HT Tamil Exclusive : தலைவலியே கஷ்டம்.. ஒற்றை தலைவலி இன்னும் கஷ்டம்.. ஹோமியோபதி சிகிச்சை பலன் தருமா.. டாக்டர் விளக்கம்!
HT Tamil Exclusive : தலைவலி விஷயத்தில் அந்த நேரத்துக்கான நிவாரணம் தேடாமல் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்வது நல்லது. வயது, பாலினம், தொழில், வாழ்க்கை முறை, உணவு முறை, மருத்துவ வரலாறு, போன்ற விசயங்களையும் நோயின் தன்மை, வீரியம் என்று பல விசயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு மருந்துகள் வழங்குகிறோம்.

HT Tamil Exclusive : ஒவ்வொரு மனிதனும் தலைவலி என்ற பிரச்சினையை சந்திக்காமல் இருக்க முடியாது. அதிலும் தீராத தலைவலி, நாள்பட்ட தலைவலி, திடீர் திடீரென தலைவலி, குனிந்தாலே தலைவலி என்று விதவிதமான தலைவலி என்று ஆளாளுக்கு ஒரு மாதிரி சொல்வார்கள். ஆனால் "மைக்ரேன்"என்று சொல்லக்கூடிய ஒற்றை தலைவலி என்பது எல்லோருக்கும் அச்சம் தரும் சொல்லாக உள்ளது. ஆம்.. ஒற்றை தலைவலி குறித்து மதுரையைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி அவர்கள் இன்று நம்மிடையே பல தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
அலட்சியம் வேண்டாம்
தலைவலி என்பதற்கு மக்கள் பல விசித்திரமான காரணங்கள் சொல்வதைப் பார்க்கிறோம். ஆனால் பொதுவாக மன அழுத்தம், தூக்கம் கெடுவது, சரியான நேரத்தில் சரியான உணவுகளை தவிர்ப்பது, மனக் கவலைகள், குழப்பங்கள், கண் பார்வை பிரச்சினை என்று பல்வேறு காரணங்களால் மனிதனுக்கு தலைவலி ஏற்பட காரணங்களாக அமைந்து விடுகிறது. பொதுவாக தலைவலியை நாம அலட்சியமாக எடுத்து கொள்ள கூடாது. இருந்தாலும் இந்த ஒற்றை தலைவலி என்பது சிக்கலானது. வலது இடது என்று ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் கடுமையான வலி ஏற்படும் போது நமக்கு எந்த வேலையும் ஓடாது.
ஒற்றை தலைவலிக்கும் பொதுவான தலைவலிக்கு மான காரணங்கள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றன என்று சொல்லலாம். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கூட ஒற்றை தலைவலி ஏற்பட முக்கிய காரணம் ஆக உள்ளது. பருவகால மாற்றங்கள் உட்பட நாம் சாப்பிடும் காஃபின் கலந்த கலவைகள்,அதிக அளவில் சுவைக்காக சேர்க்கும் உப்பு மற்றும் புளிப்பு, ஆசையாய் சாப்பிடும் ஐஸ் கிரீம் கூட ஒரு காரணம் ஆக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா என்று ஹோமியோபதி மருத்துவர் ஜானகி அவர்கள் சுவாரஸ்யமான தகவல்களை சொல்ல சொல்ல நமக்கே புதிதாய் தெரிகிறது.
தலைவலிக்கான காரணமும தீர்வும்
ஆல்கஹால் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கும் இந்த மாதிரி தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு தலைவலி மட்டும் அல்லாமல் வாந்தி வருவது போல் உணர்வு, வாந்தி எடுத்தல், தலை சுற்றல், சோர்வு, மயக்கம் என்று சில பிரச்சினைகளும் கூடுதலாக சேர்ந்து விடுவது ஒற்றை தலைவலி யின் ஸ்பெஷல். ஒற்றை தலைவலி ஆரம்பித்து சில மணி நேரங்களில் சரியாகி விடுவதும் சில நேரங்களில் பல நாட்களாக வலி தொடர்வதும் ஒரு விசித்திரம். பல நேரங்களில் காரணங்களை கண்டறிவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக தலைவலி என்றால் உடனடி நிவாரணமாக பாராசிட்டமால் போன்ற ஆங்கில மருந்துகளை எடுத்து பழகியிருக்கிறோம். தாங்கள் சார்ந்த ஹோமியோபதி மருத்துவத்தில் இதற்கான மருந்துகள் உண்டா என்று கேட்ட போது மளமளவென்று பேச ஆரம்பித்தார்.
ஹோமியோபதி மருத்துவத்தில் ஒவ்வொருவருடைய பிரச்சினைகளையும் கவனமாக ஆராய்ந்து தான் மருந்துகளை தேர்வு செய்கிறோம். குறிப்பாக தலைவலி விஷயத்தில் அந்த நேரத்துக்கான நிவாரணம் தேடாமல் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் வந்து விடுவது நல்லது. நாங்கள் நோயாளியின் வயது, பாலினம், அவர்கள் தொழில், வாழ்க்கை முறை, உணவு முறை, மருத்துவ வரலாறு, குடும்ப மருத்துவ குறிப்பு போன்ற விசயங்களையும் நோயின் தன்மை, வீரியம் என்று பல விசயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு மருந்துகள் வழங்குகிறோம். பொதுவாக தலைவலியோடு வருவோருக்கு பெல்லடோன்னா என்று ஒரு மருந்து கொடுத்தாலே போதுமானது.
சிலருக்கு கடுமையான தலைவலியோடு வாந்தி வருதல் மயக்கம் பார்வையில் மாறுபாடுகள் என்று பிரச்சினைகள் கூடுதலாக இருக்கும் போது ஐரிஸ் வெர்சிகோலார் என்ற மருந்தை தருகிறோம். நீண்ட நாள் மனக் கவலைகள் குழப்பங்கள் மன அழுத்தம் காரணமாக வருவோருக்கு நேட்ரம் ம்யூரியாட்ரிகம் என்ற மருந்து நல்ல பலன் கிடைக்கும். மதுபானம் அருந்துதல் காஃபின் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு நக்ஸ்வோமிகா மருந்து எடுத்து கொள்ளும் பட்சத்தில் தலைவலிக்கு தீர்வு கிடைக்கும். இவை தவிர குளோனின், நக்ஸ்வோமிகா போன்ற மருந்துகளையும் பயன் படுத்தி வருகிறோம்.
மொத்தத்தில் தலைவலிக்கு மட்டும் தீர்வு தேடாமல் அதற்கான காரணிகளையும் கருத்தில் கொண்டு வைத்தியம் எடுப்பதன் மூலம் ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும் என்று அழுத்தமாக கூறுகிறார் ஹோமியோபதி டாக்டர் ஜானகி. அதே சமயம் மருந்துகளை கண்டிப்பாக மருத்துவரின் அறிவுரையின் அடிப்படையில் எடுத்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்