Urad Vada: ருசியான உளுந்த வடையினை தயார் செய்வது எப்படி?
ருசியான மொறுமொறுப்பான உளுந்த வடையினை தயார் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கவும்; கருப்பையைப் பலப்படுத்தவும்; குழந்தைப் பேறினை அதிகரிக்கவும் உளுந்து பயன்படுகிறது. ஆகையால் தான், இட்லி மாவு, தோசை மாவு, வடை, கஞ்சி தயாரிப்பில் முக்கிய பகுதிப் பொருளாக உளுந்து இருக்கிறது.
குறிப்பாக உளுந்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, ஜிங்க், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் என ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
உளுந்தில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு பலப்படும். கை, கால்களில் மூட்டுப் பிரச்னை தீரும். இதனால், அலுவலகத்தில் நீண்டநேரம் அமர்ந்து பணிசெய்பவர்களுக்கு வரும் இடுப்பு வலியும் எளிதில் தீரும்.
அத்தகைய உளுந்தினைக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மாலையில் மொறுமொறுப்பாக குடும்பத்துடன் சாப்பிட ஏற்ற உணவுதான், உளுந்த வடை. அதனை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உளுந்தம்பருப்பு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 2;
பச்சை மிளகாய் - 4;
கறிவேப்பிலை - சிறிதளவு;
மல்லித்தழை - சிறிதளவு;
மிளகு - ஒரு டீஸ்பூன்;
உப்பு - தேவைக்கேற்ப;
கடலை எண்ணெய் - அரை லிட்டர்;
அரிசி மாவு - 2 டீஸ்பூன்;
நீர் - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு மணிநேரம் உளுந்தம்பருப்பினை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். அதன்பின் ஊறவைத்த உளுந்தம்பருப்பினை மிக்ஸியில் போட்டு கெட்டியாக வரும்வகையில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், இரண்டு டீஸ்பூன் அரிசி மாவினை கலக்கவும். இதனால் இன்னும் அந்த கலவை கொஞ்சம் அடர்த்தியாக மாறும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைத் தனிதனியாக நறுக்கிக்கொள்ளவும். பின், அவை அனைத்தையும் உளுந்தம் மாவில் சேர்க்கவும்.
அதனுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின் சிறிய அளவிலான வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் கவரிலோ, அதன்மேல் சிறிதளவு கடலை எண்ணெயினை தடவிக்கொண்டு, பிசைந்து வைத்த உளுந்த மாவினை உருண்டையாக எடுத்து, அந்த இலையில் வைத்து தட்டிக்கொள்ளவும். பின், அதன் நடுவே துளை போடவும். அதனை எடுத்து, அடுப்பில் வைத்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் போடவும். முன்பும் பின்பும் திருப்பி நன்கு வேகும் வரை பொறுமை காக்கவும். நன்கு வெந்தபின் வடிகரண்டி மூலம் எடுக்கவும். தற்போது சூப்பரான மொறு மொறு உளுந்த வடை ரெடி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்