பன்னீர் சாப்பிட எதுக்கு ரெஸ்டாரண்ட் போகணும்? யார் வேண்டுமானாலும் செய்யலாம் பன்னீர் மஞ்சூரியன்! இதோ ஈசி ரெசிபி!
பாலில் இருந்து எடுக்கப்படும் பாலாடைக் கட்டியே பன்னீர் எனக் கூறப்படுகிறது. இதில் புரோட்டீன் உள்ளது. இதில் பல்வேறு விதமான உணவுகளை தயாரிக்கலாம்.பன்னீர் வைத்து ரெஸ்டாரண்ட்களில் செய்யப்படும் உணவுகளில் ஒன்று தான் பன்னீர் மஞ்சூரியன், இதன் செய்முறையை இங்கு தெரிந்துக் கொள்வோம்.

நாம் வீட்டில் வித விதமான சமையல் செய்து கொடுத்தாலும் நம்மில் சிலர் உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவது ஒரு தனிப்பட்ட பிரியம் ஆகும். ஏனெனில் அங்கு செய்யப்படும் உணவுகள் தனிப்பட்ட சுவையை கொண்டுள்ளன. அசைவ உணவுகளுக்கு மாற்றாக செய்யப்படும் உணவுகளில் பன்னீர் மற்றும் காளான் இருந்து வருகிறது. கடைகளில் செய்யப்படும் பன்னீர் ரெசிபிகள் மிகவும் சுவையானதாக இருக்கும். அதில் ஒன்றான பன்னீர் மஞ்சூரியன் எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரை கப் பன்னீர்
2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
ஒரு கப் மைதா மாவு
1 பெரிய வெங்காயம்
2 குடைமிளகாய்
1 பச்சை மிளகாய்
1 எலுமிச்சம் பழம்
4 பல் பூண்டு
1 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
1 டேபிள்ஸ்பூன் வினிகர்
2 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ்
அரை டீஸ்பூன் மிளகுத் தூள்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
அரை டேபிள்ஸ்பூன் சீரகம்
சிறிதளவு வெங்காய்த் தாள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் மைதா மாவு, சோள மாவு, தேவையான அளவு உப்பு, மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். அடுத்து அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பின்பு நறுக்கிய பன்னீரை இந்த மாவில் சேர்த்து பிரட்டி ஊற விடவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ஊற வைத்த பன்னீர் துண்டுகளை போட்டு எல்லா பக்கமும் பொன் நிறம் வந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் சீரகத்தை போட்டு வறுக்கவும். சீரகம் வறுபட்டதும் அதில் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.
பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும். பிறகு பொரித்த பன்னீரை சேர்த்து அதை பக்குவமாக நன்கு மசாலாவுடன் சேருமாறு கிளறி விடவும். இப்பொழுது சிறிதளவு மிளகுதூள் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். இறுதியாக வெங்காய தாளை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி சுட சுட ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார்.

டாபிக்ஸ்