இப்படி செஞ்சு பாருங்க! அரிசி மாவு தட்டை செய்யும் எளிய முறை! ஈஸியான ரெசிபி இதோ!
தீபாவளி, பொங்கல் தவிர மற்ற விழாக்களிலும் சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் தட்டை. அரிசி மாவை வைத்து செய்யப்படும் இந்த தட்டை ஒரு சிறந்த சிற்றுண்டியாகவும் இருந்து வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் கொண்டாட்டம் என்றாலே அது ஒரு உணவின் வாயிலாகத் தான் நடக்கும். அந்த அளவிற்கு இந்தியர்கள் மனதில் உணவுகள் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலும் பல பண்டிகைகளின் போது பல விதமான உணவுகள் செய்யப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் தவிர மற்ற விழாக்களிலும் சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் தட்டை. அரிசி மாவை வைத்து செய்யப்படும் இந்த தட்டை ஒரு சிறந்த சிற்றுண்டியாகவும் இருந்து வருகிறது. இதனை மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். இந்த தட்டையை மொறு மொறுப்பாக செய்யும் எளிய முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் அரிசி மாவு
கால் கப் கடலை பருப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
100 கிராம் வெண்ணெய்
தேவையான அளவு எண்ணெய்
1 துண்டு நறுக்கிய இஞ்சி
3 பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் உப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டீஸ்பூன் பெருங்காய தூள்
2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
1 டீஸ்பூன் சீரகம்
2 டீஸ்பூன் எள்
செய்முறை
முதலில் ஒரு மிக்சி ஜாரில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். இதில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்த கடலை பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் முன்னதாக அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்துக் கொள்ளவும். மேலும் அதில் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரகம், எள், பெருங்காய தூள் மற்றும் உப்பில்லாத வெண்ணெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு கரண்டி வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
இந்த கலவையில் சூடான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். இதனை நன்றாக கலக்கி விட்டு அப்படியே சில நிமிடங்கள் ஊற விட வேண்டும். இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அரை லிட்டர் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும், ஒரு வாழை இலையை எடுத்து அதில் சிறிது எண்ணெய் தடவி, மாவை சிறிய உருண்டையாக உருட்டி அதன் மேல் வைக்க வேண்டும். தண்ணீரில் கையை ஈரப்படுத்தி மெதுவாக அதை எல்லா பக்கமும் சமமாக அழுத்தி விட வேண்டும். இப்பொழுது இதனை கொதிக்கும் சூடான எண்ணெயில் அப்படியே போட வேண்டும். இதன் எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். எல்லா பக்கமும் வெந்த பின்னர் இதனை எடுத்து எண்ணெய் வடியும் வரை விட வேண்டும். பின்னர் சுவையான மொறு மொறு தட்டை தயார். அவை அனைத்தும் முழுவதுமாக குளிர்ந்தவுடன், காற்று புகாத டப்பாவில் 4-5 நாட்களுக்கு வைத்து பரிமாறவும். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்