Tomato Thokku: இந்த தக்காளி தொக்கு போதும்! சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் ருசி அள்ளும்! செஞ்சு பாருங்க!
Tomato Thokku:நமது வீட்டில் உடனடியாக சமையல் செய்ய வேண்டும் என்றால் உடனடியாக உதவுவது மிக்ஸ் மற்றும் தொக்கு தான். இந்த தொக்கு இருந்தால் போதும் சாப்பாடு, சப்பாத்தி, இட்லி அனைத்திற்கும் மிகவும் சிறந்த இணை உணவாக இருக்கும்.

நமது வீட்டில் உடனடியாக சமையல் செய்ய வேண்டும் என்றால் உடனடியாக உதவுவது மிக்ஸ் மற்றும் தொக்கு தான். இந்த தொக்கு இருந்தால் போதும் சாப்பாடு, சப்பாத்தி, இட்லி அனைத்திற்கும் மிகவும் சிறந்த இணை உணவாக இருக்கும். இந்த தொக்கு ஒன்றை நாம் செய்து வீட்டில் வைத்துக் கொண்டால் போதும். அனைத்து விதமான உணவுகளுக்கும் இதை வைத்து சாப்பிட முடியும் நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ஒரு உணவாக இது இருந்து வருகிறது. சில வீடுகளில் இருப்பவர்கள் கடைகளில் விற்கப்படும் தொக்குகளை வாங்குவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் கடைகளில் விற்கப்படும் இந்த தொக்குகளில் சுத்தமான எண்ணெய் பயன்படுத்தாமல் இருக்கலாம். தக்காளியை வைத்து அருமையான தொக்கு செய்ய முடியும். சுவையான தக்காளி தொக்கு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
அரை கிலோ தக்காளி
3 டீஸ்பூன் மல்லித் தூள்
3 டீஸ்பூன் வற மிளகாய்த்தூள்
18 முதல் 20 பல் பூண்டு
சிறிய அளவிலான துண்டு இஞ்சி
முக்கால் கப் நல்லெண்ணெய்
தேவையான அளவு உப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு கொத்து கறிவேப்பிலை
செய்முறை
முதலிள் இஞ்சியை தோல் சீவி வைத்துக் கொள்ளவும். பின்னர் பூண்டை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு இரண்டையும் அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தக்காளியை போட்டு, அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் வேக வைத்து, தோல் சற்று சுருங்கியவுடன் எடுத்து விட வேண்டும். பிறகு தக்காளியின் தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் தட்டி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு 30 நொடி கிளறி விட வேண்டும்.
இவை அனைத்தையும் சற்று கிளறி விட்டு அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி மேலும் ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும். அதன் பின்னர் ஒரு நிமிடம் கழித்து தக்காளி விழுதுடன் மசாலா எல்லாம் ஒன்றாக கலந்ததும் ஒரு தட்டை வைத்து 15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து திறந்து பார்த்து, தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே வரும்பொழுது கறிவேப்பிலை தூவி இறக்கவும். இந்த தக்காளி தொக்கை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். தக்காளி தொக்கு ஆறியவுடன் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தேவையான போது எடுத்துக் கொள்ளலாம். ஒரு வாரம் வரும் வரை கெடாமல் இருக்கும். மேலும் இவ்வாறு தக்காளி தொக்கு செய்து வைத்துக் கொள்வது அவசரமான காலத்தில் உதவும் எனக் கூறப்படுகிறது.

டாபிக்ஸ்