குழந்தைகளுக்கு வெள்ளி பாத்திரங்களில் உணவு அளித்தால் கிடைக்கும் நன்மைகள்!
Kids Health: குழந்தைகளுக்கு வெள்ளி பாத்திரங்களில் உணவு அளித்தால் எவ்வளவு நன்மைகள் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
பெற்றோர் எப்போதுமே தங்களுக்குப் பிறந்த குழந்தைகளைத் தொடக்கத்தில் இருந்தே கண்ணும் கருத்தாக வளர்க்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அதற்காக எவ்வளவு செலவு ஆனாலும் கவலைப்பட மாட்டார்கள். குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் ஆகாது என்பதைப் பெரும்பாலானாவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர். அதிக சூட்டில் ஸ்டெரிலைஸ் செய்யக்கூடிய சிறப்பு பிளாஸ்டிக் பாட்டில்களைக் கூட பயன்படுத்தக்கூடாது என்று இப்போதெல்லாம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் கண்டிப்பாகக் கூறிவிடுவதால் அதையும் வாங்காமல் கண்ணாடி பாட்டில்களை சில பெற்றோர் பயன்படுத்துகின்றனர்.
அந்தக் காலத்தில் எல்லாம் அலுமினியம் அல்லது சங்குகளைப் பயன்படுத்தி மருந்து அல்லது பால் தருவார்கள். காலப்போக்கில் அலுமினியமும், சங்குகளும் வழக்கொழிந்து போய்விட்டன.
உண்மையில் எவர்சில்வர் ஸ்பூன்களிலேயே குழந்தைகளுக்குப் பாலூட்டுமாறு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏழை, எளிய, நடுத்தர வகுப்பினர் இதைக் கேட்டு எவர்சில்வர் ஸ்பூன்களில் குழந்தைகளுக்கு பால் புகட்டத் தொடங்கிவிட்டனர்.
இதில் சற்று வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெள்ளி ஸ்பூன், வெள்ளிக் கிண்ணங்களையும் பால் புகட்டுவதற்கும், உணவு அளிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் பயன்படுத்தும் வெள்ளிப் பாத்திரங்கள் குழந்தைகளுக்கு ஏராளமான உடல் நல நன்மைகளை அளிக்கின்றது என்று உணர்ந்தால் ஆச்சரியப்பட்டுப் போய்விடுவீர்கள்.
பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் வெள்ளிக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு வெள்ளிப் பாத்திரங்கள் மூலம் நோய்த் தொற்று பரவுவது அரிதாகிறது.
வெள்ளியில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் குணம் உள்ளதால் அதில் உணவருந்தும் குழந்தைகளின் உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பிளாஸ்டிக், சிந்தடிக், கண்ணாடி பாத்திரங்களில் கண்ணுக்குத் தெரியாமல் நிறைந்திருக்கும் கிருமிகள் வெள்ளிப் பாத்திரங்களில் தங்குவதில்லை. இதில் பாக்டீரியாக்களைக் கொல்லும் திறன் இருப்பதாலும், தண்ணீரை அதிகமான சூட்டில் கொதிக்க வைத்து வெள்ளிப்பாத்திரங்களை கழுவும்போது பாத்திரங்கள் சேதமடையாது. அத்துடன் அதிக சூட்டில் பாக்டீரியாக்கள் உயிர் பிழைக்க முடியாது என்பதால் வெள்ளிப் பாத்திரங்கள் முற்றிலும் பாதுகாப்பு தருகிறது.
வெள்ளிப்பாத்திரங்களில் வைக்கப்படும் பதார்த்தங்கள் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது என்பதால் குழந்தைகளுக்கு அந்த வகையிலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.
உடல் சூட்டை சீராக வைத்துக்கொள்ளும் பண்பு இருப்பதாலேயே நம் முன்னோர்கள் வெள்ளி அணிகலன்களை அணிந்து வந்தனர். அதேபோல் குழந்தைகளுக்கு அணிவிக்கும் இடுப்புக்கொடி, கொலுசு, தண்டையும் வெள்ளியால் செய்யப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் உடல் சூட்டை சீராக்கும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்த ஏற்ற வெள்ளி பாத்திரங்கள்-
கூழ், சாதம், சூப், மசித்த உணவுகளை ஊட்டுவதற்கு வெள்ளிக் கிண்ணத்தைப் பயன்படுத்தலாம்.
அதேபோல் சாதம், டிபன் வகைகளை வெள்ளித்தட்டுகளில் வைத்துத் தரலாம்.
பால், ஜூஸ், தண்ணீர் போன்ற திரவ உணவுகள் தர வெள்ளி டம்ளர் பயன்படுத்தலாம்.
கைக்குழந்தைகளுக்கு பால், மருந்து அளிக்க வெள்ளிச் சங்கு பயன்படுத்தலாம்.
வெள்ளி டிபன் பாக்ஸ்களிலும் உணவுகளைக் கொடுத்தனுப்பலாம். ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் நீங்கள் அதை சுடுதண்ணீர் கொதிக்க வைத்து கழுவ வேண்டும். ஆப்ப சோடாவைப் போட்டு கழுவினால் கறைகள்,அழுக்குகள் சுத்தமாக நீங்கிவிடும்.
உணவு, பால் என எதைக் கொடுக்கவும் வெள்ளி ஸ்பூன்களைப் பயன்படுத்தலாம்.
இதில் முக்கியமாகப் பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எந்த வெள்ளிப் பாத்திரங்களிலும் எந்தவிதமான டிசைன்களும் இருக்கக்கூடாது. ஏனென்றால் அதன் வடிவங்களின் இடுக்குகளில் அழுக்குகள் போய் அப்பிக் கொள்ளும். இதனால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட மிக மிக அதிக வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளுக்கான வெள்ளிப்பாத்திரங்கள் அனைத்தும் மொழுக்கென்று டிசைன் இல்லாதவையாகப் பார்த்து வாங்குங்கள்.