சத்தான கீரை தோசை வித் சுவையான முள்ளங்கி சட்னி! சூப்பர் பிரேக்பாஸ்ட் காமினேஷன்! இதோ அசத்தலான ரெசிபி!
காலை வேளையில் சத்தான மற்றும் சுவையான உணவுகளை எடுத்துக் கொள்ளவே அனைவரும் விரும்புவார்கள். அப்படி ஒரு சத்தான பிரேக்பாஸ்ட் காமினேஷன் உணவுகளை தான் நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். சத்தான கீரை தோசை வித் சுவையான முள்ளங்கி சட்னி எப்படி செய்வது என இங்கு காணலாம்.

தினமும் நாம் காலையில் சாப்பிடும் உணவே அந்த நாளின் ஆற்றல் மூலத்திற்கான தொடக்க புள்ளியாகும். எனவே காலை உணவில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனை பின்பற்ற ஒரு சிறந்த உணவு காமினேசனை நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். அது தான் கீரை தோசை மற்றும் முள்ளங்கி சட்னி. இவை இரண்டிலும் பல விதமான சத்துக்கள் உள்ளன. இதன் செய்முறையை இங்கு காண்போம்.
முள்ளங்கி சட்னி
தேவையான பொருட்கள்
4 பெரிய சைஸ் முள்ளங்கி
1 பெரிய வெங்காயம்
பெரிய நெல்லிக்காய் அளவு புளி
4 வற மிளகாய்
ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
அரை டீஸ்பூன் சீரகம்
கால் கப் துருவிய தேங்காய்
செய்முறை
முதலில் முள்ளங்கியை மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் தேங்காயைத் துருவிக்கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதக்கியதும் வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் சீரகத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு அதனுடன் தேங்காய் துருவல், புளி சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். பிறகு அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். இறுதியாக கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்க்கவும். சுவையான சட்னி தயார்.
கீரை தோசை
தேவையான பொருட்கள்
2 கப் புழுங்கல் அரிசி
2 கப் பச்சரிசி
1 கப்உளுத்தம்பருப்பு
2 கப் பாலக் கீரை
5 பச்சை மிளகாய்
2 டீஸ்பூன் சீரகம்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
கீரை தோசை செய்வதற்கு முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தனித்தனியாக அரைத்து, ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பிறகு பாலக்கீரையை ஆய்ந்து எடுத்து, சூடான நீரில் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள கீரை, சீரகம், பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் அரைத்த மாவுடன் சேர்த்து கலக்கவும். பிறகு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை வார்த்தெடுத்தால் கீரை தோசை ரெடி.

டாபிக்ஸ்