 10ல் ஒருவருக்கு மட்டுமே, அது கட்டுப்பாட்டில் இருப்பதும், ஆய்வாளர் பிரதீப் கவுர் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில், உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் மாதம் ஒருமுறை மட்டும் வழங்கப்பட்டாலும், மாத்திரை உட்கொள்ளும்போது அல்லது இல்லாதபோது பிரச்னைகள் ஏற்பட்டால், மக்கள் தொலைவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் வாய்ப்பு மிகக்குறைவு. (அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாய்ப்பே அதிகம்)
எனவே, மக்களைத்தேடி, மருத்துவ திட்டத்தால் தான் தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கை 50 சதவீதம் குறைந்துள்ளது என எப்படி முடிவெடுக்க முடியும்?
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கட்டுபாடில்லாமல் பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், அதை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சீர்செய்யமுடியும். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கைக்கு தேவை அல்லது அவசியம் இல்லை.
உறுப்புகள் மோசமான பாதிப்புக்கு ஆளானால் மட்டுமே, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவர். கட்டுப்பாடில்லா ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உறுப்புகளை பாதிக்க பல ஆண்டுகள் ஆகும். மக்களைத் தேடி மருத்துவ திட்டமோ 2021ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓரிரு ஆண்டுகளுக்குள், சர்க்கரைநோய் அல்லது உயர் ரத்தஅழுத்தம் தொடர்பாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்வோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் குறைவு என்பதால்,"மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தால் தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்வோர் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதில் சந்தேகங்கள் உள்ளது.
தமிழக அரசு மேற்சொல்லப்பட்ட விஷயங்களை கருத்தில்கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முன்வருமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்