இனி மசாலா தோசை செய்வது ஈசிதான்! இப்படி செஞ்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இனி மசாலா தோசை செய்வது ஈசிதான்! இப்படி செஞ்சு பாருங்க!

இனி மசாலா தோசை செய்வது ஈசிதான்! இப்படி செஞ்சு பாருங்க!

Suguna Devi P HT Tamil
Dec 11, 2024 04:01 PM IST

தோசை என்றாலே நம் வீட்டு குழந்தைகளுக்கு தனிப்பிரியம் உண்டு. அதிலும் மசாலா தோசை என்றால் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே மசாலா தோசை செய்வது எளிமையான காரியம் தான்.

இனி மசாலா தோசை செய்வது ஈசிதான்! இப்படி செஞ்சு பாருங்க!
இனி மசாலா தோசை செய்வது ஈசிதான்! இப்படி செஞ்சு பாருங்க!

தேவையான பொருட்கள்

அரை கப் இட்லி அரிசி

அரை கப் புழுங்கல் அரிசி

கால் கப் உளுத்தம் பருப்பு

1/4 கப் அவல்

2 பெரிய வெங்காயம்

3 உருளைக்கிழங்கு

4 பூண்டு பல்

1 பச்சை மிளகாய்

8 வற மிளகாய்

2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு

2 டேபிள்ஸ்பூன் வெந்தயம்

2 டேபிள்ஸ்பூன் சீரகம்

1 டேபிள்ஸ்பூன் கடுகு

அரை டேபிள்ஸ்பூன் பெருங்காய தூள்

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு கொத்தமல்லி

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு நெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை

தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு அகன்ற பாத்திரத்தில் இட்லி அரிசி, புழுங்கல் அரிசியை நன்கு கழுவி ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு, வெந்தயம், கடலை பருப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். மேலும் அவலையும் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்கு ஊறிய பின்னர் இதனை ஒரு கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை புளிக்க விடவும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடலை பருப்பு மற்றும் சீரகத்தை போட்டு அதை வறுக்கவும்.

பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, மற்றும் வற மிளகாயை போட்டு அதை நன்கு வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும். பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகத்தை சேர்த்து வறுக்கவும். பின் அதில் பெருங்காயத் தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு அதை வறுக்கவும். பின்பு அதில் நறுக்கிய  வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் மசித்த  உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். பிறகு இதில் சிறிதளவு கொத்தமல்லியை போட்டு கிளறி இறக்கவும். தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் ஊற்றவும். பின்பு தோசையை திருப்பி போட்டு அதன் உள்புறத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை எடுத்து நன்கு தடவிய பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தோசையை மடித்து கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைத்து சுட சுட சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.