இட்லிக்கு இனி சாம்பார் தேவையில்லை! இந்த குருமாவே போதும்! சட்டுனு செய்யலாம்!
எளிமையாக இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் சாப்பிடும் வகையில் ஒரு குருமா செய்யலாம். இதற்கென தனியே காய்கறிகள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் தக்காளி மற்றும் வெங்காயம் மட்டுமே போதும். இந்த குருமா செய்யும் எளிய முறையை இங்கு காண்போம்.
தினமும் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு சாம்பார் அல்லது சட்னி செய்வதே பெரும் வேலையாக இருக்கும். சில சமயங்களில் காலை வேகமாக எழ வில்லை என்றால் சாம்பார் செய்வது கடினமாக இருக்கும். எளிமையாக இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் சாப்பிடும் வகையில் ஒரு குருமா செய்யலாம். இதற்கென தனியே காய்கறிகள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் தக்காளி மற்றும் வெங்காயம் மட்டுமே போதும். இந்த குருமா செய்யும் எளிய முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
2 பெரிய வெங்காயம்
3 தக்காளி
ஒரு தேங்காய்
சிறிதளவு கசகசா
4 முந்திரி பருப்பு
கொத்தமல்லி தழை
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் மல்லித் தூள்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
சிறிதளவு கடுகு
2 பட்டை
4 ஏலக்காய்
5 கிராம்பு
2 பச்சை மிளகாய்
அரை டீஸ்பூன் சோம்பு
சிறிதளவு கறிவேப்பிலை
ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
செய்முறை
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கடுகு சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும். நன்கு பொரிந்ததும் ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டையை மேலே கூறிய அளவிற்கு அதில் போட வேண்டும். பின்னர் அரை டீஸ்பூன் சோம்பு போட்டு வதக்கவும். மேலும் 2 பச்சை மிளகாயை கீறி போட வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டை நன்கு அரைத்து அதில் போட வேண்டும். சிறிது கறிவேப்பிலை போட வேண்டும். மேலும் இந்த எண்ணெயில் இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி போட வேண்டும். இந்த வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
கண்ணாடி பதத்திற்கு வந்த பின் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடியை வைத்து மூடி வைக்க வேண்டும். 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விட வேண்டும். இந்த சமயத்தில் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், கசகசா, அரை டீஸ்பூன் சோம்பு, 4 முந்திரி பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்த வெங்காயம், தக்காளி நன்கு வெந்ததும், அதில் அரைத்த தேங்காய் பேஸ்டை ஊற்ற வேண்டும். நன்கு கலந்து விட வேண்டும். மேலும் தண்ணீர் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு போட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் மிதமான சூட்டில் வேகா வைக்க வேண்டும். நன்கு வெந்த பின்னர் அதில் நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கி சாப்பிடலாம். சுவையான மற்றும் குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய குருமா தயார். இதனை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிக்கும் தொட்டு சாப்பிடலாம். இதில் வேக வைத்த முட்டையை போட்டு சூடாக்கி சாப்பிட்டால் முட்டை குருமாவாகவும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்