உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் கம்பு தயிர் சாதம்! மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட சுவை அள்ளும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் கம்பு தயிர் சாதம்! மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட சுவை அள்ளும்!

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் கம்பு தயிர் சாதம்! மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Oct 21, 2024 01:42 PM IST

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் கம்பு தயிர் சாதத்தை வெயிலுக்கு இதமாக மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட சுவை அள்ளும். இந்த ரெசிபியை சேமித்து வைத்துக்கொண்டு கோடையில் உபயோகித்துக்கொள்ளுங்கள்.

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் கம்பு தயிர் சாதம்! மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட சுவை அள்ளும்!
உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் கம்பு தயிர் சாதம்! மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட சுவை அள்ளும்!

வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து கிடைக்காமல் போகிறது. கம்பு அந்த குறையை போக்கி, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகிறது. இதை ராஜ்மா, பாசிபருப்பு, கொண்டடைக்கடலை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உடலுக்கு மேலும் பல நன்மைகளை வழங்குகிறது.

கம்பில் பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது. கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது. கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது. உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது. குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.

கம்பு தயிர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

கம்பு – ஒரு கப்

பால் – ஒன்றரை கப்

தயிர் – அரை கப்

கேரட் – 1 (துருவியது)

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

வர மிளகாய் – 2

இஞ்சி – ஒரு துண்டு (துருவியது)

மாங்காய் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிது

செய்முறை

முதலில் கம்பு-வை சுத்தம் செய்துகொள்ளவேண்டும். அதில் உள்ள தூசிகளை அகற்றிவிட்டு, சுத்தம் செய்த கம்பை காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு, ரவைப் பதத்துக்கு உடைத்துக்கொள்ளவேண்டும்.

உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவேண்டும். 4 முதல் 5 விசில் விட்டு, இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அத்துடன் கறிவேப்பிலை, வர மிளகாய், பொடித்த பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவேண்டும்

இறுதியில், உப்பு, பொடியாக நறுக்கிய மாங்காய், துருவிய கேரட், தயிர், தேவையான அளவு சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். தயிர் சாதம் எப்போது குழைவாகத்தான் இருக்கவேண்டும். எனவே நன்றாக கிளறிக்கொள்ளவேண்டும்.

கொத்தமல்லித்தழை தூவினால் சுவையான கம்பு தயிர் சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள மாங்காய், எலுமிச்சை, பூண்டு, நார்த்தங்காய் ஊறுகாய் அல்லது புதினா, மல்லி, தக்காளி தொக்கு அல்லது உருளை, வாழைக்காய் வறுவல் என அனைத்தும் ஏற்றதுதான்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.