Pongal Recipe: பொங்கல் வந்தாச்சு! வித்தியாசமா பொங்கல் செய்வோமா? கல் கண்டு பொங்கல் செய்யுங்க!
Pongal Recipe:இந்த வருடம் வித்தியாசமாக கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். சுவையான கல்கண்டு பொங்கலை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.

தமிழர் திருநாள் தைத் திருநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று தைப்பொங்கல், நாளை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் கானும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு, திருவிழா, சிறப்பு போட்டிகள் என வரிசை கட்டி நிற்கும் கொண்டாட்டங்கள் நிற்கும். ஆனால் பொங்கல் பண்டிகையில் தவறாமல் இடம்பிடிப்பது பொங்கல் தான். தித்திக்கும் பொங்கல் சாப்பிடாமல் இருந்தால் அது பொங்கல் பண்டிகை என எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு பொங்கல் முதல் இடத்தை பிடிக்கிறது. தைப்பொங்கல் என்றாலே சர்க்கரைப் பொங்கல் தான் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் வித்தியாசமாக கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். சுவையான கல்கண்டு பொங்கலை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.
தேவையான பொருள்கள்
2 டம்ளர் பச்சரிசி
அரை டம்ளர் பாசிபருப்பு
2 டம்ளர் கல்கண்டு
ஒரு லிட்டர் பால்
அரை கப் நெய்
10 ஏலக்காய்
15 முதல் 20 முந்திரி பருப்பு
15 முதல் 20 உலர் திராட்சை
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசியை 30 நிமிடங்கள் மட்டும் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக நேரம் ஊற வைக்க கூடாது. பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து பாசிப்பருப்பை போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி சூடாக்கி அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கல்கண்டை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொங்கல் பானை அல்லது அடி கனமான பாத்திரத்தில் பாலுடன் தண்ணீர் கலந்து காய்ச்சவும். பால் கொதிவரும் போது பாசிப்பருப்பு சேர்த்து பிறகு ஊறவைத்த பச்சரியை சேர்க்க வேண்டும்.
பச்சரியை நன்றாக குழையும் வரை வேகவைக்கவும். இதன் நடுவில் நெய் சேர்த்துக் கொண்டே இருக்கவும். மேலும் இது அடிபிடிக்காமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். பின்னர் பொடித்த கற்கண்டை சிறிது சிறிதாக சேர்க்கவும். இடையிடையே நெய் சேர்த்து வரவும். கல்கண்டு நன்றாக சாதத்துடன் குழைந்து சேரும் பொது இறக்கி வைக்கவும். நெய் முழுவதும் விட்டு விடவும். பின்னர் இறக்கி சூடாக பரிமாறவும். சுவையான கற்கண்டு பொங்கல் தயார். பொங்கல் அன்று சாப்பிடப்படும் கரும்பின் மற்றொரு வடிவம் தான் கல்கண்டு. கரும்பில் இருந்தே கல்கண்டு தயாரிக்கப்படுகிறது. நாம் தினமும் சாப்பிடும் சர்க்கரையை விட கல்கண்டு மிகவும் சிறப்பான ஒரு இனிப்பு உணவாகும். மேலும் தித்திக்கும் சுவையை கொடுக்கும் இந்த கற்கண்டு பொங்கலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசித்து உண்பார்கள். நீங்களும் உங்களது வீட்டில் செய்து பார்த்து மகிழுங்கள். தமிழர் திருநாள் நன்னாளாக இருக்க இந்த பொங்கலும் உதவி செய்யும்.

டாபிக்ஸ்