Ajinomoto:உணவில் போடப்படும் அஜினோமோட்டோ உடலுக்கு நல்லதா? மருத்துவர் அருண்குமார் கூறுவது என்ன?
Ajinomoto:சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார் உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்தலாமா எனவும், அதன் பெயரில் பரப்பப்படும் வதந்திக்களுக்கும் அவரது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

சமீப காலமாக சமூக வலைத் தளங்களில் பல உணவுகள் குறித்து பொய்யான வதந்திகள் பரப்பபடுகின்றன. அதிலும் இதை சாப்பிடாதீர்கள்! என்ன ஆபத்து என பல அச்சம் ஊட்டும் வார்த்தைகளால் நம்மை பயமுறுத்துகின்றனர். ஆனால் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை குறித்து நாம் தேடி படிப்பதில்லை. அதற்கான காரணங்கள் குறித்தும் கேள்வி எழுப்புவதில்லை. இந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக பரப்பப்பட்டு வரும் ஒரு செய்தி உள்ளது. அது தான் ஆசியாவில் பெரும்பான்மையாக சமையலில் பயன்படுத்தும் அஜினோமோட்டோ என்ற உப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற செய்தி ஆகும். ஆனால் இது குறித்து தற்போது பிரபல குழந்தைகள் நல மருத்துவரும் உணவியல் நிபுணருமான அருண் குமார் அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளாற்ற. அதில் அஜினோமோட்டோ குறித்து அவர் பகிர்ந்த அனைத்தையும் இங்கு விரிவாக காண்போம்.
அஜினோமோட்டோ என்றால் என்ன?
அஜினோமோட்டோ என்பது மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) என்ற உப்பை தயாரிக்கும் ஜப்பானை சேர்ந்த நிறுவனத்தின் பெயராகும். இது ஆசிய சமையலில் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இது கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற தாவர அடிப்படையிலான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த அஜினோமோட்டோவை உணவில் சேர்த்து சாப்பிடும் போது உமாமி (Umami) என்ற புது சுவை உணர்வை கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் இந்த அஜினோமோட்டோவை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலும் சில உணவகங்களில் இதனை பயன்படுத்துக்கிறார்கள்.
அஜினோமோட்டோ ஆபத்தா?
அஜினோமோட்டோ என்பது சோடியம் மற்றும் குளுட்டமேட் சேர்ந்த மூலமாகும். இதில் உள்ள சோடியம் நாம் சாதாரணமாக உணவில் சேர்க்கும் சோடியம் குளோரைடு எனும் உப்பின் ஒரு பகுதியாகும். குளுட்டமேட் என்பது மூளை கடத்திக்கு உதவும் ஒரு வேதிப்பொருள் ஆகும். மேலும் இந்த குளுட்டமேட் உப்பு நாம் அன்றாடம் சாப்பிடும் தக்காளி, காளான், சீஸ் மற்றும் கடல் பாசி உட்பட பல உணவுகளில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது.
வயிற்றில் என்ன நடக்கிறது?
நமது வயிற்றுக்குள் இந்த சோடியம் குளுட்டமேட் சென்றவுடன் சோடியம் தனியாகவும், குளுட்டமேட் தனியாகவும் பிரிந்து விடும். தனியாக பிரிந்த இந்த குளுட்டமேட்டை வயிற்றில் உள்ள என்ட்ரோசைட்ஸ் (Entrocytes) எனும் செல்களுக்கு உணவாக பயன்படுகிறது. இந்த செல்களே இதனை 95 சதவீதம் சாப்பிட்டு விடும். இந்த உப்பு நமது இரத்தத்தில் கலக்க முடியாது. மேலும் இந்த குளுட்டமேட்டால் மூளைக்கு செல்லவே முடியாது. இது மூளையை பாதிக்கும் என்ற வதந்தி பொய்யாகும்.
உண்மை இது தான்?
மேலும் இந்த அஜினோமோட்டோவை அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால் தலை சுற்றல் போன்ற பிரச்சனை வருவதாக கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது இதனால் பாதிப்பு இல்லை என நிரூபிக்கப்பட்டது. மேலும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உட்பட உலகின் பல உணவு தர அமைப்பால் அஜினோமோட்டோ பாதுகாப்பானது என உறுதி அளித்துள்ளன. இதனை தாராளமாக விருப்பப்பட்டால் உணவில் சேர்த்து சாப்பிடலாம் எனவும், இதனை கண்டு அச்சப்பட வேண்டாம் எனவும் மருத்துவர் அருண் குமார் கூறினார்.

டாபிக்ஸ்