International Day Of Peace 2024: உலக அமைதி தினம் - முக்கியத்துவம், அறிந்ததும் அறியாததுமான சூப்பர் தகவல்கள்!
International Day Of Peace 2024: உலக அமைதி தினம் - முக்கியத்துவம், அறிந்ததும் அறியாததுமான சூப்பர் தகவல்கள் குறித்துப் பார்ப்போம்.
International Day Of Peace 2024: ஒருவர் ஆடி ஓடி சம்பாதிப்பதே இறுதிக்காலத்தில் அமைதியாக வாழத்தான் என்பார்கள். உலகெங்கிலும் வன்முறை மற்றும் மோதல்களை நிறுத்துவதற்காகவும், அமைதியை ஊக்குவிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அமைதி தினம் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளில் சமாதானத்தைப் போதிப்பதையும் மற்றும் மோதலுக்கான தீர்வை வலியுறுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
சர்வதேச அமைதி தினம் பெரும்பாலும் ஒரு புறா மற்றும் ஆலிவ் கிளை சின்னங்களுடனே சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கு புறா அமைதி மற்றும் சுதந்திரத்தைக் குறிக்கிறது. அதே நேரத்தில் ஆலிவ் கிளை பண்டைய காலங்களிலிருந்து அமைதியின் பாரம்பரிய சின்னமாக இருந்து வருகிறது.
உலக அமைதி நாள்:
உலக அமைதி தினம் செப்டம்பர் 21ஆம் தேதியன்று, நாடுமுழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை செப்டம்பர் 30, 1981ஆம் ஆண்டு 36 தீர்மானங்களை நிறைவேற்றியது. இது உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
அதன்படி, முதல் உலக அமைதி தினம் செப்டம்பர் 21, 1982ஆம் ஆண்டு அன்று கொண்டாடப்பட்டது. 2001ஆம் ஆண்டுமுதல், இந்த தேதி உறுதிபடுத்தப்பட்டது. இந்த நாளில் அமைதியை ஊக்குவிப்பதற்கும் உலகெங்கிலும் உள்ள அமைதி காக்கும் முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உரியநாளாக கடைப்பிடிக்கப்பட்டது.
உலக அமைதி நாளின் முக்கியத்துவம்:
உலக அமைதி தினம் என்பது யுத்த தீர்வுக்கான ஐ.நா.வின் உறுதிப்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனி மனிதர்கள், சமூக குழுக்கள் மற்றும் நாடுகளை மிகவும் அமைதியான மற்றும் நியாயமான உலகத்தை நோக்கி செயல்பட ஊக்குவிக்கிறது.
உண்மையான அமைதி என்பது வன்முறை இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, அனைத்து உறுப்பினர்களும் நாம் நல்ல பொருளாதாரத்துடன் வாழலாம் என்னும் நம்பிக்கையை உருவாக்குவதையும் உள்ளடக்கியுள்ளது.
மக்கள் மற்றும் நாடுகளிடையே அமைதி குறித்த உரையாடல், புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நாளாக இது தொடர்கிறது.
இனப்பிரிப்பு போன்ற எந்தவொரு பாகுபாடுமின்றி, அனைவரும் சமமாக நடத்தப்படும் ஒரு உலகத்தை உருவாக்க இந்த நாள் முயல்கிறது. மேலும் இந்த நாள் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் அமைதியை நிலைநாட்டுவதற்கும், சமாதான கலாசாரத்தை உருவாக்குவதற்கும் ஒரு தேதியை வழங்குகிறது.
உலக அமைதி நாள் கொண்டாட்டம்:
1986ஆம் ஆண்டில், நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஐக்கிய நாடுகளின் அமைதி மணி திறக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அமைதி தினத்தன்று ஒரு சிறப்பு விழா இவ்விடத்தில் நடத்தப்படுகிறது. அங்கு உலக அமைதிக்கான அழைப்பை சமிக்ஞை செய்ய அல்லது விடுக்க, அந்த அமைதி மணி ஒலிக்கப்படுகிறது.
இந்த மணி, 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் குழந்தைகள் பலர் நன்கொடையாகக் கொடுத்த பணத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.
புத்தர் பிறந்த இடத்தைக் குறிக்கும் ஹனமிடோ (பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறிய கோயில்) மணிக்கூண்டை மாதிரியாகக் கொண்டு அமைதி மணி உருவாக்கப்பட்டது. இந்த அமைதி மணி ஆண்டுக்கு இரண்டு முறை ஒலிக்கப்படுகிறது.
அமைதிக்கான உலக தினத்தில், ஐக்கிய நாடுகள் செயலாளர், நிரந்தர தூதரகங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா செயலகத்தின் அதிகாரிகள் முன்னிலையில், உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்ய மணியை ஒலிக்கவிடுகிறார்.
உலகெங்கிலும், சர்வதேச அமைதி தினம் அமைதி அணிவகுப்புகள் மற்றும் கல்வித் திட்டங்கள் முதல் கலை கண்காட்சிகள் வரை பல்வேறு நிகழ்வுகள் மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அனுசரிக்கப்படுகிறது. இது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அகிம்சையுடன் வாழ்வதை வலியுறுத்துகிறது.
டாபிக்ஸ்