Tomato Kuruma: தக்காளி இருந்தா போதும்! தாறுமாறா ஒரு குருமா செய்யலாம்! இதோ ஈசியான ரெசிபி!
Tomato Kuruma: வீட்டின் சமையலில் பிரதானமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாக தக்காளி இருந்து வருகிறது. தக்காளி இல்லாமல் நம்மால் எந்த சமையலும் செய்ய முடியாது. கறி குழம்பு முதல் ரசம் வரை எல்லாவற்றிற்கும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது.

வீட்டின் சமையலில் பிரதானமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாக தக்காளி இருந்து வருகிறது. தக்காளி இல்லாமல் நம்மால் எந்த சமையலும் செய்ய முடியாது. கறி குழம்பு முதல் ரசம் வரை எல்லாவற்றிற்கும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. சமையலில் முதன்மையாக பயன்படும் தக்காளியை வைத்து சுவையான உணவுகளை செய்ய முடியும். வீட்டில் சப்பாத்தி, சாதம், இட்லி மற்றும் தோசை என அனைத்து விதமான உணவுகளுக்கும் தனித் தனியான குழம்பு வகைகள் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த உணவிற்கு ஏற்றார் போல இருக்கும். ஆனால் இந்த தக்காளியை வைத்து எல்லாவற்றிற்கும் பொருத்தமான ஒரு குருமாவை செய்ய முடியும். மிகுந்த சுவையுடன் தக்காளி குருமா செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
5 முதல் 6 தக்காளி
2 பெரிய வெங்காயம்
அரை டேபிள் ஸ்பூன் சோம்புத் தூள்
அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
அரை டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய்
ஒரு கப் தேங்காய்ப் பால்
தேவையான அளவு உப்பு
தாளிக்கத் தேவையான எண்ணெய்
கால் டீஸ்பூன் கடுகு
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை
கால் டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
செய்முறை
முதலில் ஒரு அரை மூடி தேங்காயை துருவி பின்னர் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். இதில் இருந்து தேங்காயப்பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அனைத்து தக்காளியிலும் அதன் அடிப்பகுதியில் கூட்டல் குறி வடிவில் கத்தியால் கோடிட்டு, கொதிக்க வைத்த தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு வேக விட வேண்டும். சரியாக 5 நிமிடங்களுக்குப் பிறகு தக்காளியை எடுத்து அதன் தோலை முழுவதுமாக உரிக்க வேண்டும். இப்பொழுது தோல் நீக்கப்பட்ட தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்த தக்காளி விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். பிறகு இதில் சோம்புத் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றை போட வேண்டும். மேலும் தேவையான அளவு உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் நன்றாக கொதிக்கவிட வேண்டும். இவை அனைத்தும் சிறிது நேரம் கொதித்த பின்னர அத்துடன் நாம் முதலில் அரைத்து வைத்த தேங்காய்ப் பால் சேர்த்து மிதமான சூட்டில் அடுப்பை வைத்து கொதிக்கவிட வேண்டும். பின்னர் இதில் நறுக்கிய மல்லித் தழையை தூவி இறக்க வேண்டும். இதில் தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காயை துருவி அரைத்து அக்கலவையினைச் சேர்த்தும் சமைக்கலாம். இப்பொழுது சுவையான தக்காளி குருமா தயார். இதனை சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை, பணியாரம் போன்ற எல்லா வகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

டாபிக்ஸ்