பல வித ஆரோக்கிய நன்மை தரும் வாழைத்தண்டு! எளிமையான முறையில் சூப் செய்வது எப்படி? இங்கே சூப்பர் ரெசிபி!
வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் பல விதமான ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனை பொரியல் செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் வாழைத்தண்டினை வைத்து சுவையான சூப் செய்யலாம். செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

வாழைத்தண்டு என்பது வாழை மரத்தின் மையத்தில் உள்ள தண்டுப்பகுதி ஆகும். இது ஒரு காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது பல மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. இதனை வைத்து பொரியல், ரசம் என பல வகையான உணவுகள் செய்ய முடியும். சில ஆயுர்வேத மருத்துவத்திலும் இதன் நன்மைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால் இதன் சுவையை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதற்கு அனைவரும் விரும்புமாறு சுவையான ஒரு உணவாக அவர்களுக்கு தயாரித்து கொடுக்க வேண்டும். இதற்கு சிறந்த ஒரு தேர்வு தான் வாழைத்தண்டு சூப், இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் நறுக்கிய வாழைத்தண்டு
3 பெரிய வெங்காயம்
ஒரு பெரிய தக்காளி
ஒரு வற மிளகாய்
1 கைப்பிடி கொத்தமல்லி இலை
1 கொத்து கறிவேப்பிலை
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
அரை டீஸ்பூன் மிளகு
அரை டீஸ்பூன் சீரகம்
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டேபிள்ஸ்பூன் மல்லித் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் மல்லி விதை , சீரகம், மிளகு ஆகிய மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, வற மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து மைய அரைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பை குறைத்து கொதிக்க விடவும். பாதி வெந்ததும் பொடி செய்த தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இப்பொழுது இந்த சூப்பினை குடித்தால் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
வாழைத்தண்டின் பயன்கள்
வாழைத்தண்டை சமைத்து சாப்பிடலாம். பொரியல், கூட்டு, சூப், துவையல், குழம்பு என பலவற்றுக்கு பயன்படுத்தலாம். வாழைத்தண்டு சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். சிறுநீரக பாதை தொற்று ஏற்பட்டால், வாழைத்தண்டு சாப்பிடுவது வலியை குறைக்க உதவும்.
வாழைத்தண்டில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். வாழைத்தண்டில் உயிர்ச்சத்து பி6 அதிகம் உள்ளது, இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.

டாபிக்ஸ்