Karunai Kizhangu Masiyal : குழந்தைகளின் குடற் புழுக்களை நீக்கும்! பிடி கருணைக்கிழங்கு மசியல் செய்வது எப்படி?
Karunai Kizhangu Masiyal : குழந்தைகளின் குடற் புழுக்களை நீக்கும்! பிடி கருணைக்கிழங்கு மசியல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
பிடி கருணைக்கிழங்கு – 6
சின்ன வெங்காயம் – 20 (பொடியாக நறுக்கியது)
புளி – சிறு எளிமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பூண்டு பல் – 3
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கருணைக் கிழங்கை சுத்தமாக மண் ஏதும் இல்லாமல் கழுவிக் கொள்ளவேண்டும். குக்கரில் அரை கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
வேகவைத்த கிழங்குகளை ஆறவைத்து தோலுரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவேண்டும்.
தேங்காய் துருவல், சீரகம், 4 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
வேகவைத்த கிழங்கை மசித்துக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் மசித்த கிழங்கு, அரைத்த விழுது, மஞ்சள் தூள், புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவேண்டும்.
கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அவை நன்றாக வதங்கியதும் மிளகாய்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவேண்டும்.
பின் கலந்த கிழங்கு கலவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
கிளறும்போது சிறிது நல்லெண்ணெயை மசியலை சுற்றி விடவும். மசியல் நல்ல கெட்டியாக முறுகலானாதும் இறக்கவேண்டும். சுவையான ஆரோக்கியமான கருணைக்கிழங்கு மசியல் தயார்.
இதை டிஃபன் சாதம் என எதற்குவேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பவை கருணைகிழங்குகள்.
கருணைக்கிழங்கின் நன்மைகள்
மூல நோய்க்கு மருந்தாகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்தது. மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கிறது. பசியை தூண்டி இரைப்பைக்கு பலமளிக்கிறது.
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால் தொடர்ந்து கருணைக்கிழங்கு எடுக்க வேண்டும். உடலில் சூட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. கல்லீரலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது. குடலில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பை குறைக்கிறது. ரத்தம் உறைதலை அதிகரிக்கிறது. பெண்களின் ஹார்மோன்கள் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. முடக்கு வாதம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கருணைக்கிழங்கை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
குறிப்பு
இதை வாங்கி உடனடியாக சமைக்க முடியாது. சிறிது நாட்கள் காயவிட்டுதான் சமைக்க வேண்டும் அல்லது வாங்கும்போதே காய்ந்த கிழங்காக வாங்க வேண்டும்.
நன்றி - விருந்தோம்பல்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்