Jealousy : பொறாமை! நல்லதா? கெடுதலா? ஒரு அலசல்!
Jealousy : பொறாமை! நல்லதா? கெடுதலா? ஒரு அலசல்!
இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் இயல்பான விஷயம். ஒருவகையில் பரிணாமவளர்ச்சிப்படி மனிதனை மேம்படுத்தக்கூடிய காரணிகளில் ஒன்றாகவும் இருக்கும்.
ஏனென்றால் நம்மிடம் ஒரு போதாமை ஒரு நிறைவின்மையை உணரும்போதுதான் நாம் பொறாமைப்படுவோம்.
இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகும்.
அந்த பொறாமையை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதே நாம் முன்னேற்றத்தை தீர்மானிக்கும் செயல்.
ஒன்று அதனை நேர்மறையாக எடுத்து தனது திறனை மேம்படுத்தி முன்னேறுதல். இது தன்னம்பிக்கையும் தெளிவும் உள்ளவர்கள் செயல்.
இரண்டாவது பொறாமை அடிப்படையில் அதனை தரக்குறைவான வழிகளில் வெளிப்படுத்தி தனது நிலையை தாழ்த்திக்கொள்ளுதல். எந்நேரமும் தாழ்வு மனப்பான்மையலும், தன்மீது நம்பிக்கையற்ற நிலையும் உள்ளவர்கள் செய்யும் செயல்.
எதற்காக பொறாமை என்பதில் முதலில் ஒரு தெளிவு வேண்டும்.
ஒருவரின் எழுத்து, ஓவியம், இசை போன்ற திறமைகள் மீது பொறாமை கொள்ளலாம். அதனை நாமும் கற்றகலாம் அல்லது அறிந்திருப்பின் அதனை செம்மைப்படுத்தலாம்.
ஒருவரின் ஒழுங்கு, கடின உழைப்பு நற்பழக்கங்களின் மீது பொறாமை கொள்ளலாம். நாமும் உடற்பயிற்சி செய்யலாம். ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஆனால் மாறாக நாம் ஒருவரின் தோற்றத்தின் மீது பொறாமை கொண்டு பலனில்லை. அது நம் மூதாதையர்கள் வழி வருவது. உங்களின் கருப்பு நிறத்தை நீங்கள் வெறுத்தால் உங்களின் பாட்டி, தாத்தா, அம்மா, அப்பாவை வெறுப்பதாகத்தானே பொருள். அது அவர்கள் வழி வருவதுதானே. இதில் மேம்படுத்த ஒன்றுமில்லை அல்லவா? அனைத்தும் பார்ப்பவர் மனவோட்டத்தின் படித்தானே அழகு.
அடுத்து ஒருவரின் செல்வம். அதிலும் பொறாமை கொள்வது என்பது வீணான செயல்தான். நம் முயற்சிக்கு நம் திறனுக்கு நம் முதலீட்டிக்கு உரிய பலன் மட்டுமே நமக்கு கிடைக்கும். இதை உணர்தல் வேண்டும்.
இங்கு நான் என் வரையில் இங்கு அனுபவப்பட பொறாமைகள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமானவை.
யார் யாருடன் நட்பாக இருக்கிறார்கள் அவர்கள் ஏன் நம்முடன் இல்லை ரகம். யாருக்கு லைக்கிடுகிறார்கள்? யாருக்கு ஆர்டீன் விடுகிறார்கள் என்றெல்லாம் ஆராயும் அளவு நேரமும், பொறுமையும் இருப்பது ஆச்சரியம் தான்!
ஒருவரின் உடை, அலங்காரம், திறமை, அவர்களுக்கு இருக்கும் நட்புக்குழாம் எல்லாவற்றின் மீதும் வரும் பொறாமை அதன் விதவித வெளிப்பாடுகள்.
ஒன்றே ஒன்றுதான் கவனிக்க வேண்டியது.
பொறாமை அவசியமான இயல்பான ஒன்று. அது வயிற்றெரிச்சலுடன் கூடிய எதிர்மறை உணர்வாக மாறாத வரை. அப்படி ஆகும்பட்சத்தில் நாம் யார் மீது பொறாமை கொள்கிறோமோ அவர்களுக்கு துளியும் நட்டமோ தாழ்வோ பாதிப்போ இல்லை.
ஆனால் அதை நினைத்து நமது உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் கெடும். நண்பர்களை இழப்போம். சூழல் கெடும். எல்லாவற்றையும் கடந்து எப்போதாவது வார்த்தைகளில் வெளிப்பட்டு இதுவரை நாம் கட்டிக்காத்த நற்பெயர் மாண்பு எல்லாமும் சிதையும்.
ஒருவர் மீது தோன்றும் சிறு பொறாமையால் நாம் முன்னேறுகிறோமா அல்லது இன்னமும் தரம் தாழ தயாராகிறோமா என்பது முழுக்க முழுக்க நமது தேர்வு மட்டுமே.
ஆகவே, ஆரோக்கியமாக பொறாமை கொள்வோம்!
ஷோபனா நாராயணன் என்பவரின் முகநூல் பதிவில் இருந்து இங்கு பகிரப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்