Arisi Mavu Vadai: 'நாக்கு நம நமன்னு இருக்கா..?': வாங்க அரிசி மாவில் சட்டுன்னு வடை செய்து சாப்பிடலாம்!
Arisi Mavu Vadai: அரிசி மாவில் வடையை எப்படி எளிதாக செய்து சாப்பிடலாம் என்பது குறித்து அறிவோம்.
Arisi Mavu Vadai: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலில் இருந்து தப்பும் வகையில்,தற்போதைய மழை பூமிக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இந்த மழையினை நமக்குப் பிடித்த அரிசி மாவு வடையுடன் ருசித்து மகிழலாம். அதை எவ்வாறு எளிமையாக செய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப்;
இஞ்சி – சிறிதளவு;
சீரகம் – 1 ஸ்பூன்;
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது;
மிளகு – 1 டீஸ்பூன்;
உப்பு – தேவையான அளவு;
பெருங்காயத்தூள் – சிறிதளவு;
பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது;
மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு;
கடலை எண்ணெய் - 250 மி.லி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு எடுத்துக்கொண்டு, அதே அளவு நீர், அதே கப் அளவு புளிக்காத தயிரும் ஊற்றி, நன்றாக கட்டியில்லாது பிசைந்துகொள்ள வேண்டும். பின் தோல் சீவி நறுக்கிய இஞ்சி மற்றும் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு 1 டீஸ்பூன், சிறிது பெருங்காயத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
பின் அதனை வாணலியில் மாற்றி, வாணலி சூடானதும், அடுப்பை குறைவாக எரியவிட்டு, மாவு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
அரிசி மாவு என்பதால் சீக்கிரம் குழையும். விரைவில் அடி பிடிக்கும். எனவே, அடிக்கடி கிளறுவது அவசியம். மாவு பால்கோவா போல பதம் வரவேண்டும்.
இதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, மல்லித்தழைகள் கொஞ்சம் போட்டு, நன்கு கிளறிக்கொள்ளவும். பின், கொஞ்சம் சூடு ஆறியபின், அந்த அரிசி மாவு மற்றும் இதரப் பொருட்கள் கலந்த கலவையை, ஒட்டாத பதம் வந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும்.
வாணலியில் வடைபொரிக்கத் தேவையான அளவு கடலை எண்ணெய் சேர்த்து, அடுப்பை மிதமாக எரியவிட்டு கிளறிய வடை மாவை, ஓரளவு சூட்டில், கைகளால் நன்கு மென்மையாக ஒருமுறை பிசைந்து விட்டு, அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து, உருட்டி வடையாகத் தட்டி நடுவில், துளையிட்டு, எண்ணெயில் சேர்த்து, சீராகப் பொரித்து எடுக்க வேண்டும்.
3 அல்லது 4 வடைகளாக ஒரே நேரத்தில் போட்டு பொரிப்பது சிறந்தது. வடை நல்ல கோல்டன் பிரவுன் நிறத்தில் வந்ததும் எடுத்து எண்ணெய் வடிகட்டியில் வடித்து வடையை மேலே எடுத்துக்கொள்ளவும்.
இதுவழக்கமான மெதுவடையைவிட கிரிஸ்பியாக இருக்கும். ருசியும் தனித்து தெரியும். சட்னி, சாம்பார், சாஸ் போன்ற சைட்டிஷ் வைத்து சாப்பிடலாம்.
அரிசி மாவில் இருக்கும் நன்மைகள்:
அரிசி மாவில் புரதம், மாவுச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால், அரிசி மாவு நிறைந்த உணவினை உண்ணும்போது வயிறு நிறைந்த உணர்வினைத் தரும். அரிசி மாவில் கால்சியம், ஜிங்க், நார்ச்சத்து ஆகியவை உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்