Vallarai Keerai Chutney: ஞாபக சக்தியை வளர்க்க உதவும் வல்லாரக்கீரை சட்னி! சூப்பரா செஞ்சு அசத்துங்க!
Vallarai Keerai Chutney: கீரைகளில் சிறந்த ஒரு கீரையான வல்லாரக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வல்லாரக் கீரையை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் சத்தான உணவுகளை தர வேண்டும். அப்போது தான் அவர்களது வளர்ச்சி சீரானதாக இருக்கும். எனவே மருத்துவர்களும் தினமும் பச்சை காய்கறிகளை குழந்தைகளுக்கு தருவதற்கு பரிந்துரைப்பது உண்டு. அதில் முக்கியமான ஒன்று தான் கீரை. இயல்பாகவே கீரை அணைவருக்கும் ஏற்ற உணவாகும். கீரைகளில் சிறந்த ஒரு கீரையான வல்லாரக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவுத் திறன் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வல்லாரக் கீரையை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
ஒரு கட்டு வல்லாரக் கீரை
3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு டீஸ்பூன் மல்லித் தூள்
ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு
எலுமிச்சை அளவுள்ள புளி
5 வற மிளகாய்
8 முதல் 10 பெரிய வெங்காயம்
துருவிய தேங்காய்
தேவையான அளவு உப்பு
அரை ஸ்பூன் கடுகு
கறிவேப்பிலை
செய்முறை
முதலில் வல்லாரை கீரையை தண்டு நீக்கி இலைகளை மட்டும் பறித்து நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள வல்லாரை இலைகளை போட்டு வதக்க வேண்டும். அவை நன்கு சுருங்கியதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மல்லித் தூள், ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுக்கும் பொழுது மிதமான தீயில் அடுப்பை வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இவை வறுபட்டதும் இவற்றுடன் 5 மிளகாய்களை சேர்த்து வறுக்க வேண்டும். அவை லேசாக வதங்கியதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து வைத்துள்ள வல்லாரைக் கீரையையும் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின்னர் கடைசியாக அரை கப் அளவிற்கு நறுக்கிய அல்லது துருவிய தேங்காயை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் வதக்கிய அனைத்தையும் ஆற வைக்க வேண்டும். இவை அனைத்தும் ஆறிய பின்னர ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைஸ் ஆக அரைத்து விடாதீர்கள். பின் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியை போட வேண்டும். சுவையான வல்லாரக் கீரை ரெடி.

டாபிக்ஸ்