எதுக்கு ரெஸ்டாரண்ட் போகணும்? வீட்டிலேயே செய்யலாம் க்ரில் சிக்கன்! இதோ அருமையான ரெசிபி!
சமீப காலமாக க்ரில் சிக்கன் மிகவும் பிரபலமான ஒரு உணவாக இருந்து வருகிறது. இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். வெளியில் இதனை சாப்பிடும் போதும் இதன் செய்முறை மற்றும் சுத்தம் குறித்து கேள்விகள் தோன்றலாம். எனவே வீட்டிலேயே எளிமையாக க்ரில் சிக்கன் செய்வது எப்படி எனபதை இங்கு காண்போம்.

கடந்த சில ஆண்டுகளாகவே புரத உணவுகளின் வரிசையில் முதன்மையில் இருப்பது சிக்கன் தான். சிக்கன் சாப்பிட்டால் ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என வதந்தி பரவினாலும், அதற்கு இது வரை எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. சிக்கன் மட்டும் இல்லாமல் எந்த உணவாக இருந்தாலும் பொரித்து சாப்பிட்டால் நிச்சயமாக பிரச்சனை வரும் என்பதே மருத்துவர்களின் கூற்றாக உள்ளது. இது போன்ற சமயத்தில் சிக்கனை பல விதமாக சமைக்கின்றனர். இதில் சமீபத்தில் பிரபலமான ஒரு முறை தான் க்ரில் சிக்கன். முழு கோழியையும் நேரடியாக நெருப்பில் சுட்டோ அல்லது மைக்ரோ ஓவனில் வைத்தோ சாப்பிடலாம். இதனை பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டு இருப்போம். அங்கு இது சுத்தமாக செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் தோன்றலாம். எனவே நாம் வீட்டிலேயே எளிமையாக க்ரில் சிக்கன் செய்யலாம். செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருள்கள்
ஒரு முழுக்கோழி
ஒரு எலுமிச்சை
3 டீஸ்பூன் தந்தூரி மசாலா
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
தேவையான அளவு உப்பு
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
கால் கப் தயிர்
சப்பாத்தி மாவு
வெள்ளைத்துணி
செய்முறை
முதலில் க்ரில்டு சிக்கன் செய்ய சிக்கன் வாங்கும் பொழுது 700 - 800 கிராம் அளவில் இருப்பதாக பார்க்கவும். பின்னர் சிக்கனை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும். பின்னர் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். மேலும் தயிருடன் இஞ்சி பூண்டு விழுது, தந்தூரி மசாலா, மிளகாய் தூள், உப்பு கலந்து சிக்கன் முழுவதும் நன்கு பூசி விடவும். சிக்கன் கலராக இருக்க வேண்டுமென்றால் சிறிது கலர் பொடி சேர்த்துக் கொள்ளலாம். மசாலா பூசிய சிக்கனை 5 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
மசாலா தடவிய சிக்கன் முழுவதும் ஆலிவ் ஆயிலை தடவி வெள்ளை துணியை வைத்து முழுவதுமாக சுற்றி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவு உருண்டையை பெரிய மெல்லிய வட்டமாக தேய்த்து வெள்ளை துணியில் மூடி வைத்திருக்கும் சிக்கனை நடுவில் வைத்து மூடவும். இதைப் போல் மற்றொரு முழு சிக்கனையும் சப்பாத்தி மாவை வைத்து மூடி தயாராக எடுத்து வைக்கவும். உங்களிடம் கிரில் சாதனம் இருந்தால் அதில் வைக்கலாம் அல்லது ஓவனை முன் கூட்டியே சூடு செய்து அதில் நன்கு மூடிய சிக்கனை வைத்து 2 மணி நேரம் க்ரில் செய்யவும். அவ்வப்பொழுது சிக்கனை திருப்பி விடவும். போதுமான அளவு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து சப்பாத்தியை உடைத்து விட்டு துணியை அகற்றி, கத்திரியால் நறுக்கி மெயோனைஸுடன் பரிமாறவும். சுவையான கிரில் சிக்கனை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

டாபிக்ஸ்