HT Exclusive : வழிகாட்டிகள் அல்ல, வழித்துணை மட்டுமே! பெற்றோரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ht Exclusive : வழிகாட்டிகள் அல்ல, வழித்துணை மட்டுமே! பெற்றோரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

HT Exclusive : வழிகாட்டிகள் அல்ல, வழித்துணை மட்டுமே! பெற்றோரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

Priyadarshini R HT Tamil
Aug 10, 2023 03:00 PM IST

HT Exclusive : ஆன்லைன், ஆஃப் லைன் இரண்டிலும் இன்று பல்வேறு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் என்று வந்தவுடன் தேவையற்றதற்கெல்லாம் வகுப்புகள் வைத்து ஒரு கூட்டம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இவையளைத்துமே தேவை – அளிப்பு சங்கிலியை பொறுத்துதான் அமைகிறது. இவற்றில் சர்ச்சைகள் ஏற்படாத வரை ஒன்றும் பிரச்னைகள் இல்லை. ஆனால் சர்ச்சை என்று வந்துவிட்டால் சிரமம்தான்.

மாயாவின் அம்மா என்ற பெயரில் ஸ்வாதி ஜெகதீஷ் என்ற ஒரு சமூக வலைதள இன்புஃளுயன்சர், தன்னை பேரண்டிங் டிரைனர், உளவியல் நிபுணர் என்று பல்வேறு டிப்ஸ்களை வழங்கி வருகிறார்.

அவர் தற்போது குழந்தைகளை ஆபாச படங்கள் பார்க்க தூண்டியதாக சர்ச்சை எழுந்தது. அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் சமூக வலைதளங்களில் பெற்றோரியம் என்றால் என்பது குறித்து விவாதித்து வந்தனர்.

இந்நிலையில், ஸ்வாதி ஜெகதீஷ் மாயாஸ் அம்மா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கிவரும் பெண்மணி, அவர் குறித்தான அவதூறுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், தான் ஒரு பயிற்சியாளர் 13 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி செய்து வருவதாகவும், தன்னைப்பற்றி அவதூறு பரப்பினால் சட்ட நடிவடிக்கை எனப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் முகநூலில் பல்வேறு துறைகள் குறித்தும் எழுதி வருபவர் ஷேபனா நாராயணன்,

அவர் இந்த சர்ச்சைகள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது-

துவக்கத்தில் மகன் பிறந்தகாலத்தில் உலகத்தையே வென்றுவிட்ட உணர்வும் சகலத்தையும் அவனுக்கு அளித்து உலகின் தலைசிறந்தவனாக்கிவிட வேண்டும் என்ற பேரவாவும் இருந்தது. சொல்லி வைத்தாற்போல் அவன் உடலுக்கு மாற்றி மாற்றி ஏதாவது வரும். குற்றவுணர்வு கொன்றெடுக்கும்.

ஆனால் அவன் வளர வளர நானுமே வளர்ந்தேன். அவனுக்கு எத்தனை நான் திட்டமிட்டாலும் தானாக அவன் கற்பது மட்டும்தான் அவன் மண்டையில் உட்கார்ந்தது. பெரிதாக நானாக எதையும் மாற்ற இயலவில்லை, என்றும் இயலாது என்றும் புரிந்தது. மகளுக்கு அதிகம் மெனக்கெடவில்லை.

இருவரும் அவர் வாழ்வை வாழ வந்துள்ளார்கள். அவர்களுக்கு துணை நிற்கலாமே தவிர வேறெந்த வகையிலும் எனது திணிப்பு உவப்பாக இருக்காது என்பது புரிந்தபோது எனது பெருமளவு மன அழுத்தம் குறைந்தது. அதுவரை ஏராளமான குற்றவுணர்வும், மன அழுத்தமும் இருந்தது.

இன்றளவும் எனது சிதைந்துபோன காலம் என்பது பிள்ளைகளை வளர்த்தெடுத்த காலம்தான். இதில் சமூகம், குடும்பம் இரண்டும் என்னிடம் ஏராளமாக எதிர்பார்த்தது. அவற்றை என்னால் பூர்த்தி செய்ய இயலவே இல்லை. எனது எத்தனைக்கெத்தனை உழைப்புமே கூட பலனற்றதாகவே பறைசாற்றப்பட்டது.

அனைத்தையும் விரலிடுக்கில் நழுவவிட்டு கைகளை உதறிய பின் தான் நான் எத்தனை சிதைந்து ஒன்றுமற்றவளாகியிருந்தேன் என்பதை உணர்ந்தேன். இது மிக விரைவான உணர்தல். பலரும் பிள்ளைகளுக்கு திருமணமாகும் வரை கூட உணர்வதில்லை. பலர் பிள்ளைகளின் திருமணத்திற்குப்பிறகும் கூட.

