Keerai Vadai : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஈவ்னிங் ஸ்னாக்! கீரை வடை செய்வது எப்படி என்று பாருங்கள்!
Keerai Vadai : தினமும் உணவில் ஒரு கீரை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – ஒரு கப்
உளுந்தம்பருப்பு – கால் கப்
முளைக்கீரை – 2 கப் (பொடியாக நறுக்கியது)
சின்னவெங்காயம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஒரு ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் – 4 (தட்டியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 4 கொத்து (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
மிளகாய்வற்றல் – 5
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம்பருப்பை சேர்த்து இரண்டு முறை கழுவி 4 கப் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின் ஒரு வடிகட்டியில் தண்ணீரை முழுவதும் வடித்துக்கொள்ளவேண்டும்.
மிக்ஸி ஜாரில் மிளகாய் வற்றல், சோம்பு மற்றும் ஊறவைத்து பருப்பில் ஒரு பாதியை சேர்த்து பல்ஸ் மோடில் தண்ணீர் ஏதும் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைக்கவேண்டும். அரைத்த கலவையை ஒருபாத்திரத்தில் மாற்றி, எஞ்சியுள்ள பருப்பையும் அதேபோல கொர கொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையில் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.
பின்னர் பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கைகளில் லேசாக அழுத்தி சூடான எண்ணெயில் போடவேண்டும். மிதமான சூட்டில் வேகவிடவேண்டும். பின்னர் திருப்பிப்போட்டு பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவேண்டும்.
சுவையான கீரை வடை தயார்.
பொதுவாக குழந்தைகள் கீரை சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு இதுபோன்ற கீரை வடைகளை பள்ளி விட்டு வரும்போது செய்து கொடுத்தால் பசியில் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களை கீரை சாப்பிட வைக்க ஒரு வழியாகவும் இது இருக்கும்.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய், தக்காளி சட்னி அல்லது சாம்பார் என எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எந்த கீரையைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் இந்த வடையை செய்ய சுவையாக இருக்கும்.
கீரையில் உள்ள நன்மைகள்
கீரைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வயிறு உப்புசத்தை குறைக்கிறது. உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. ஆரோக்கியமாக வயோதிகத்தை அடைய உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது.
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நன்முறையில் பராமரிக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. செரிமான எண்சைம்களை வலுப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
தினமும் உணவில் ஒரு கீரை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
சரியான அளவு தினமும் அல்லது வாரத்தில் கட்டாயம் மூன்று நாட்கள் என முறைவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்