Idly Podi : கமகம மணத்தில் இட்லிப்பொடி செய்ய வேண்டுமா? அதன் ரகசியம் இதுதான்! ட்ரை பண்ணுங்க!
Idly Podi : ரோட்டுக்கடை இட்லிப் பொடியை காரஞ்சாரமா எப்படி செய்யவது எப்படி? இதோ ரெசிபி, இதை செஞ்சு அசத்துங்க.
இட்லிப்பொடி ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைலில் செய்வார்கள். இது ரோட்டுக்கடை இட்லிப்பொடி. இந்தப்பொடியை இட்லியில் தடவி தோசை தவாவில் வறுத்து எடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சில ரோட்டுக்கடைகளில் அதுபோல் செய்து கொடுக்கப்படும். எனவே நீங்கள் ரோட்டுக்கடை ஸ்டைல் இட்லிப்பொடி செய்தீர்கள் என்றால், இதுபோல் இட்லியில் பிரட்டி தவாவில் வறுத்து சாப்பிட்டுப் பாருங்கள் சூப்பர் சுவையில் அள்ளும்.
தேவையான பொருட்கள்
மிளகாய் – 60
(குண்டு மிளகாயையும் பயன்படுத்தாலம்)
உளுந்து – ஒரு (கப் கால் கிலோ) (கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து)
கடலைப்பருப்பு – அரை கப்
கருப்பு எள் – 2 ஸ்பூன்
வெள்ளை எள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய உருண்டை
(கட்டாயம் கட்டிப்பெருங்காயம்தான் சேர வேண்டும். இல்லாவிட்டால் தூள் பெருங்காயமும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் தூள் பெருங்காயத்தை வறுக்கக்கூடாது. நேரடியாக சேர்த்துவிடவேண்டும்)
செய்முறை
மிளகாயை காம்புடன் 3 நிமிடம் வெறும் கடாயில் வறுத்துக்கொள்ள வேண்டும். அதை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும்.
பின்னர் வெறும் கடாயில் ஒவ்வொரு பொருளாக சேர்த்து தனித்தனியாக சிவந்து வரும் வரை வறுத்து எடுத்து தனியாக கொட்டி ஆறவைத்துவிடவேண்டும்.
பின்னர் எண்ணெய் ஊற்றி கட்டிப்பெருங்காயத்தை தட்டி சேர்த்து தனியாக பொரித்து எடுக்க வேண்டும். அது பொரிந்தவுடன் மிளகாயையும் சேர்த்து வறுக்க வேண்டும். நல்ல இரண்டும் சேர்ந்து ஒரு வாசம் வரும். இதுதான் இட்லிப்பொடி கமகம மணத்துடன் இருப்பதன் ரகசியம். இரண்டும் கலந்து வரும் மணம் வந்ததும் அடுப்பை அணைத்து எடுத்து, ஆறவைக்க வேண்டும். இப்போது மிளகாயில் உள்ள காம்புகளை நீக்கிவிடவேண்டும். ஆறியபின் பெருங்காயத்தையும், மிளகாயையும் மட்டும் காய்ந்த மிக்ஸி ஜாரில் முதலில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும். இதனால் இட்லிப்பொடிக்கு நல்ல நிறம், மணம், சுவை என அனைத்தும் கிடைக்கும்.
பின்னர் ஆறிய மற்றப் பொருட்களை இதனுடன் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும். உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதை உங்களுக்கு தேவையான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ளலாம். கொரகொரப்பாக அல்லது நைஸ் பொடியாக எப்படி வேண்டுமானாலும் பொடித்துக்கொள்ளலாம்.
பொடித்த பின்னர் அகலமான தட்டில் சேர்த்து ஆறவைக்க வேண்டும். பின் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாகவே அனைத்துப் பொருட்களையும் வறுத்து ஆறவைக்க அகலமான தட்டுக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பொருட்கள் விரைவில் ஆறும்.
இதை மூன்று முதல் 4 மாதங்கள் வைத்துக்கொள்ளலாம். இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
பொடி இட்லி ஃப்ரை செய்வது எப்படி?
பொடியை ஒரு தட்டில் சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றி குழைத்துக்கொள்ள வேண்டும். அதில் இட்லியின் இரண்டு பக்கங்களிலும் பிரட்டி, அடுப்பில் குறைவான தீயில் தோசைக்கல்லில் சேர்த்து ஒரு நிமிடம் இரண்டு புறங்களையும் பிரட்டி எடுத்தால் சுவையான பொடி இட்லி தயார். இதை சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை ருசித்து சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்