Homemade Coconut Bun: பேக்கரிக்கு எதுக்கு போகணும்? வீட்டிலேயே அசத்தலா செய்யலாம் தேங்காய் பன்! இதோ சூப்பரான ரெசிபி!
Homemade Coconut Bun: பேக்கரியில் இருக்கும் தேங்காய் பன் அனைவருக்கும் பிடித்த ஒரு பண்டமாகும். பேக்கரிகளில் விற்பனையாகும் பிரதான பொருளாக இருக்கும் தேங்காய் பன் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேக்கரிக்கு செல்வதை விரும்புவார்கள். பேக்கரிகளில் விற்பனையாகும் வித விதமான பண்டங்களை சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். இனிப்பு வகைகள், கார வகைகள் என அனைத்திலும் பல வகைகள் இருக்கும். அதிலும் இனிப்பு வகைகள் என்றால் அதிகமாக விற்பனையாகும். ஆனால் சில பேக்கரிகளில் செய்யப்படும் உணவுகள் சுத்தமான முறையில் செய்யப்படாமல் இருக்கலாம். இதனை தவிர்க்க வீட்டிலேயே இந்த பண்டங்களை செய்யலாம். ஆனால் நம்மில் சிலருக்கு இந்த பண்டங்களை செய்யத் தெரியாது. அப்படி பேக்கரியில் இருக்கும் தேங்காய் பன் அனைவருக்கும் பிடித்த ஒரு பண்டமாகும். பேக்கரிகளில் விற்பனையாகும் பிரதான பொருளாக இருக்கும் தேங்காய் பன் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் மைதா மாவு
அரை கப் வெதுவெதுப்பான தண்ணீர்
1 டீஸ்பூன் சர்க்கரை
ஒரு சிட்டிகை உப்பு
1 டீஸ்பூன் ஈஸ்ட்
2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
4 டீஸ்பூன் டூட்டி ப்ரூட்டி
5 அல்லது 6 செர்ரி பழங்கள்
1 டீஸ்பூன் நெய்
4 டீஸ்பூன் பவுடர் சர்க்கரை
2 டேபிள்ஸ்பூன் பால்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்ற வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை, ஈஸ்ட் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மூடி அப்படியே வைக்கவும். பின்னர் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி வந்ததும் அதில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, 2 டீஸ்பூன் வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதில் பால் சேர்த்து பிசையலாம். பிறகு இதன் மேல் லேசாக எண்ணெய் தடவி மூடி போட்டு 1 மணி நேரம் அப்படியே வைக்கவும். மாவு உப்பி வந்து விடும்.பின்னர் இதை சப்பாத்தி கட்டையில் வைத்து கையில் எண்ணெய் தடவி நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளவும்.இதை சமமாக கட் செய்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் தேங்காய் துருவல், சர்க்கரை பவுடர், டூட்டி ப்ரூட்டி, நறுக்கிய செர்ரி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு ஒரு உருண்டை எடுத்து கட்டையில் வைத்து லேசாக தேய்த்து அதன் நடுவில் இந்த தேங்காய் கலவையை வைத்து மூடி உருண்டையாக உருட்டி கொள்ளவும். பிறகு வெண்ணெய் தடவிய தட்டில் இந்த உருண்டைகளை சிறிதளவு இடைவெளி விட்டு வைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.கடாயில் ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 10 நிமிடம் ப்ரீஹுட் செய்யவும்.இந்த உருண்டை மேல் லேசாக பால் தொட்டு ப்ரஷ் செய்யவும். பிறகு கடாயில் வைத்து மூடி வைத்து 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். பின்னர் பன் சூடு ஆறியதும் அதன் மேல் வெண்ணெய் தொட்டு லேசாக ப்ரஷ் செய்து கொள்ளவும்.சூப்பரான தேங்காய் பன் தயார்.

டாபிக்ஸ்