தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Is Saffron Good For Pregnant Women

Women Health: கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிடுவது நல்லதா?

I Jayachandran HT Tamil
Mar 25, 2023 03:29 PM IST

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டுவது நல்லதா? பக்க விளைவு என்ன? என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டுவது நல்லதா?
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டுவது நல்லதா?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் காஷ்மீரில் விளையும் பயிர்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது குங்குமப்பூ. இதன் சிறப்புகளும், மருத்துவக் குணங்களும் ஏராளமானவை. மசாலாக்களின் ராஜா என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. முகப்பூச்சுகள், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலிருந்து கர்ப்பிணிகளின் கருவைப் பாதுகாப்பது வரை இதன் பயன்பாடுகள் ஏராளம். இதற்கு ஜபரான், கூங், கேசர் ஆகிய பெயர்களும் உள்ளன.

உலக அளவில் ஈரான், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் குங்குமப்பூக்களுக்கு வரவேற்பு அதிகம்.

இதன் சுவையும் மணமும் கவர்ந்து இழுக்கக்கூடியது. சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். கர்ப்பிணிகளுக்குக் குறிப்பாக இதன் மீது ஈர்ப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டதாக விளங்குகிறது.

அழகு மட்டுமின்றி புற்றுநோய், முடி உதிர்வு உள்ளிட்ட பல சிக்கல்களுக்கும் ,நோய்களுக்கும் கூட இதைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் பிரச்னையின் போது ஏற்படும் வலி குணமாக, இது பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் எந்த வித மருத்துவ ஆதாரங்களும் இல்லை.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிடலாமா?

உண்மையில் குழந்தையின் நிறத்துக்கும் குங்குமப்பூவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மரபணுதான் குழந்தையின் நிறத்தைத் தீர்மானிக்கிறது

கர்ப்பிணிகள்பாலில் குங்குமப்பூவைப் போட்டுப் பருகினால், அதன் மணமும் சுவையும் கர்ப்பிணியின் வாந்தி எடுக்கும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. பசியையும் தூண்டுகிறது.

வயிற்றில் குழந்தை இருக்கும்போது கர்ப்பிணிகளால் அதிகம் சாப்பிட முடியாது. சாப்பிட்டாலும் வாந்தி வருவது போன்ற உணர்வே இருக்கும். இதனால் பெரும்பாலான கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துக் குறைபாடும், உடல் ஆற்றல் குன்றியும் காணப்படுகின்றனர். குங்குமப்பூ இந்த சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக இருக்கிறது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்தால், அது உடனே புத்துணர்ச்சி தந்து மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ‘மூட் ஸ்விங்’ எனப்படும் மன மாற்றத்தைச் சீராக்கி மன அமைதியைத் தருகிறது.

கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக முகத்தில் மாற்றம் ஏற்படும். முதிர்ச்சியடைந்த கவலையான தோற்றத்தைத் தரும். இந்த நேரத்தில், குங்குமப்பூவைப் பாலில் கலந்து சாப்பிட்டால், முகப்பொலிவை அதிகரித்து, அழகான தோற்றத்தை தரும்.

குங்குமப்பூவில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் அதிகம் உள்ளன. இது, செல்களில் உள்ள தேவையற்றப் பொருட்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

கர்ப்ப காலத்தில் மற்ற நேரங்களை விட ஜீரணம் மெதுவாக நடக்கும். இதனால் இரைப்பையில் அசிடிட்டி பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னையைக் குணப்படுத்தும் இயல்பு குங்குமப்பூவுக்கு உண்டு.

குங்குமப்பூ ஜீரணத்தைத் துரிதப்படுத்துவதால் சரியான நேரத்தில் பசி எடுக்கிறது. இதனால், கர்ப்பிணிகளால் அதிகம் சாப்பிட முடிகிறது. குழந்தையின் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக முடி அதிக அளவில் உதிரும்.குங்குமப்பூ முடி உதிர்தலைத் தடுக்கிறது.

நாள் ஒன்றுக்கு பத்து கிராமுக்கு மேல் குங்குமப்பூவை எடுத்துக்கொண்டால் அது ஆபத்துதான். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

பக்க விளைவுகள்

நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் என்பது ஏற்புடைய அளவு. 10 கிராம் வரை சாப்பிடலாம். ஆனால், 12-20 கிராம் அளவுக்கு ஒரே நாளில் சாப்பிட்டால் உயிருக்கே பிரச்னையாகி விட வாய்ப்பு உள்ளது.

பாலூட்டும் தாய்மார்கள் அதிக அளவில் குங்குமப்பூவை எடுத்துக்கொண்டால், தாய்ப்பாலே குழந்தைக்கு ஆபத்தாக முடியக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அளவுக்கதிகமான குங்குமப்பூ, இதயத்தைப் பாதிக்கும்.

கர்ப்ப காலத்தில் மருத்துவரைச் சந்திக்கும்போது, நீங்கள் குங்குமப்பூ சாப்பிடுபவராக இருந்தால், சாப்பிடும் முறை, அளவு, நேரம் உள்ளிட்டவற்றை மருத்துவருக்குத் தெளிவாக விளக்கிக் கூறி விட வேண்டும். அப்போதுதான் உடலில் ஏற்படும் மாறுதல்கள் எதாவது குங்குமப்பூவால் ஏற்பட்டதா என்பதை மருத்துவரால் கண்டுபிடித்து அதற்கேற்ற சிகிச்சையும் அறிவுரையும் வழங்க முடியும்.

WhatsApp channel

டாபிக்ஸ்