வாழைக்காயில் இப்படி ஒரு வித்யாசமான குழம்பு வைக்க முடியுமா? அத்தனை ருசி நிறைந்தது!
வாழைக்காயில் இப்படி ஒரு ருசியான குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?
வாழைக்காயில் ஒரு வித்யாசமான குழம்பு வைக்கலாம். அது நல்ல ருசியாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்கத்தூண்டும் சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தனை ருசி நிறைந்த வாழைக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 4
மிளகாய்த் தூள் – 4 ஸ்பூன்
மல்லித் தூள் – 4 ஸ்பூன்
சோம்புத் தூள் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் – 2 ஸ்பூன்
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
புளி – எலுமிச்சை பழ அளவு
சின்ன வெங்காயம் – 10 முதல் 15 வரை
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்
கான்ஃப்ளார் டாவு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
செய்முறை
வாழைக்காயை நன்றாக கழுவி, நீள வாக்கில் மீன் துண்டுகள் போல் நறுக்கிக்கொள்ளவேண்டும். இந்தக்குழம்பு சைவ மீன் குழம்பு என்றும் அழைக்கப்படுகிறது. நறுக்கிய வாழைக்காய்களை உப்புத் தண்ணீரில் போட்டு வைக்கவேண்டும். அப்போதுதான் வாழைக்காய் நிறம் மாறாது.
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், மல்லித்தூள், சோம்புத் தூள், சீரகத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கார்ன்ஃப்ளார், கடலை மாவு சேர்த்து நல்ல கெட்டடியாக பிசைந்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளவேண்டும். நல்ல கெட்டியான பதத்துக்கு மாவை கரைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த மசாலா கலவையை, தண்ணீரை வடித்து வாழைக்காயுடன் சேர்ந்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். வாழைக்காயின் இருபுறமும் மசாலாக்கள் நன்றாக படும்படி பொறுமையாக பூசி நன்றாக ஊறவிட்டு, இந்த வாழைக்காயை பஜ்ஜி போல், எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அனைத்தும் பொரிந்து வந்தவுடன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக குலைய வதக்கவேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியவுடன், அதில் கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் பச்சை வாசம் போகும் வரை மிதமான தீயில் வதக்கவேண்டும். பின்னர் புளிக்கரைசலை சேர்க்கவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். குழம்பு பதத்துக்கு வந்தவுடன், மூடி வைத்து 15 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும்.
குழம்பு நன்றக கொதித்த பின்னர், பொரித்து வைத்துள்ள வாழைக்காய்களை அதில் சேர்த்து, மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். அடுத்து அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடி வைத்துவிடவேண்டும்.
இது சைவ மீன் குழம்பு என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இதை நாம் பண்டிகை நாட்களில் கூட வீட்டில் செய்யலாம். மீனே சாப்பிடக்கூடாது விரத நாட்கள், புரட்டாசி மாதங்களிலும் இந்த சைவ மீன் குழம்பை செய்து, சாப்பிட்டு மகிழலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்