இனி வீட்டிலேயே செஞ்சு அசத்தலாம் தாபா ஸ்டைல் முட்டை கீமா! இங்கே இருக்கு அசத்தலான ரெசிபி!
தாபா கடைகள் தற்போது பல இடங்களில் வந்து விட்டது. பலர் இதன் சுவையை அதிகம் விரும்புகின்றனர். அதிலும் இங்கு செய்யப்படும் உணவுகள் பல நாம் வழக்கமாக வீடுகளில் செய்யப்படும் உணவுகளின் சுவையை கொண்டுள்ளன. தாபாவில் விற்கப்படும் பிரபலமான உணவுகளில் முட்டை கீமா முக்கியமானது.

தற்போது தமிழ்நாட்டிலும் வட நாட்டு ஸ்டைல் உணவகங்கள் பெருகி விட்டது. அதில் தாபாக்களும் அடங்கும். பொதுவாக தாபாக்கள் நெடுஞ்சாலைகளில் இருந்து வந்தன. ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் தாபாக்கள் உள்ளன. அங்கு பல விதமான உணவுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் சுவை காரணமாக பலரும் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்று தாபா ஸ்டைல் முட்டை கீமா செய்வது எப்படி என பாரகப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
6 முட்டை
2 பெரிய வெங்காயம்
3 தக்காளி
1 கப் பச்சை பட்டாணி
1 பச்சை மிளகாய்
3 பல் பூண்டு
1 துண்டு இஞ்சி
2 டீஸ்பூன் சீரகம்
1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
2 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
1 பிரியாணி இலை
1 நட்சத்திர பூ
2 ஏலக்காய்
2 கிராம்பு
1 துண்டு பட்டை
சிறிதளவு கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் முட்டையை வேக வைத்து கூடை உரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த முட்டைகளை கேரட் துருவியின் மூலம் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு நறுக்கிய வைத்திருக்கும் தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு அதை நன்கு பேஸ்ட்டாக அரைத்து வைக்கவும். அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் நட்சத்திர பூ, ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, மற்றும் சீரகத்தை போட்டு வறுக்கவும். வறுபட்டதும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி, கறிவேப்பிலை, மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். இப்பொழுது அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுத்து இதில் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு வேக விடவும். பிறகு அதில் துருவி வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து பக்குவமாக கிளறி விட்டு கொத்தமல்லியை மேலே தூவி இறக்கவும். இப்பொழுது சூடான மற்றும் சுவையான தாபா ஸ்டைல் முட்டை கீமா தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

டாபிக்ஸ்