Mutton Curry: அதிரி புதிரி கிளப்பும் மட்டன் குழம்பு செய்யத் தெரியமா? சுலபம் தான்! இதோ ஈசி ரெசிபி!
Mutton Curry: தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் அசைவ உணவுகளின் மீது அலாதியான பிரியம் உடையவர்கள் ஆவார்கள். கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் சாப்பாடு டெலிவரி ஆப்களில் கூட அசைவ உணவே தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஆர்டர் செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் அசைவ உணவுகளின் மீது அலாதியான பிரியம் உடையவர்கள் ஆவார்கள். கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் சாப்பாடு டெலிவரி ஆப்களில் கூட அசைவ உணவே தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஆர்டர் செய்யப்படுகின்றன. அதிலும் கிராமத்து சமையல் என்றால் சொல்லவே வேண்டாம். அசைவ உணவின் சுவை பக்கத்து ஊர் வரை மணக்கும். ஆனால் நமக்கு அந்த சுவையில் சமையல் செய்யத் தெரிவதில்லை. வேகமாக செய்யக்கூடிய நூடுல்ஸ், பாஸ்தா என உணவு முறைகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாரம்பரிய முறையில் சமையல் செய்து சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியமும் மேம்படும். இந்த பாரம்பரிய சமையலில் முக்கியமான ஒரு உணவு தான் ஆட்டுக்கறி குழம்பு. இந்த மட்டனை செய்வது சற்று சிக்கலான காரியம் தான். நல்ல கறியை வாங்கி வந்தால் மட்டுமே குழம்பு ருசியாக இருக்கும். கிறாமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ மட்டன்
கால் கப் துருவிய தேங்காய்
அரை டீஸ்பூன் கசகசா
அரை கிலோ சின்ன வெங்காயம்
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
ஒரு டீஸ்பூன் சோம்பு தூள்
2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
2 பட்டை
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு நல்லெண்ணெய்
செய்முறை
முதலிள் மட்டனைத் சிறு சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கறியில் உள்ள கொழுப்புடன் எடுத்துக் கொள்ளவும். பின்னர சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு மிக்சியில் துருவிய தேங்காய் மற்றும் கசகசா ஆகியவற்றை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர அடுப்பில் குக்கரை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை துண்டை போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியை கொழுப்புடன் சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும். பிறகு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். கறி சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து கறியுடன் அனைத்து மசலாக்களும் ஒன்றாக சேரும்படி நன்கு கிளறி விடவும்.
மிளகாய் தூள் வாசம் போனவுடன், தேங்காய், கசகசா விழுதைச் சேர்க்கவும். கறியுடன் மசாலா மற்றும் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி வேக வைக்கவும். குக்கரிலிருந்து ப்ரசர் வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். கமகமக்கும் மட்டன் குழம்பு தயார். இந்த குழம்பில் நல்லெண்ணெய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த குழம்பை பரோட்டா மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

டாபிக்ஸ்