Cooking Oil: சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? - செக்கு எண்ணெய்யின் நன்மைகள்.. மருத்துவர் கு.சிவராமன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cooking Oil: சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? - செக்கு எண்ணெய்யின் நன்மைகள்.. மருத்துவர் கு.சிவராமன் பேட்டி!

Cooking Oil: சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? - செக்கு எண்ணெய்யின் நன்மைகள்.. மருத்துவர் கு.சிவராமன் பேட்டி!

Marimuthu M HT Tamil
Jan 23, 2025 05:36 PM IST

Cooking Oil: சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? - மருத்துவர் கு.சிவராமன் பேட்டி குறித்துப் பார்ப்போம்.

Cooking Oil: சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?  - மருத்துவர் கு.சிவராமன் பேட்டி!
Cooking Oil: சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? - மருத்துவர் கு.சிவராமன் பேட்டி!

இதுதொடர்பாக சித்த மருத்துவர் கு.சிவராமன் ஹெல்த்தி தமிழ்நாடு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’எண்ணெய் பல நூறு ஆண்டுகளாக நாம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். இப்போது பார்த்தோம் என்றால் கடலை எண்ணெய் பின் காலத்தில் வந்த எண்ணெய். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பதெல்லாம் இன்றைக்கு வந்த விஷயம். கடுகு எண்ணெய்யோ, நல்லெண்ணெய்யோ, தேங்காய் எண்ணெய்யோ, நெடுங்காலமாக நாம் பயன்படுத்திக்கொண்டு வருகிற ஒரு விஷயம் தான்.

அப்படியிருக்கும்போது கேடான எண்ணெய்யாக இது இருந்திருந்தால், இது இவ்வளவு ஆண்டுகள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் செக்கு நம்மோடு இருந்து வந்த ஒரு பொருளாக இருந்திருக்கிறது. ஆலை இல்லாத ஊரில் இழுப்பைப் பூ சர்க்கரை என்னும் சொல்லாடலில், செக்கு ஆலையை வைத்து தான் சொல்லியிருக்கிறார்கள்.

முதலில் நல்லெண்ணெய் என்கிற பெயருக்குப் பின்பே, அது உடலுக்கு எவ்வளவு நல்ல எண்ணெய் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

நல்லெண்ணெய்யின் நன்மைகள்:

கடலையில் இருந்து எடுப்பதை கடலை எண்ணெய் என்கிறோம். தேங்காயில் இருந்து எடுப்பதை தேங்காய் எண்ணெய் என்று சொன்னோம். அப்படியிருக்க, எள்ளில் இருந்து எடுப்பதை எள் எண்ணெய் என்று சொல்லாமல், ஏன் நல்லெண்ணெய் என்று சொல்கிறார்கள் என்றால், அது பன்னெடுங்காலமாக மக்களால் உடலுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் நல்லெண்ணெய் என்பதால் தான்.

குறிப்பாக, பெண் குழந்தைகள் மாதவிடாயை ஒட்டி, அவரது கருப்பை நன்றாக இருக்கவேண்டும் என்றால் நாம் பயன்படுத்தப்படவேண்டியது நல்லெண்ணெய்தான். ஒவ்வொரு முறை மாதவிடாய் செல்லும் பதின்மகுழந்தைகளுக்கு, உளுந்தங்களி வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து உண்ணக்கொடுக்கலாம்.

ஏன் செக்கு எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும்?

முன்பு எல்லாம், எண்ணெய்யை எண்ணெய் வித்துக்களோடு சேர்த்து, கொஞ்சம் கருப்பட்டி, இளநீர் விட்டு ஆட்டி, கடைசியாக அந்த எண்ணெய் பிழிந்து எடுப்பார்கள். எள் ஒரு கிலோ போட்டால், 35 விழுக்காடு முதல் 40 விழுக்காடு எள் கிடைக்கும்.

ஆனால் இன்றைய புதிய தொழில்நுட்பங்களில் அதிகம் பிழிந்து எல்லாம் எடுப்பதில்லை. ஹெக்சேன் என்கிற ஒரு ரசாயனத்தைப் போட்டால், அது எண்ணெய்வித்துக்களில் இருக்கும் எண்ணெய்யை எல்லாம் கக்கிவிடும்.

அதன்பின், ஹெக்சேன் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தினால் அப்படியே போய்விடும். இந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தான் எண்ணெயை எடுக்கிறார்கள்.

இப்படி செய்வதால் கூடுதல் எண்ணெய் கிடைக்கும் என இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இருந்தாலும், சிறிதளவேனும் ஹெக்சேன் அந்த எண்ணெயில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக, ஈரலுக்கு எல்லாம் கெடுவிளைவிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் செக்கு எண்ணெய் நல்லது. மேலும் செக்கு எண்ணெய்யில் மணமும் நிறமும் நன்றாக இருக்கும். 

தேங்காய் எண்ணெய் தரும் நன்மைகள்:

அடுத்து தேங்காய் எண்ணெய் மிகச்சிறப்பான எண்ணெய் ஆகும்.ஆனால், சிலர் இதில் கொழுப்பு இருப்பதாக அஞ்சுகின்றனர். தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு மட்டும் இல்லை. இதில் இருக்கும் லாரிக் அமிலத்தில் இருந்து தான் கொழுப்பு எண்ணெய் உருவாகின்றது. லாரிக் அமிலத்தில் இருந்து வரும் மோனோலாரின் என்னும் பொருள் தான், மாரடைப்பு வராமல் தடுக்கப்பயன்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. அந்த மோனாலாரின் தான் நோய் எதிர்ப்புப் பொருளாக இருக்கிறது. இந்த மோனாலாரின் தேங்காயை தவிர வேறு எங்கும் இல்லை.  

தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த முடியாமல் போய்விட்டாலும், தேங்காய்ப்பால் ஆக, தேங்காய் சட்னியாக கொஞ்சமாவது தேங்காயை எடுத்துக்கொள்வது நல்லது.  குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் தேங்காய் எண்ணெய் கலந்து இருந்தால், உடல் எடையும் கூடும். நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். 

அடுத்து நாம் பயன்படுத்திய எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய். இன்னொரு கருத்தையும் சொல்கிறார்கள். என்னவென்றால், அனைத்து வகை எண்ணெய்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்த மருத்துவர்கள் சொல்கின்றனர். எனவே, நம் நாட்டின் பாரம்பரிய செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவோம்.’’ என சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசியிருக்கிறார். 

நன்றி: ஹெல்த்தி தமிழ்நாடு

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.