'சாயங்காலம் கேழ்வரகை இப்படி சூப் செய்து குடிங்க.. ஹெல்த்தி’: எளியமுறையில் ராகி சூப் செய்முறை
பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம். கேழ்வரகு ஒரு நல்ல உணவு ஆகும். கேழ்வரகு என்னும் ராகியைக் கொண்டு சூப் செய்து குடிப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு நன்மை பயக்கும்.

திடீர் திடீரென பருவ காலம் மாறி சித்திரையிலும் மழை பெய்து வருகிறது. இதனால், சிலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பொதுவான நோய்கள் வருகின்றன.
ஆனால் இவற்றை நாம் சாதாரணமாகப் புறக்கணிக்க முடியாது. எனவே, பொதுவான நோய்களுக்கு எதிராகப் போராட போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வது அவசியம்.
அப்படி ஒரு ராகி என்னும் கேழ்வரகு ஒரு நல்ல உணவு ஆகும். கேழ்வரகு என்னும் சிறுதானிய உணவு, உங்கள் பெரும்பாலான உடல் நலப் பிரச்னைகளைக் குணப்படுத்தும்.
கேழ்வரகு சூப்கள் நம் உடலை உற்சாகப்படுத்த உதவுகின்றன. சூப்கள் திரவ வடிவில் இருப்பதால், அவை உங்களை நீண்ட நேரம் உங்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
அதேபோல், குளிர்காலத்தில் எளிதாக தயாரிக்கக்கூடிய கேழ்வரகு சூப், உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.
கேழ்வரகு தினையை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 5,000 ஆண்டுகளாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. அதைத் தவிர, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் கேழ்வரகு தினை மிகவும் பிரபலமாக உள்ளது. அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட ராகி என்னும் கேழ்வரகு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
ராகி என்னும் கேழ்வரகு சற்று இனிப்புச் சுவை கொண்ட தானியமாகும். அரிசியைப் போலவே, கேழ்வரகுக்கும் தனித்துவமான சுவை உண்டு.
ஆனால், இது மற்ற உணவுகளிலிருந்து சுவைகளை உறிஞ்சுவதில் நன்கு வேலை செய்கிறது.
கேழ்வரகு சூப் செய்யத்தேவையான பொருட்கள்:(மூன்று பேர் அளவுக்கு)
- சின்ன வெங்காயம் -10,
- வெள்ளைப்பூண்டு - 6 முதல் 7 பல்,
- பீட்ரூட் - 2 நறுக்கியது,
- கேரட் - 3 நறுக்கியது,
- பீன்ஸ் - 6 நறுக்கியது,
- உப்பு - தேவையான அளவு,
- மிளகு - தேவையான அளவு,
- கேழ்வரகு - 1 கப்,
- புதினா - சிறிதளவு,
- நீர் - இரண்டு கப்,
- பால் - 100 மி.லி
மேலும் படிக்க: ‘நாவில் எச்சிலை ஊறவைக்கும் ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் கூழ் கறி செய்வது எப்படி’: படிப்படியான வழிமுறை!
கேழ்வரகு சூப் செய்முறை:
கேழ்வரகு தினையை நன்றாகக் கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, எடுத்து வைத்திருந்த வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் நறுக்கிய பீட்ரூட், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் குறைந்த தீயில் தாளித்துவிடவும். பின்னர் உப்பு, மிளகு, சுவைக்கேற்ப புதினாத்தழைகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும்.
அதன்மேல் கழுவி வைத்த கேழ்வரகு தினையைச் சேர்த்து விரைவாகக் கிளறவும். 1 கப் நீர் சேர்த்து, குறைந்த முதல் நடுத்தர தீயில் குக்கரை வைத்து 5 விசில் வரும் வரை சமைக்கவும். பின்னர், பிரஷர் குக்கர் குளிர்ந்த பிறகு, கூடுதலாக ஒரு கப் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கவும். 15 நிமிடத்தில் சூடான கேழ்வரகு என்னும் ராகி சூப் தயார். அதன்மேல் மிளகுத்தூளைக் கலந்து, அன்புக்குரியவர்களுக்கு கேழ்வரகு சூப்பினைப் பரிமாறவும்.

டாபிக்ஸ்