இனி போரிங்கான பிரேக்பாஸ்ட்க்கு சொல்லுங்க நோ! வித்தியாசமான பொரி உப்புமா செய்யலாமே! இதோ அசத்தலான ரெசிபி!
தினமும் காலை உணவு தான் நமது ஆற்றலின் தொடக்கமாக இருந்து வருகிறது. இதனை அனைவரும் விரும்பும்படி சமைப்பது சற்று சிக்கலான காரியம் தான். இனி அது குறித்து கவலைப்பட வேண்டாம். சுவையான காலை உணவிற்கு பொரி உப்புமா செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

நமது வீடுகளில் காலை நேரம் எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். அதற்கு காரணம் காலை சமையல் தான். ஏனென்றால் காலை வேளையில் நாம் சாப்பிடும் உணவு நமக்கு விருப்பப்பட்டதாக இருக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள். அந்த வகையில் நமது வீடுகளில் பொதுவாக செய்யப்படும் காலை உணவுகளில் ஒன்றாக உப்புமா இருந்து வருகிறது. ஆனால் அனைவருக்கும் உப்புமா பிடிப்பதில்லை. இதனை சரி செய்வதற்கு உப்புமாவை வித்தியாசமாகவும் சுவையாகவும் செய்து கொடுத்தால் போதுமானதாக இருக்கும். அந்த வரிசையில் இன்று சுவையான பொரி உப்புமா செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
2 கப் பொரி
2 பெரிய வெங்காயம்
கால் கப் வேகவைத்த பட்டாணி
ஒரு கேரட்
2 பச்சை மிளகாய்
ஒரு சிறிய அளவிலான இஞ்சி துண்டு
கால் கப் நிலக்கடலை பருப்பு
3 டீஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் கடலை பருப்பு
1 கப் தண்ணீர்
4 டீஸ்பூன் எலுமிச்சைபழச்சாறு
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
ஒரு கொத்து கொத்தமல்லி இலை
ஒரு கொத்து கறிவேப்பிலை
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றில் சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியற்றை சேர்த்து நன்கு வதக்கி விடவும். இந்த வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் நறுக்கிய கேரட், வேகா வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்து இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு இதில் எடுத்து வைத்திருக்கும் பொரியை சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலக்கி விட வேண்டும். பின்னர் இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை வேக விடவும். வெந்த பின்னர் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சபழச்சாறு சேர்த்து கலந்து விடவும். இப்பொழுது சுலபமான சுவையான பொரி உப்மா தயார். இதனை காலை உணவாக ஏதேனும் சட்னி வைத்து சாப்பிடலாம். இது போன்ற புது விதமான உணவுகளை தயார் செய்து தரும் போது வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

டாபிக்ஸ்