Kashi Halwa : காசி அல்வா அல்லது பூசணிக்காய் அல்வா! சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபி!
Kashi Halwa : காசி அல்வா அல்லது பூசணிக்காய் அல்வா, சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபி. உங்கள் வீட்டு விசேஷங்களை மேலும் இனிமையாக்கும்.
பூசணிக்காய் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த காய் ஆகும். இதன் எண்ணற்ற நன்மைகளுக்காக இது காய்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. காய்களிலே உடலுக்கு அதிகளவு நன்மைகளைத் தருவது பூசணிக்காய்தான். காலையில் வெறும் வயிற்றில் பூசணிக்காயை சாறாக்கி பருகுவது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. பூசணிக்காயில் உள்ள நன்மைகள் என்னவென்று பாருங்கள். உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. நரம்பியல் மண்டலம் வலுப்பெற உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட பூசணிக்காயில் அல்வா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய் – 2 கப் (துருவியது)
சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
குங்குமப்பூக்கள் – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
முந்திரி – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
வெள்ளை பூசணிக்காயின் தோலை சீவி, கொஞ்சம் கூட பசுமை நிறம் தெரியாமல் இருக்கும் அளவுக்கு தோலை சீவி விடவேண்டும். அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். அதில் உள்ள விதைகளை நீக்கிவிடவேண்டும். நன்றாக துருவி, அதில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீரை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். பிழிந்து எடுத்த பூசணிக்காயை இரண்டு கப் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடிக்கனமான பாத்திரத்தை சூடாக்கி அதில் நெய் சேர்த்து துருவி, பிழிந்த பூசணிக்காயை மிதமான தீயில் வைத்து வதக்கவேண்டும். அதில் உள்ள பச்சை வாசம் போனவுடன், எடுத்துவைத்த பூசணிக்காய் தண்ணீரையும் சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறவேண்டும். பரங்கிக்காயும் மிருதுவாகி வரவேண்டும்.
நன்றாக வெந்த பரங்கிக்காயை மசித்து அதில் ஒரு கப் சர்க்கரை சேர்க்கவேண்டும். சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். இந்தக்கலவை கொஞ்சம் தண்ணீர் நிறைந்ததாக மாறும். அதில் குங்குமப்பூக்களை தூவவேண்டும்.
முழுவதையும் குறைவான தீயில் வைத்து செய்யவேண்டும். தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வப்போது நெய்யை சேர்த்து கிளறவேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
இந்த கலவை கெட்டியாகத் துவங்கும்போது, ஏலக்காய்ப் பொடியைத் தூவ வேண்டும். அல்வா செய்யும் முழுமைக்கும் அடுப்பை குறைந்த தீயில் வைக்கவேண்டும்.
இதை கிளறிக்கொண்டு இருக்கும்போதே வெள்ளை நிறந்ததில் புள்ளிகள் தோன்றும் அதுதான் அடுப்பை அணைக்க சரியான நேரம் என்று பொருள். அடுப்பை அணைத்தவுடன் அது சிறிது கெட்டியாகிவிடும். அதில் வறுத்த முந்திரிகளை சேர்க்கவேண்டும். இதை ஃபிரிட்ஜில் வைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
குறிப்புகள்
துருவும்போது வெள்ளை பூசணியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறும். இந்த தண்ணீரை நீங்கள் பூசணிக்காய் அல்வாவில் சேர்த்துபோக எஞ்சியிருந்தால் அதை சப்பாத்தியுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும் அல்லது சிறிது உப்பு சேர்த்து பருகலாம். இதை கீழே ஊற்றவேண்டாம். இதை வேறு காய்கறிகளிலும் சேர்த்துக்கெள்ளலாம்.
சர்க்கரை சேர்க்கும் முன்னர் பூசணிக்காய் நன்றாக வெந்து மசிந்திருக்கவேண்டும். சர்க்கரையை சேர்த்த பின்னர் நன்றாக வேகாது. நன்றாக மசியும் அளவு வேக வைக்கவேண்டுமெனில், பூசணிக்காயை நன்றாக துருவிக்கொள்ளவேண்டும்.
சர்க்கரையை சேர்த்த பின்னர் நன்றாக கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். தொடர்ந்து கிளறி அதன் பதத்துக்கு ஏற்ப போதிய இடைவெளியில் நெய்யை சேர்த்துக் கிளறவேண்டும்.
அல்வா செய்யும் முழு நேரத்திலும் அடுப்பை குறைவான தீயிலே வைத்திருக்கவேண்டும்.
குங்குமப்பூ தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் நிறமும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த வெள்ளை புள்ளிகள் தோன்றிய உடனே நிறுத்திவிடவேண்டும். இல்லாவிட்டால் அல்வா கெட்டியாகிவிடும்.
காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் மீண்டும் எடுத்து உபயோகிக்கும்போது, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி அவனில் சூடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்