HT Tamil Book SPL: ‘சிறுகதைக்கோ நாவலுக்கோ சளைத்தது அல்ல’.. மகாகவி பாரதியார் எழுதிய அரிய கடிதங்கள் அடங்கிய புத்தகம்!
HT Tamil Book SPL: பாரதியாரின் பல கடிதங்களை நாம் படிக்கும்போது இவரது எழுத்துத் திறமையை மட்டுமின்றி, அவர் குறித்த அறியாத பக்கங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. பாரதி ஆங்கிலத்தில் எத்துணை புலமை வாய்ந்தவர் என்பதற்கு சான்று ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்கள்.

HT Tamil Book SPL: மகாகவி பாரதியாரின் கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூல் தான் ‘பாரதியின் கடிதங்கள்’. இந்நூலை பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் தொகுத்தளித்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி பதினைந்து சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல் இறப்பதற்கு முன்பு குத்தி கேசவ பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை பாரதி எழுதிய இருபத்து மூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இந்நூல். திலகர், மு.இராகவையங்கார், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டோனால்டு, பரலி சு. நெல்லையப்பர் முதலானவர்களுக்கு எழுதிய இக்கடிதங்கள் நுட்பமான வாசிப்புக்கு உரியவை.
பாரதி புதையல் திரட்டுகள், சித்திரபாரதி ஆகிய அருங்கொடைகளை வழங்கிய ரா.அ.பத்மநாபன் அவர்களின் பெருமுயற்சியில் உருவான நூல் இது என்பது இந்நூலை வாங்கி படித்த பிறகு அறிந்து கொள்ள முடிகிறது.
ரா.அ.பத்மநாபன் இந்நூலின் முதல் பதிப்பின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதில் சிவற்றை காண்போம்.
'சிறுகதைக்கு சளைத்தவை அல்ல'
'கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் தமது 39 வயது வாழ்க்கையில் எழுதிய கடிதங்களில் தற்காலம் கிடைக்கும் அநேகமாக எல்லாக் கடிதங்களையும் ஒரு தனி நூலாக தொகுத்து அளிப்பதே இந்நூலின் நோக்கம். எளியவைதான் என்றாலும் கடிதங்கள் நாவலுக்கோ சிறுகதைக்கோ சளைத்தவை அல்ல. ஏன், கவிதைக்குக்கூடச் சளைத்தவை அல்ல. உத்திகள் பற்றி கவலைப்பட அவசியமில்லை. அவற்றையெல்லாம் நூலாசிரியர்களுக்கு விட்டுவிட்டு நாலு பேருக்குப் பொதுவில் எழுதுகிறோம் என்ற கவலையின்றி, ஒரே ஒரு நபருக்குத் தனிப்பட, அந்தரங்கமாக மனம் விட்டு பேசுவது போல் எழுதப்படுபவை கடிதங்கள்.
இந்நூலில் பாரதியார் எட்டயபுரத்தில் 15 வயது நிரம்பாத பாலகனாக இருந்த சமயம் தமது படிப்புக்கு உதவி கோரி எட்டயபுரம் ஜமீன்தார் குடும்பப் பிரமுகருக்கு எழுதிய 1897ம் ஆண்டின் கவிதை கடிதம் முதலாக, அவர் 1920இல் எழுதிய கடிதங்கள் ஈறாக பலவகைக் கடிதங்கள் ஒன்று சேர்த்துத் தரப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.
'அறியாத பக்கங்களையும்..'
பாரதியாரின் பல கடிதங்களை நாம் படிக்கும்போது இவரது எழுத்துத் திறமையை மட்டுமின்றி, அவர் குறித்த அறியாத பக்கங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. பாரதி ஆங்கிலத்தில் எத்துணை புலமை வாய்ந்தவர் என்பதற்கு சான்று ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்கள். அவற்றுக்கு தமிழிலும் மொழிபெயர்ப்பு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதங்களைப் படிக்கும்போது யார் யார் பாரதியாருக்கு நெருக்கமாக, நட்பு வட்டத்தில் இருந்தார்கள், அவர் எதிர்கொண்ட நிதி பிரச்சனைகள், புதுவை வாழ்க்கை, மீண்டும் சென்னை வாழ்க்கை, தொழில், குடும்பம், சிறை வாழ்க்கை என அனைத்தையும் அறிய முடிகிறது.
கடிதங்கள் பிரதான தகவல்தொடர்பு முறையாக இருந்த காலம் என்பதால் உண்மையாக நடந்த அனைத்தையும் இக்கடிதங்களின் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய கடிதங்களை படிக்கும்போது ஒரு மகா கவிக்கு இந்த நிலைமை நேர வேண்டுமா! என்ற ஆதங்கம் நமக்குள் எழும். கடலூரில் சிறை வாசம் அனுபவித்த பிறகு, பாரதி எதிர்கொண்ட வாழ்வாதார பிரச்சனைகளையும் கடிதங்களை படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. கடைசி பக்கங்களில் இந்தக் கடிதங்களுக்கான ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. மொத்தம் 110 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ.140. காலச்சுவடு வலைத்தளத்திலும் இந்நூலை நீங்கள் வாங்கலாம். பாரதியார் குறித்து அறிந்து கொள்ள நினைப்பவர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம் ‘பாரதியின் கடிதங்கள்’.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்