Idly Podi : இந்த ஒரு பொடி போதும்! டிபஃனுக்கு தொட்டுக்கலாம், பூண்டு சாதம், பொரியல், புளிக்குழம்பு என எதிலும் சேர்க்கலாம்
Idly Podi: இந்த ஒரு பொடி மட்டும் செஞ்சு வெச்சுடுங்க! டிபஃன், பூண்டு சாதம், பொரியல், புளிக்குழம்பு என எதிலும் சேர்க்கலாம்
தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
உளுந்தம்பருப்பு – அரை கப்
(வெள்ளை அல்லது கருப்ப உளுந்து என எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
(இட்டிலிப்பொடிக்கு அனைத்துப்பொருட்களையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கிய குறிப்பு)
கடலை பருப்பு – கால் கப்
(உளுந்தைவிட கடலை பருப்பு கம்மியாக இருக்க வேண்டும். இதற்கு அளவுகள் மிகவும் முக்கியம். அப்போதுதான் இட்லிப்பொடியின் சுவை நன்றாக இருக்கும்)
வேர்க்கடலை – அரை கப்
(தோலுடன் உள்ளது அல்லது தோல் நீக்கியது எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பச்சை கடலை அல்லது வறுத்தக்கடலை எது எடுத்தாலும் நாமும் ஒருமுறை வறுத்துக்கொள்ள வேண்டும்)
பொட்டுக்கடலை – அரை கப்
(இட்லிப்பொடியின் சுவையை அதிகரிக்கும். பொடியை உதிரியாக்கும்)
எள் – கால் கப்
(கருப்பு அல்லது வெள்ளை எள் என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கருப்பு எள் அதிக சுவை கொடுக்கும்)
(பொட்டுக்கடலை, எள் அனைத்தும் விரைவில் வறுபடும். எனவே கவனமாக வறுக்கவேண்டும்)
வர மிளகாய் – 15
(சாதாரண மிளகாய் அல்லது காஷ்மீரி மிளகாய் என எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். காஷ்மீரி மிளகாய் சேர்த்தால் நிறம் கூடுதலாக இருக்கும். காரம் அதிகமாக இருக்காது. மிளகாய் உங்களின் கார அளவுக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைத்து எடுத்துக்கொள்ளுங்கள்)
கடுகு – ஒரு ஸ்பூன்
(கடுகை மட்டும் தனியாக ஒரு தட்டில் கொட்டி வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற பொருட்களுடன் சேர்ந்துவிடக்கூடாது)
கல் உப்பு – தேவையான அளவு
கட்டி பெருங்காயம் – ஒரு கட்டி
(கட்டிப்பெருங்காயம் இல்லாவிட்டால் தூள் பெருங்காயம் எடுத்துக்கொள்ளலாம். கட்டிப்பெருங்காயம்தான் சிறப்பான சுவையைக் கொடுக்கும்)
பூண்டு – தோல் உறித்தது ஒரு கைப்பிடி
(பூண்டு சேர்த்துக்கொள்ளாதவர்கள் தவிர்த்துவிடலாம்)
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
(கறிவேப்பிலை அதிகம் சேர்த்தால் பொடியின் சுவை மாறிவிடும்.
அனைத்து பொருட்களையும் சிவக்க தனித்தனியாக வறுத்து ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.
கட்டிப்பெருங்காயம் மற்றும் பூண்டை எண்ணெய் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
பொடியை நீண்ட நாள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் எண்ணெய் சேர்க்கக்கூடாது. எண்ணெய் சேர்க்காமல் அனைத்து பொருட்களையும் வறுக்க வேண்டும். எண்ணெய் ஊற்றி வைத்தால் ஃபிரிட்ஜில் வைத்தால்தான் நீண்ட நாட்கள் வரும்
அனைத்தையும் ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு காய்ந்த மிக்ஸிஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வறுத்து ஆறிய மிளகாயை இரண்டாக உடைத்து சேர்க்க வேண்டும். அதிலே கட்டி பெருங்காயத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் அதை மட்டும் தனியாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக்ககொள்ள வேண்டும்.
கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, எள் மற்றும் வேர்க்கடலையில் சிறிதளவு என அனைத்தையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எஞ்சிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள், உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, உப்பு என அனைத்தையும் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
கல் உப்பு சேர்த்தீர்கள் என்றால் அதையும் வறுத்துதான் சேர்க்க வேண்டும். அதையும் மிளகாயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். மொத்தமாக அரைக்கும்போது அரைபடாமல் போக வாய்ப்பு உள்ளது.
தூள் உப்பு என்றால் அப்படியே சேர்த்துக்கொள்ளலாம். கொரகொரப்பாக அரைத்து எடுக்கும்போதுதான் சுவை நன்றாக இருக்கும். உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் நல்ல பொடியாகவும் அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.
இப்போது தனியாக எடுத்து வைத்த பூண்டு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து பல்ஸ் மட்டும் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை ஒன்றிரண்டாக இருப்பது நல்லது. சாப்பிடும்போது வாயில் கடிக்க சுவையாக இருக்கும்.
இதில் கறிவேப்பிலையை கையிலே பொடித்து போட்டுக்கொள்ள வேண்டும். எள் மற்றும் கடுகையும் இதில் பொடிக்காமல் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் தூள் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். இதில் எண்ணெய் சேர்த்துதான் சாப்பிடுவோம் என காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் சுவை அள்ளும்.
காரம் குறைவாக இருந்தால், வர மிளகாயை மீண்டும் வறுத்து நன்றாக பொடி செய்துதான் சேர்க்க வேண்டும். மிளகாய் பொடியை சேர்க்கக்கூடாது.
வறுக்கும்போது அடுப்பு குறைவாக மட்டுமே இருக்க வேண்டும். சாதத்திலும் போட்டு சாப்பிடலாம். பொரியல், பூண்டு சாதம், புளிக்குழம்பிலும் சேர்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்