எனக்கான நேரம் என்பதை எடுக்க இயலாதபோது முழு மனநோயாளியாகத்தான் மாறியாகவேண்டிய கட்டாயம் வந்தது. பிள்ளைகள் நாம் எத்தனை செய்தாலும் அவர்களுக்குள்ளான உலகம் உருவானபின் அதில் மூழ்குவார்கள். அதில் பயணிப்பார்கள். அதுதான் சரியும் கூட.

அதுவரை உடன் நிற்பது, எனக்கு அறமெனப்படுவதை போதிப்பது, அவர்களை நடக்கவிட்டு பின் நின்று கவனிப்பது இதுமட்டுமே பேரண்டிங் என்பதை மனதார புரிந்து கொண்ட பிறகு எனது பயணம் சுளுவானது. நிறைய அழுத்தங்கள் குறைந்தது

இதனை உலகம் இன்று வரை பொறுப்பற்றதனம் என்று மட்டுமே சொல்லி வருகிறது. பரவாயில்லை. உலகத்திடம் நான் சான்று வாங்க வேண்டுமென்றால் மாயா அம்மாக்களிடம் சென்று விழ வேண்டும். இத்தனை சொல்லியதற்கு காரணமும் அதுவே.

இன்றய வணிக நோக்கான காலத்தில் மக்களுக்கு அநாவசியத்திற்கு மன அழுத்தம் கூட்டுகிறார்கள். பயமுறுத்துவது குற்றவுணர்வுக்கு ஆளாக்குவது இதெல்லாம் தான் பணம் பறிக்கும் வழிகள்.

புடவையை மடிப்பதற்கு ஒரு வகுப்பு. அதற்கு பீஸ். அதிலும் நூறு பேர் சேர்கிறார்கள். இப்படியாகத தான் இன்ஸ்டா, யூடியூப் ஓடுகிறது. பிள்ளையை இப்படி வகுப்புக்கு போயெல்லாம் வளர்க்க முடியாது.

அதுவோரு வாழ்வனுபவம். நம்முடைய பொறுமை, முதிர்ச்சி இரண்டும்தான் பொறுப்பு. எத்தறை மாயா அம்மாக்கள் வந்தாலும் அவர்களது ஓரு பாயிண்ட் கூட நமக்கு பொருந்தாது.

ஒரே வீட்டிலேயே இரு பிள்ளைகள் இருந்தால் இரண்டும் ஒன்றுபோல வளராதபோது எப்படி ஒரு பேரண்டிங் முறை அனைவருக்குமானதாகும். ஒரு பெண்ணிற்கு ஓரு ஒரு பிரசவமும் ஒரு ஒரு விதமான அனுபவம். அதை போலவேதான் ஒரு ஒரு பிள்ளையையும் ஒவ்வொரு மாதிரி வளர்ப்பதும்.

வீணாக பால் காய்ச்சுவது எப்படி, சுடுநீரை ஆறவைப்பது எப்படி, பிள்ளை வளர்ப்பது எப்படி போன்ற வகுப்புகளில் பணத்தை வீணாக்காதீர்கள். இங்க மாறவேண்டிது அவர்கள் அல்ல. நாம்தான். உன் பிள்ளையை நீ சரியா வளர்க்கல என்பதே நம்மீது வீசப்படும் முதல் அஸ்திரம்.

நான் தெளிவாக இருந்தால்தான் தெளிவாக பிள்ளை வளர்க்க இயலும். குழம்பிய என்னால் தெளிவாக எதையும் சொல்லித்தர இயலாது. என் குற்றவுணர்வை தூண்டுவதே என்னைக் குழப்பத்தான் என்ற புரிதல் வேண்டும். சரியோ தவறோ என் முடிவு நானெடுக்கிறேன் என நிதானியுங்கள். நல்ல நண்பர்களிடம் அலோசியுங்கள் போதும்.

இந்த எலைட் அம்மாக்களே சிறந்தவர்களாக இருந்து விட்டுப்போகட்டும். நாம் அதில் கம்பேர் செய்யவோ குற்றவுணர்வு கொள்ளவோ ஏதுமில்லை.

கடைசியாக ஒரே ஒரு விசயம்.

நாம் உலகத்திற்கு முன் சிறந்த அம்மா பட்டம் வாங்க வேண்டி நடக்கும்போது பிள்ளைகளிடம் மோசமான அம்மா பட்டம் தான் வாங்குவோம். பிள்ளைகளுக்கு நாம் எப்படி நடந்தாலும் நாம்தான் அம்மா, அவர்கள் நம்மை அன்கன்டிஷனலாக விரும்புவார்கள். அதை உணர்ந்து அன்பு செய்தாலே போதும்.

 

எனவே பேரண்டிங் செய்ய பெற்றோர் அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டாம். நம்மால் முடியாததை நம் குழந்தைகள் மீது திணிப்பதும், நமக்கு கிடைக்காததை அவர்களுக்கு அள்ளி வழங்குவதும் அல்ல அவர்களை அவர்களின் வழியில் வாழவிட்டாலே நல்லது என்று இவர் கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.